தமிழ்நாடு ஆயர் பேரவையின் சிறைப்பணியானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசிய தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.
எங்கள்
தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம், குறிப்பாக ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், கலை நிகழ்ச்சிகள், உள்மனக் குணமளிக்கும் தியானங்கள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள்... இவற்றின் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி வருகிறார்கள்.
வெளிநாட்டுச்
சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடிவருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு, நமது தாயாம் திரு அவையின் அந்த நாட்டுத் தூதர்கள், ஆயர்கள், குருக்களைத் தொடர்புகொண்டு அவர்களது குடும்பத்தாரோடு இணைத்துவைப்பது நமது சிறப்புப் பணியாகும்.
புனித
மாக்சிமில்லியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின் போது சிறைப்பிடிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருளடையாளம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார். இறுதியாக, ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத காரியத்தை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை, பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நமது வாழ்வு ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
தமிழ்நாட்டில்
9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச்சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளைச் சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில், சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி மற்றும் சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட சேவைகள்
சிறைப்பணித் தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகின்றன.
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார் உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை
கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு ‘எங்களுக்கு ஒருவருமில்லை’ என்ற
சிறைவாசிகளின் மன ஏக்கத்தை மாற்றும்
முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.
இறுதியாக,
இயேசுவின் விடுதலைப் பணியில் ‘சிறைப்பட்டோருக்கு விடுதலை’ எனும் முழக்கம் மையம் கொண்டிருந்ததுபோல, நாமும் சிறைக் கைதிகளின் குரலைக் கேட்போம்! அவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்வோம்!