news-details
சிறப்புக்கட்டுரை
திராவிடமும் vs இந்துதேசியமும்!

இந்திய இந்துத்துவர்கள் பேசும் தேசியம், ‘இந்து தேசியம்என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் இந்து தேசியமே இவர்களின் இந்திய தேசியம்! இவர்கள் வலிந்து பேசும் தேசியம் எல்லாரையும் உள்ளடக்கிய தேசியமாக இருக்க முடியாது. இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர் ஆட்சியின்போது அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட (integrated) ஒன்று என்பதும், இந்நாடு கலாச்சார ரீதியாகப் பன்முகத் தன்மையுடையது என்பதும் உண்மையாயிருக்க, ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையிலான தேசியம், உள்ளடங்கிய தேசியமாக இருத்தல் எப்படிச் சாத்தியம்?

உண்மையான தேசிய உணர்வு எல்லைகளைக் கடந்த ஒன்று. இந்துத்துவர் பேசும்இந்து தேசியம்அல்லது கலாச்சாரத் தேசியம் அப்படியல்ல. பெரும்பான்மை மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, சிறுபான்மையினர் மத அடையாளங்கள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்படலால், இத்தேசியம் மக்களை உள்ளடக்குவது அல்லஇத்தேசியம் சமூகத்தின் ஒருசாராரை ஒதுக்குவது. ‘ஒற்றுமைஎன்னும் பெயரில், ‘உள்ளடக்குவதுஎன்னும் பெயரில் பிரிவினையை வளர்க்கும் இவர்களின் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒற்றுமைஎன்ற கோஷத்தை மக்கள் முன்பு வைக்கும் இந்துத் தேசியர்களின் உள்நோக்கம் ஒற்றுமையல்ல, பிரிவினையே! கடந்த ஆண்டு நடந்து முடிந்த மராட்டிய மாநிலத்திற்கான தேர்தல் பாரதிய சனதா கட்சி எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டபோது, இவ்வெற்றிக்கான காரணத்தைப் பாரதிய சனதாவினர் கூறியதை ஊடகவழி அறிந்தபோது வியப்பளித்தது. ‘இந்தியாகூட்டணியின் இந்து மதம் பற்றிய பொய்யான பிரிவினை பற்றிய பிரச்சினைதான் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் மீது அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அது என்ன பிரிவினை பற்றிய பிரச்சினை?

இந்து மதம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போர் எப்போதுமே இந்து மதம் பேசும் சாதியத்தை எதிர்ப்பதில்லை. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பிளவைத் தர்மமாகக் கருதும் இவர்கள், சாதி உருவாக்கிய ஏற்றத்தாழ்வைச் சமூகநீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிவர்த்திக்க முயன்ற அரசமைப்பையும் இந்துத்துவ அரசியலார் ஏற்றதில்லை. மண்டல் குழு பரிந்துரையைப் பெரிய அளவில் எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இவர்கள். சாதிய ஏற்றத்தாழ்வையும், சாதியப் பாகுபாட்டையும் கடுமையாக எதிர்த்த அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும், பிற சாதி ஒழிப்புப் போராளிகளையும் பிரிவினைவாதிகளாகவே இவர்கள் கருதினர்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கோரிக்கையைஇந்துகளைப் பிளவுபடுத்த முன்னெடுக்கப்பட்ட சதிஎன்கிற பிரச்சாரம் மக்களிடம் சரியாகச் சென்றதால், ‘இந்துகளின் ஒற்றுமையைக் குலைத்தோர்க்கு மக்கள் தோல்வியைக் கொடுத்தனர்என்றனர் சனாதனிகள். அதாவது, உண்மையாகவே பிளவுபடுத்தும் சாதிய ஏற்றத்தாழ்வைச் சமன் செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை இவர்கள் பார்வையில் பிரிவினை! சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இவர்கள் பார்வையில் பிரிவினை! ஆனால், சாதியப் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாட்டினையும் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஒற்றுமை (unity). பிரிவினை, ஒற்றுமை எனும் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் தேவைக்கேற்ப, நம் வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளும் வினோதப்போக்கினை இவர்களின் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்போர் அறியலாம்.

திராவிடமும் பிரிவினையும்

அண்மையில் நடிகர் கமல்ஹாசனின்தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததுஎன்று பேசிய பேச்சொன்று பெரும் சர்ச்சையானது. கன்னட நடிகர் திரு. சிவராஜ்குமார் முன்னிலையில், கமல் அவர்கள் எந்தவித உள்நோக்கமுமின்றி வெளியிட்ட இக் கருத்தைக் கன்னட மொழிக்கெதிரான மிகப்பெரிய அவமதிப்பான கருத்தாக எடுத்துக்கொண்டு வேகமாக எதிர்வினையாற்றினர். கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, ‘கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாதுஎன்றார். தமிழிலிருந்து கன்னடம் பிறந்ததாகக் கூறிய கமலின் திரைப்படம், கர்நாடகாவில் திரையிடப்படவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றமும் கமல்ஹாசனை மன்னிப்புக் கோரக் கேட்டுக்கொண்டது. இவர்களுக்கெல்லாம் மேலாக, கர்நாடகத்தின் பா... தலைவர்கள் கமலின் இக்கருத்துக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். இந்தியப் பண்பின்ஒருமைபற்றி எப்போதும் பேசும் பாரதிய சனதா, கன்னடத்தை அவமதித்ததாக ஏன் பேசவேண்டும்?

இந்தியக் கலாச்சாரம் தனித்த பண்புடையது; இப்பண்புகள் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்திய மொழிகள் வெவ்வேறு வகையாகப் பேசப்பட்டாலும், இம்மொழிகள் அடிப்படையில் ஒன்றுஎன்பார் கோல்வால்கர். அனைத்து மொழிகளுக்கும் அடிப்படை ஒற்றுமைக்கூறுகள் உள்ளன என்று கூறும் இந்தஒற்றைக் கலாச்சாரக் காவலர்கள்கமல் அவர்களின் மொழி பற்றிய கூற்றுக்கு ஏன் கடுமையான எதிர்வினை ஆற்றவேண்டும்? இந்த ஒரு மொழி, ஒரு கலாச்சாரக் காவலர்கள் கமல் கருத்தை மதித்திருக்க அல்லவா வேண்டும்!

மொழியால் பிரிவினை பேசுவோர்என்று நாளும் நம்மீது பழிதூற்றும் மதவாதிகள், கன்னட மொழியை இகழ்ந்ததாகக் கன்னட மொழிவெறியர்களோடு அணிசேர்ந்து கூச்சல் போடுவது போலித்தனமில்லையா? இரு மாநில மொழிகளுக்கிடையே எழும் முரண்கள் அல்லது மோதல்கள்ஒரே தேசம்எனும் கருத்தியலுக்கு முரண் சேர்ப்பது என்ற கருத்தை மறந்துவிட்டார்களா? இக்கூச்சல் இவர்கள் முன்வைக்கும் இந்திய ஒருமைக்கு, ஒற்றுமைக்கு எதிரானது அல்லவா?

இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய்மொழிஎன்றும், இம்மொழி தேவபாஷை என்றும் கூறி வந்த வடவர்க்கு, கால்டுவெல் கண்ட திராவிடம், திராவிட மொழிகளின் தனித்த பண்பு, திராவிட மொழிகளுள் சீரிளமை குன்றாமல் தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு உண்டு என்று வரையறுத்ததால், கால்டுவெல் இன்றைய இந்துத்துவக் கருத்தியலாளர்க்குப் பிரிவினைவாதியாகக் கருதப்பட்டார். கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல்லின் அறிவுப் பார்வையின் விளைவு. அன்றைய கோல்வால்கரிலிருந்து இன்றைய ஆர்.என். இரவி வரை திராவிடத்தைக் கண்ட கால்டுவெல் பிரிவினைவாதி. ஆரியம் வேறு, திராவிடம் வேறு. இரண்டும் வெவ்வேறு மொழிக்குடும்பங்கள். தனது நீண்ட நெடிய ஆய்வில் இதைக் கண்ட கால்டுவெல் பிரிவினை வாதியாகச் சித்தரிக்கப்படுகிறார். ‘ஒருமைபேசும் இந்துத்துவர்கள், கால்டுவெல் பேசும் உண்மையைப்பிரிவினைஎன்கின்றனர். தமிழ், கன்னடம் எனும் குடும்ப மொழிகளின் தொடர்பை மகிழ்வோடு பேசும்போது, பிரிவினைக் கோஷமிடுகின்றனர். தமிழின் பெருமையைவியந்து போற்றும்பிரதமர் மோடி, தமிழ்-கன்னட மொழிப் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை.

எல்லாருக்குமான நாடு, ‘எல்லாருக்குமான வளர்ச்சிஎன்று நாவளவில் பேசிக்கொண்டு, நாளும் நடத்தும் பகையரசியலில் மத ரீதியான ஓர்மை (Polarism) இருக்கிறதே தவிர, ஒற்றுமைக்கான அல்லது உள்ளடக்குதலுக்கான எந்த முயற்சியும் இல்லை. உத்தரப்பிரதேச முதல்வர் அம்மாநிலத் தேர்தலின்போதுஎண்பதுக்கும் - இருபதுக்குமான போட்டியில் வெல்லப்போவது யார்?’ என்று சவால் விட்டார். இச்சவாலில் இவர் யாரை ஓர்மைப்படுத்தினார்? யாரை ஒதுக்கிக்காட்டினார்?

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகப் பாகிஸ்தானைத் தொடர்ந்து காட்டிவரும் இந்திய அரசு, பாகிஸ்தான் என்ற நிலப்பரப்பையும், அதனை ஆள்வோரை மட்டுமே எதிரிகளாகக் காட்டுவதோடு, இந்தியாவில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட இசுலாமியர் எதிர்ப்பை உறுதிப்படுத்தத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம் என்பதையும் மறந்துவிடல் கூடாது. ஒரு பகை நாட்டைக் கட்டமைக்கும்போது, ஏற்கெனவே கட்டமைத்த பகைச்சமூகமே இங்கு முதன்மை பெறுதலை மறந்துவிடல் கூடாது.

அண்மையில் நடைபெற்றசிந்தூர்ஆப்ரேஷனின் உள்ளடக்கம், இந்துப் பெண்களின் திலகம் அழிக்கப்பட்டது எனக் காட்டுவதோடுஇசுலாமியரைக் குற்றவாளிகளாக்குவதே அவர்களின் உள்நோக்கம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மதப் பெரும்பான்மையினரை ஓர்மைப்படுத்துதல், மத ரீதியாக மக்களை ஒன்றுபடுத்துதல் என்பது நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். இந்த நோக்கம் எல்லா மதத்தினருக்கும் உகந்ததே. மத ரீதியாக அம் மதம் சார்ந்தோரை, அரசதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்காகச் செய்யப்படுமாயின் இதன் பெயர் ஒற்றுமை அல்ல. பெரும்பான்மை மதம் சார்ந்தோரை ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடுவது. இதைத்தான் மதவாத அரசியல் என்கிறோம்.