news-details
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 24, 2025, ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 66:18-21; எபி 12:5-7,11-13; லூக் 13:22-30 - இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!

இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கியக் கூறு, ‘அவர் எவரையும் புறக்கணியாது, அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்துகொடுத்து மகிழ்பவர் எனப் புரிந்துகொள்ளலாம். மனிதர் மட்டுமல்லர், இந்த உலகம் முழுவதும் மீட்புப் பெறுவதையே கடவுள் விரும்புகிறார். ‘மீட்புப் பெறுவது என்பது இறைவன் தரும் கொடை. இந்தக் கொடை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மீட்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற வினாவுக்கு விடை தருகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் எசாயா நூலின் இறுதிப் பகுதியாகும். அழிந்துபோன தங்கள் எருசலேம் நகரையும், பறிக்கப்பட்ட தங்கள் அதிகாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முனைகின்றனர் இஸ்ரயேல் மக்கள். தங்கள் சமூகமே தனித்தன்மை வாய்ந்த சமூகம்; தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனக் கருதினர். தங்களுடைய தனித்தன்மையைத் தக்க வைக்கவும், தாங்கள் மட்டுமே கடவுளுக்குரியவர்கள் என்பதை நிலைநிறுத்தவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா.

கடவுள் இஸ்ரயேலுக்கு மட்டும் உரியவரல்லர்; பிற இனத்தாருக்கும் அவர் கடவுள். பிற இனத்தாரையும் தம்முடைய ஆலயத்திற்கு அவர் கூட்டி வருவார்; எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடவுள் அவருக்கென மக்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற கருத்தை இப்பகுதியில் பதிய வைக்கிறார் எசாயா. பிற இனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள் (எசா 66:18) என்கிறார் ஆண்டவர். மேலும், கடவுள் எல்லா மக்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார் என்ற செய்தி, “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்... என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் (56:7) எனும் கடவுளின் வார்த்தையில் விரிவடைகிறது. எனவே, ஆண்டவருடைய மீட்பு ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ, நாட்டினருக்கோ மட்டுமல்ல; மாறாக, எல்லா மக்களுக்கும் உரியது. எல்லா மக்களும், எந்த நிலையில் உள்ளவர்களும் ஆண்டவரின் உடன்படிக்கையை மதித்து, உடன்படிக்கை விதிகளைப் பின்பற்றி, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால், மீட்புக்கு உரியவர்கள் என்பதை எசாயா தெளிவாக எடுத்துரைக்கிறார்.

எருசலேமிலுள்ள தம் திருமலைக்கு அனைவரையும் இறைவன் அழைத்துவருவார் (66:20) என்று எசாயா கூறும் ஒன்றிப்பையும் தாண்டி, இயேசு இன்றைய நற்செய்தியில் “இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:30) என்கிறார். அதாவது, எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் மனம் மாறி இயேசு காட்டிய நெறியில் வாழ்வர் என்பதாகும். ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெறவேண்டும், மீட்புப் பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின் விருப்பம், இயேசுவின் விருப்பம். ஆயினும், யூதர் பலர் இயேசு காட்டிய நெறியை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் சமத்துவ விருப்பத்தை ஏற்றுக்கொள்வதில் யூதத் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் எத்துணை தயக்கம்!

இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, மீட்பையும் தங்கள் தனிப்பட்ட சொத்து என்று உரிமை கொண்டாட மதத்தலைவர்கள் நினைத்தனர். அவ்வாறே போதித்தும் வந்தனர். தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு மீட்கப்பட்ட குலம். அப்படியிருக்க, சமாரியர், வரி தண்டுவோர், பிற இனத்தார், பாவிகள் என்று பிறரோடு ஒரே மலையில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? என்ற கேள்வி யூத மதத் தலைவர்களிடத்தில் எழாமல் இல்லை. மக்கள் எல்லாரும் மீட்கப்படுவாரா?  அல்லது ‘எஞ்சியோர் (எசா 11:11-16; 60:1-22) எனப்படும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டும்தானா? எனும் கேள்வி இயேசுவின் காலத்தில் மக்களிடையே வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (லூக் 13:23) எனும் வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்கு இது ஒரு பயனற்ற கேள்வியாக இருந்தாலும், ‘ஒருவர் மீட்படைய என்ன செய்யவேண்டும்?’ என்ற முக்கியமான கேள்விக்கு இயேசு பதிலளிக்கிறார்.

மீட்புப் பெறுகிறவர் யார்? இனமோ, பிறப்போ, மொழியோ, மதமோ, நாடோ மீட்பைத் தீர்மானிக்க முடியாது. மீட்பு என்பது முற்றிலும் கடவுளின் ஒரு கொடை. அவர் எல்லாருக்கும் பொதுவான தந்தை. அவர் தரும் மீட்பு அனைவருக்கும் கொடுக்கப்படும் பரிசு. இந்தப் பரிசை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், அது குறுகலான, இடுக்கமான வாயில். வருந்திதான் உள்ளே நுழையமுடியும். ஆகவேதான், “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்; ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (13:24) என்ற பாடத்தைச் சவாலாக நம்முன் வைக்கிறார் இயேசு.

வாழ்க்கை ஒரு பயணம். இந்தப் பயணத்தைத் தொடர ஏராளமான வழிகள் நம் முன்னே உள்ளன. உலகம் ஒளியும்-இருளும், உண்மையும்-பொய்யும், நன்மையும்-தீமையும், வாழ்வும்-சாவும் சூழ்ந்தது. இவற்றுள் எதை, எப்படித் தேர்ந்து வழிநடப்பது என்பதே எல்லாருக்குமான ஒரு தேடல். எந்த வழியைத் தேர்கிறோம்? என்பதிலேதான் அடங்கியுள்ளது நம் வெற்றி-தோல்வி. இங்கே இடுக்கமான வாயில் என இயேசுவால் மொழியப்படுவது வெறுமனே நுழைவு வாயில் அன்று; மாறாக, அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொதுநலம், தியாகம், தன்னலம் துறப்பு, பொறுமை, பொறுப்பு, மன்னிப்பு, ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை எனும் மதிப்பீடுகளின் ஊடாகப் பயணிப்பதே. எங்கே ஒருவர் தன்னை வருத்திப் பொதுநலப் பணியில் இணைகின்றாரோ, அவர் வாழ்வின் பாதையில் பயணிக்கின்றார் என்பதே இயேசுவின் புரிதல். நம்மை ஒடுக்குவதால் பிறர் பெறும் வாழ்வே நம் நிலைவாழ்வின் தொடக்கம்; அதுவே, மீட்பின் பாதை.

சட்டங்களை உற்பத்தி செய்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தால் போதும்; மறைநூலைப் புள்ளி மாறாமல் விளக்கிப் போதித்தால் போதும்... விண்ணுலகம் சேர்ந்துவிடலாம் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தனர் யூத சமயத் தலைவர்கள். இறையாட்சி என்பது போதிப்பதிலும் புனைதலிலும் சட்டமியற்றுதலிலும் கண்காணிப்பதிலும் இல்லை அல்லது இயேசுவோடு உண்பதிலும் குடிப்பதிலும் இல்லை (லூக் 13:26). அது தியாகமிக்க, நேயம் நிறைந்த, இழக்கின்ற, வெறுமைப்படுத்துகின்ற வாழ்வில் புலர்வது. அது எவருக்கும் தீங்கு இழைக்காமல், அறிநெறி வாழ்வு வாழ்வது. அது அலங்கார ஆடம்பரங்களைக் கடந்த அர்த்தமுள்ள வாழ்வு. அதுவே இடுக்கமான வாயில். எனவே, மனமாற்றம், அறநெறி வாழ்வு எனும் இடுக்கமான வாயில் வழியாக நுழைவது நம் கையில்தான் உள்ளது.

இறையாட்சியின் வழி அவ்வளவு எளிதான தன்று. இறையாட்சிக்குள் நுழைய வேண்டுமென்றால், இயேசுவின் கோதுமைமணி உவமையை  (யோவா 12:24-25) மனம் சுமந்து அதனைப் போல் தங்களை இழக்கத் துணியவேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல, கிறித்தவர்கள் துன்பத்தைத் தொல்லையாகக் கருதக்கூடாது. ஆண்டவருடைய கண்டிப்பை வேண்டாம் என்று தள்ளிவிடக்கூடாது (12:5). சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையே இடுக்கமான வாயில் (மத் 16:24). நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே இடுக்கமான வாயில்!” (மூவேளைச் செபவுரை, 21-08-2022). 

எனவே, விண்ணக விருந்தில் பங்குகொள்ள நாம் வாழ்வில் திரட்டி வைத்திருக்கும் சில பெருமைகளைக் களையவேண்டும். பணம், பதவி, புகழ், செல் வாக்கு, அதிகாரம், ஆணவம், இறுமாப்பு, சுயநலம், பிரித்தாளும் சக்தி ஆகிய அனைத்தும் அழிவுக்குச் செல்லும் அகன்ற வழிகள். அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை ஆகியவை இடுக்கண் வழிகள். பாலைவனச் சோதனையில் அலகை காட்டிய அகன்ற  வழிப்பாதையை (பதவி, அதிகாரம், புகழ், வீண்பெருமை, செருக்கு) இயேசு தேர்வு செய்யவில்லை. அதற்கு நேரெதிரான இடுக்கமான வழியைத் (தாழ்ச்சி, ஏழ்மை, நிந்தை அவமானம், உண்மை, சமத்துவம்) தெரிந்துகொண்டார்.

இன்றைய நம் சமுதாயத்தில் அகன்ற பாதையில் பயணிக்க பலர் உள்ளனர். ஆனால், இடுக்கண் வழியைப் பெரும்பாலானோர் தேர்வு செய்வதில்லை. இடுக்கமான வாயில் வழியாகப் பயணிப்பதே மகிழ்வு, மீட்பு, நிறைவாழ்வு. “இருட்டில் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்கமுடியும். இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!