‘The Cure of Ars’ என்ற தலைப்பில் அமெரிக்கக் கத்தோலிக்க டி.வி. சேனல் EWTN தயாரித்து வெளியிட்டுள்ள புனித ஜான் மரிய வியான்னி குறித்த ஒன்றரை மணி நேர docudrama-வை அண்மையில் பார்த்து மகிழ்ந்தேன்.
வியான்னி புனிதராக்கப்பட்ட 100-வது ஆண்டு நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மே 31-அன்று வெளியாகி, தற்போது EWTN இணையதளத்தில் கிடைக்கும் இந்தப் படத்தை https://ondemand.ewtn.com/Home/Series/ondemand/video/en/the-cure-of-ars
என்ற இணைப்பில் இலவசமாகக் காணலாம்.
‘docudrama’ என்பது விவரிப்பு, காட்சிப்படுத்தல்கள் என இரண்டும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கலவை சினிமா விலங்கு. இந்தக் கதை கேத்தரின் என்ற ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் வியான்னியின் காலத்தில் ஆர்ஸ் நகரில் வாழ்ந்த அழகான, சற்று எதிர்மறை எண்ணம் கொண்ட கிறித்தவப் பெண். தொடக்கத்தில் அவருக்கு வியான்னியைப் பிடிக்கவில்லை. ‘ஏன் இந்த மனிதர் எப்போதும் மறையுரை மேடையில் நின்று திட்டிக்கொண்டே இருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு மிகுந்த தயக்கத்துடன் அவர் புதிய அருள்பணியாளரை அணுகுகிறார்.
வியான்னி பேசும்போது, கேத்தரின் பெரும்பாலும் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்பதாகக் காட்டுவது ஒரு நல்ல யுத்தி. “நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; நான் மாறமாட்டேன்” என்கிற உடல்மொழி. வியான்னியின் நகைச்சுவைக்கு ‘கெக்கேப்பிக்கே’ என்று சிரிக்கும் மற்ற பெண்களை அவர் முறைக்கிறார்.
ஒரு காட்சியில், கேத்தரினும் அவரது தோழியும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். வியான்னி அவர்களை அணுகி, “பெண்களுக்கு மிகவும் நலம் பயக்கும் மாதம் எது தெரியுமா?” என்று கேட்கிறார். அவர்கள், “தெரியவில்லை” என்கிறார்கள். வியான்னி “பிப்ரவரி மாதம்” என்கிறார்.
“ஏன்?”
“ஏனெனில், பிப்ரவரியில்தான் புறணி பேசுவதற்குக் குறைவான நாள்கள் உள்ளன” என்கிறார்.
மற்றொரு காட்சியில், ஒரு பெண்கள் குழுவை ஏற்படுத்தி, ஞாயிறு மாலையில் அவர்களுக்குப் புனிதர்கள் குறித்து வியான்னி வகுப்பு எடுக்கிறார். கேத்தரினும் அதில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாக, வெற்றுப் பார்வைப் பார்த்துக்கொண்டு.
வகுப்பின் துவக்கத்தில் வந்திருக்கும் எல்லாப் பெண்களுக்கும் நன்றி சொல்லும் வியான்னி, “கேத்தரினையும் அவர் தோழியையும் இந்த வகுப்பிற்கு வரச் சொன்னதன் காரணம் என்ன தெரியுமா?”
அவர்கள் தெரியாமல் விழிக்கிறார்கள். வியான்னி, “அப்படியாவது இந்தப் பையன்கள் கோவில் பக்கம் வருவார்கள் என்பதற்காகத்தான்” என்று கூற,… பெண்கள் மீண்டும் ‘கெக்கேப்பிக்கே!’
“சும்ம இருங்கடி; அவர்தான் கலாய்க்கிறார்னா, இவங்க வேற…” என்பதுபோல கேத்தரின் அவர்களைப் பார்ப்பார்.
ஆர்ஸ் நகரில் ஆண் குழந்தைகளுக்குப் பள்ளி இருந்தது. பெண்களுக்கு இல்லை. வியான்னி பெண்களுக்கு என்று பங்கில் ஒரு பள்ளி தொடங்கத் திட்டமிடும்போது கேத்தரினை அழைத்து, “நீ இந்தப் புதிய பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும்” என்று கேட்பார். கேத்தரினால் நம்ப முடியாது, “ஏன் நான்?”
“ஏனென்றால், நீ ஓர் இறைப் பற்றுள்ள பெண். அறிவாளியும் கூட. என் செலவிலேயே உனக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படும்.”
1824-இல் ‘La Providence’ என்ற பெயரில் பள்ளி செயல்படத் தொடங்குகிறது. நிறைய பெண்கள் உடனடியாகச் சேர்கிறார்கள். சுற்றுப்பட்ட கிராமங்களில் திரிந்துகொண்டிருந்த குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று வியான்னி வலியுறுத்த, பள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி என்றால் ஒன்றும் பிரமாதமான கட்டடம் கிடையாது. கீழே மாணவர்களுக்கு ஒரு பெரிய ஹால், மேலே ஆசிரியர்களுக்கு இரண்டு சிறிய அறைகள். ‘Chateau’ என்றால் பிரெஞ்சு மொழியில் பணக்காரர் வசிக்கும் அரண்மனை போன்ற வீடு. பள்ளி நிதி உதவி கேட்டு அவர் ‘from one
chateau to another chateau’ அலைந்ததாகப் படத்தின் விவரணம் சொல்கிறது.
ஒருநாள் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப் போதுமான மாவு இல்லை. பரணில் சேர்த்து வைத்திருந்த தானியங்கள் எல்லாம் காலி. கேத்தரின் வியான்னியிடம் வந்து கூறுகிறார். “சரி, நீங்கள் போய் இருக்கிற மாவைக்கொண்டு அப்பம் சுடுங்கள். நான் குழந்தைகளோடு இணைந்து இறைவேண்டல் செய்கிறேன்” என்று வியான்னி கூறுவார். மனச்சோர்வுடன் கேத்தரின் பள்ளி சமையலறைக்குத் திரும்பிச் செல்ல... என்ன ஆச்சரியம்! மாவு பெருகிக்கொண்டே போய், தேவைக்கும் அதிகமான அப்பங்கள் அன்று சுட முடிகிறது.
படத்தில் இடம்பெறும் மற்றொரு முக்கியப் பெண் கதாபாத்திரம் Mademoiselle
d’Ars என்ற சீமாட்டி. ஏராளமான ஆடைகளுடனும் எப்போதும் ஒரு பணியாளருடனும் நடக்கும் பெண்; செல்வந்தர்; சிறந்த நம்பிக்கையாளர். பல வருடங்கள் காலியாக இருந்த ஆர்ஸ் பங்கிற்கு வியான்னி அனுப்பப்பட, இந்தச் சீமாட்டி ஆயருக்குத் தொடர்ந்து எழுதிய கடிதங்களும் ஒரு காரணம். அருள்பணியாளரின் வீட்டைத் தூய்மைப்படுத்தி, அறைக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், படுக்கை, உணவு என எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, இளம் வியான்னியை ஒரு தாய்போல பார்த்துக்கொள்கிறார். ஆலயத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கூறி வியான்னி அவர் வீடு சென்று கேட்கும்போது, பாரிசிலிருக்கும் தன் சகோதரனிடம் கூறி ஒரு பெரிய தொகையை நன்கொடையாகப் பெற்றுத் தருகிறார். ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லி, ஓய்வெடுக்கச் சொல்லி அவ்வப்போது வியான்னியைக் கண்டிக்கிறார்.
ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு வராமல், வயலில் வேலை செய்யும் விவசாயிகளை வியான்னி மறையுரையில் கண்டிக்க, சீமாட்டி விவசாயிகள் சார்பாக நின்று வியான்னியிடம் விவாதிக்கிறார்: “விவசாயிகள் அப்பாவிகள். வானம் எப்போது என்ன செய்யும் என்று தெரியாத சூழலில், சிலசமயம் அவர்கள் ஞாயிறு கூட வேலைக்குச் செல்ல வேண்டி வரும். அதற்காக அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவர்கள் நமக்கு உணவு தருபவர்கள்?” என்கிறார்.
வியான்னி, “அவர்கள் ஆறு நாள்கள் வேலை செய்யட்டும் அம்மா. ஆனால், ஏழாம் நாள் கடவுளின் நாள். அன்று அவர்கள் திருப்பலிக்கு வரவேண்டும். பிறகு வீட்டிற்குச் சென்று, குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகளுடன் பேச வேண்டும். கால்களை உயர்த்திப் போட்டுச் சற்றுக் கண்ணயர வேண்டும். மாலை கதிரவன் சாய, ஆலய மணி அடிக்கும்போது, எல்லாரும் சேர்ந்து இறைவேண்டல் செய்ய வேண்டும்” என்று கூறுவார்.
அதற்குச் சீமாட்டி, “அதெல்லாம் சரி, பங்கு மக்களின் கால்களுக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்கிறாய். ஆனால், உன் கால்களுக்கு நீ ஓய்வு கொடுப்பதில்லையே! அந்த நாள் எப்போது வரும் என்று நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி மடக்குவதும், பதில் தரமுடியாமல் வியான்னி சிரித்து மழுப்புவதும் அழகாகப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வியான்னியின் அற்புதம் செய்யும் ஆற்றல், சாத்தானுடனான அவரின் பிரபல போராட்டங்கள் கூட மிகவும் அடக்கமான தொனியில் கூறப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் பேய் நம் ஊர் சினிமாக்களைப் போல முடியை விரித்துப் போட்டுக்கொண்டு, நாக்குச் சரிந்த நிலையில் வருவதில்லை. அதன் இருப்பு குறிப்பாக உணர்த்தப்படுகிறது. வியான்னி படுக்கையில் திருவிவிலியத்தை வாசித்துக் கொண்டிருக்க, முதலில் கதவில் ஒரு முரட்டு தட்டல்! பிறகு அறை ஓரத்தில் இருக்கும் மர நாற்காலி ஒரு வேகச் சுழற்றலில் அவருக்கு முன்வந்து நிற்கிறது. அடுத்த நாள் காலையில் பாதி எரிந்த நிலையில் வீட்டிற்குள் கிடக்கும் அவரது படுக்கை. முந்தின இரவு சாத்தான் வியான்னிக்குக் கொடுத்த துன்புறுத்தல்களுக்கு அடையாளமாக இது காட்டப்படுகிறது. வியான்னி சாத்தானை ‘LE GRAPPIN’ என்ற பெயர் வைத்துக் கூப்பிடுகிறார். “ஓ, நீதானா? சரி, நல்லது. நீ என்னைத் துன்புறுத்த வந்தால், ஏதோ ஒரு பெரிய பாவி மனம் மாறுகிறான் என்று அர்த்தம். எனக்கு மகிழ்ச்சிதான்” என்று புன்னகையோடு பேயை எதிர்கொள்கிறார்.
புதுமைகளும்கூட அப்படித்தான். பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் காட்டப்படுகின்றன. ஒரு காட்சியில், ஒப்புரவு அருளடையாளத் தொட்டியிலிருந்து திடீரென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் வியான்னி, அங்கு வரிசையில் காத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவரிடம், “கவலைப்படாதே. உன் கணவர் மீட்கப்பட்டு விட்டார்” என்பார். அப்பெண் அழுது, “அது எப்படி முடியும்? அவர் தற்கொலை செய்து கொண்டு அல்லவா இறந்துபோனார்?” என்கிறாள்.
வியான்னி, “ஆம், தெரியும். ஆனால், பாலத்தின் தடுப்புச் சுவருக்கும் ஆற்று நீருக்கும் இடையில் உன் கணவர் தன் தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க ஓர் அவகாசம் கிடைத்தது. கடவுளால் எல்லாம் முடியும். உன் கணவர் இப்போது துயருறு நிலையில் இருக்கிறார். அவருக்காக வேண்டிக்கொள்” என்பார்.
படத்தில் நான் மிகவும் இரசித்தது, ஜான் மரிய வியான்னியை ஏதோ அருங்காட்சிப் பொருள் போலக் காட்டாமல், ஓர் அசல் பங்கு அருள்பணியாளராகக் காட்டியுள்ள விதம். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் ஒரு பங்குப் பணியாளரின் ஆர்வங்கள், ஆசைகள், சவால்கள், சந்தோஷங்கள் ஒன்றும் பெரிதாக மாறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பங்குப் பொறுப்பெடுத்த உடனேயே முதல் வேளையாக, கோவிலைப் பழுதுபார்க்க வேண்டும் என்று நன்கொடை கேட்க வியான்னி கிளம்புகிறார். ஊரில் பெரிய ஆதரவு இல்லை என்பதால், அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் லியோன் நகருக்கு நடந்துபோய், அங்குத் தனக்குத் தெரிந்த ஒரு பணக்காரக் குடும்பத்திடம் உதவி கேட்கிறார். கோவில் கட்டுவது, கெபி கட்டுவது என்று ஏதாவது ஒன்றை ஆரம்பித்து விட்டு, நன்கொடை இரசீது புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராக அலைந்து, வேலை பார்க்கும் இன்றைய பங்கு அருள்பணியாளர்கள் வியான்னியோடு எளிதில் பொருந்திப்போகிறார்கள்.
ஒரு வேலையை முடித்த பிற்பாடு, உடனேயே அடுத்த வேலையை ஆரம்பிக்கிறார். ஒவ்வொன்றிற்கும் நிதிதிரட்ட அலைகிறார். மறைக்கல்வி வகுப்புகள், பக்தி இயக்கம் ஆரம்பிக்கிறார். மறைக்கல்வி வகுப்புகள் நடத்த அவர் எடுத்த ‘டைரி குறிப்புகள்’ இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்போது போலவே அப்போதும் ஆண்கள் கோவிலுக்கு வருவது குறைவாக இருந்திருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள்!
‘காசு இருக்கிறதா? நடத்த முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல் பள்ளிக்கூடம் தொடங்குகிறார். ஞாயிறு மறையுரையைச் சனிக்கிழமையே முழுவதும் எழுதி, மனப்பாடம் செய்தும்கூட, அடுத்த நாள் மறையுரை வைக்கும்போது, திடீரெனப் பாதியில் எல்லாம் மறந்து விட, முடிக்காமலேயே இறங்கி வருகிறார் (எனக்குப் பலமுறை இது நடந்துள்ளது).
விழாக்கள், குறிப்பாக ஊர்வலங்கள் நடத்துவது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது. எந்தப் பங்கு அருள்பணியாளருக்கு அவை பிடிக்காது? ஆர்ஸ் பங்கில் முதலில் கார்ப்பஸ் கிறிஸ்டி திரு விழாவை நடத்தியது வியான்னிதான். அவரால் ‘தொழில் பாதிக்கப்பட்ட’ மதுக்கடை உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, அவரைப் பங்கிலிருந்து வெளியேறச் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். பொறாமையால் தூண்டப்பட்ட அருகாமைப் பங்கு அருள்பணியாளர்கள், வியான்னிக்கு எதிராக ஆயருக்கு எழுதும் ஒரு கடிதம் எப்படியோ வியான்னியிடமே கிடைத்துவிட, வியான்னியும் அதில் கையெழுத்திடுகிறார். “இதுதான் சரியான முடிவு. நான் பங்கில் இருக்கத் தகுதியற்றவன். ஆயர் என்னை ஏதாவது ஒரு தியான இல்லத்திற்கு அனுப்பினால், நான் அங்கு போய், என் ஆன்மாவிற்காக இறைவேண்டல் செய்த வண்ணம் இறந்து போவேன்” என்கிறார்.
பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இருந்த வியான்னியை, 2009-ஆம் ஆண்டு எல்லா அருள்பணியாளர்களுக்கும் பாதுகாவலராகத் திருத்தந்தை பெனடிக்ட் அறிவித்தார். அதைத் திரு அவை செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.
பங்கு அருள்பணியாளர்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளம் இருக்கிறது. புனித ஜான் மரிய வியான்னி அதன் மிகச்சிறந்த முன்மாதிரி!