news-details
ஞாயிறு தோழன்
தூய ஆவியார் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) (08-06-2025) திப 2:1-11; உரோ 8:8-17; யோவா 14:15-16;23-26

திருப்பலி முன்னுரை:

இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழா ஆவியானவரின் வழிநடத்துதலில் நாளும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறதுநம்மீது கொண்ட அளவற்ற அன்பால் கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, இவ்வுலகிற்கு வந்து தம் இன்னுயிரை நமக்காக அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அன்பின் நீட்சியாக நமக்குத் துணையாளராக இருக்க தூய ஆவியாரை நமக்கு அருளினார். திரு அவையில் தூய ஆவியானவர் புதுப்பிப்பவராகவும் உயிர் அளிப்பவராகவும் திடப்படுத்துபவராகவும் உண்மையின் குரலாகவும் செயல்படுகின்றார். தூய ஆவியார் அநீதிகளை எதிர்ப்பவர்; உள்ளத்திற்கு அமைதியைக் கொடுப்பவர்; நல்லவற்றைச் செய்வதற்கு நம்மைத் தூண்டுபவர். அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பவர். இத்தகு சிறப்புமிக்க தூய ஆவியாரை நாம் அருளடையாளங்களின் வழியாகப் பெற்றிருக்கின்றோம். இன்றைய இறைவாக்கினர்களாகிய நாமும் தூய ஆவியைப் பெற்று இறைப்பணியையும் மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்திட வரம் கேட்போம். தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, நற்பண்பு, நம்பிக்கை, சாந்தம், நன்னெறி போன்றவை நம்மையும், நம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் நிரப்பிட செபிப்போம். தூய ஆவியார் நமது உள்ளத்திற்கும் உறவுகளுக்கும் அமைதியை நல்கிட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சீடர்கள் வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறார்கள். அனைத்து மொழிகளையும் பேசும் திறனையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆவியின் ஏவுதலால் அனைத்து மக்களுக்கும் இறைவனின் அருஞ்செயல்களை எடுத்துரைக்கிறார்கள். தூய ஆவியைப் பெற்றுள்ள நம்மையும் துணிவுடன் இயேசுவை அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ப வாழாமல், கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்குக் கற்றுத்தருகின்றார்அச்சம் நீங்கி ஆண்டவரின் பணியைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் தருகின்றார். நம் உள்ளத்து உணர்வுகளையும் சிந்தனைகளையும் அறிந்து நம்மைச் சரியான வழியில் நடத்துகின்றார். எனவே, ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. தூய ஆவியை எமக்கு வழங்கிய ஆண்டவரே! தூய ஆவியின் துணையால் எம் திரு அவைக்குக் கிடைத்த திருத்தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். தொலைநோக்குப் பார்வையுடன் திரு அவையை வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் நல்ல சுகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. தூய ஆவியாரின் வழியாக உடனிருப்பை எமக்கு வழங்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் துடிப்போடு நற்செய்தியை அறிவிக்கவும், தூய ஆவியாரின் குரலாகிய எமது மனச்சான்றிற்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. தூய ஆவியின் வழியாக எமக்கு நம்பிக்கையை வழங்கும் ஆண்டவரே! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் ஆவியின் வரங்களையும் கொடைகளையும் பெற்று விவேகத்துடன் வாழவும், உலகப் போக்கினை விடுத்து ஆவியால் ஆட்கொள்ளப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் ஆண்டவரே! போரினால் அமைதி இழந்து தவிக்கும்  அனைத்து நாடுகளையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். போர், பகை இவையெல்லாம் அழிந்து நாடுகள் அமைதியில் திளைத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.