கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடியாவிட்டால் அது எந்தப் பலனும் தராது. மனிதன் வாழ்வும் தனது இலக்கை அடைய சில நேரங்களில் விழ வேண்டும், மடிய வேண்டும். ஆனால், நிரந்தரமாக மடிந்து விடுவதில்லை. கிறிஸ்து மடிந்தார்; ஆனால், உயிர்த்தெழுந்தார். காரணம், அவர் தமக்காக வாழவில்லை; தம் மக்களுக்காக வாழ்ந்தார்.
‘நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’
என்ற மாணிக்கவாசகரின் வரிகள் மீண்டும் உயிர் பெறுகின்றன சில தலைவர்களால்! சில நேரம் மனிதநேயம் மறைந்து, மதநேயம் இரக்கமற்று, நீதியற்று, இதயத்தில் சற்றும் ஈரமில்லாமல் ஒருசாரார் நாற்காலியைத் தக்கவைக்க நீதியைப் பொய்மையாகவும், பொய்மையை மெய்மையாகவும் வார்த்தைகளால் அசைபோடும் சில தலைவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்து
இறந்தார்; ஆனால், உயிர்பெற்றார்! கிறித்தவமும் இறப்பதாய் நம் கண்களுக்குப் புலப்படும்; ஆனால், கிறித்தவர்களின் இறப்பு, மறைப்பணியாளர்களின் இரத்தம் சிந்துதல் காலத்தின் களைகளை அகற்றி கதிரவனாய் ஒளி கொடுக்கிறது. இதைத்தான் திரு அவையின் தந்தையர்களில் ஒருவரான தெர்த்தூலியன், “மறைச்சாட்சிகளின்
இரத்தம், திரு அவையின் வித்து - விதை” என்பார்.
“ஏதென்ஸ் நகரத்தில் தொற்றுநோய் பலவீனப்படுத்தியதுபோல் என் பக்கத்து நகரத்தையும், இல்லை என் பக்கத்துத் தோட்டத்தை மதநோய் மனிதநேயமற்று பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனிதகுலத்தின் தோல்வி” என்றார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால், நாடுகளுக்கு இடையே என்பதைவிட, மனிதநேயத்தை விடுத்து மதநேயத்தைத் திணித்து நாட்டிற்குள் உள்ளேயே மனித சித்திரவதை நடைபெறுவது இதயம் கிழிந்து, குருதி பெருக்கெடுத்து, வலியின் உச்சத்தில் மனிதர்கள் இறந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.
இம்மாதத்திற்கான
இறைவேண்டல் கருத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்: “இன, அரசியல், மத கருத்தியல் காரணங்களால்
ஏற்படும் உள் மோதல்களைத் தவிர்க்க இறைவேண்டல் செய்யவேண்டும். மோதலுக்குப் பதிலாக உரையாடல், இரக்கம் மற்றும் உடன்பிறந்த உறவைப் பின்பற்ற வேண்டும். உண்மையான அமைதி என்பது நமது இதயத்தில் தொடங்குகிறது. மேலும், நீதியை மேம்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும், ஒன்றிப்பை வளர்ப்பதிலும் அனைவரும் இணைய வேண்டும்.”
ஏதோ
எங்கோ என்பது மாறி, இப்போது இங்கே என்ற பதற்றம் நம்மிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பயணம் என்பது தன்னைச் சார்ந்து பயணிப்பது அல்ல; மாறாக, பிறருக்காகப் பிறரோடு பின்னிப் பிணைந்து பிறரைச் சந்திப்பதற்காகவும், பொதுவான இலக்கை அடைவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்று இளைஞர்களுக்கான செய்தி மடலில் ‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற திருப்பாடல் வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஒன்றித்துப் பயணிக்க அழைப்பு விடுக்கின்றார் திருத்தந்தை.
விதை
அழிந்து முளைத்து மரமாக, கிளையாக ஒன்றித்து இருக்கும்பொழுது தான் அது விருட்சமடைந்து பலம் பெற்று வலுப்பெறுகிறது. சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதா? இல்லை இல்லை... நாம் சற்று பழைய குப்பைகளை அகற்றிவிட்டு, மீண்டும் புதிய குப்பைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதா? மனிதநேயம் என்கின்றபொழுது மரணத்தின் பிடியில் சிலர் தங்களை அர்ப்பணிப்பதும், சவால்களைச் சந்திப்பதும் கடந்து செல்லும் பாதையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், விதை ஒருபோதும் அழிந்துவிடுவதில்லை; மடிகிறது... மீண்டும் எழுகிறது, விருட்சமாகிறது. மதத்தைப் பார்க்காதே. மனிதம் பிறக்கட்டும், மனிதநேயம் வளரட்டும்!