news-details
ஆன்மிகம்
புயலும் போதனையும் - சதுக்கத்தின் சப்தம் – 5

அமைதி திடீரெனக் குழப்பமாக மாறும் சில தருணங்களில் வாழ்க்கை நிச்சயமற்றது, நிம்மதியற்றது என்பது பலமுறை கூறப்படும் ஓர் உண்மைதான். அது ஓர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது நிகழலாம். எதிர்பாராத விதத்தில் மற்றொரு வாகனம் நம் பாதையில் நுழையலாம் அல்லது நாம் மகிழ்ச்சியுடன் வேலையில் இருக்கும்போது திடீரெனத் தீக்கூடல் அலைமோதல் ஏற்பட்டு, அனைவரும் பதற்றத்துடன் எழுந்து, அவசரநிலை என்னவென்று கலக்கம் அடையலாம்.

உண்மையாகவே வாழ்க்கை மிக நிச்சயமற்றது! மேலும், அமைதி குழப்பமாக மாறும்போது அது மிகவும் உணரப்படுகிறது என்ற கருத்தியலை மத்தேயு 8:23-27 பகுதியை மையமாகக் கொண்டு நம் திருத்தந்தை 14-ஆம் லியோ தனது புதன் மறைக் கல்வி உரையில் எடுத்துரைத்துள்ளார்.

வாழ்க்கையின் புயல்களுக்குத் தயாராகுங்கள்!

ஒரு மாலைப்பொழுதில் ஒரு குடும்பம் செபத்திற்குப் பிறகு ஒன்றாக இரவு உணவை அனுபவித்துக்கொண்டிருந்தது. தந்தை தனது குழந்தைப்பருவத்தின் வேடிக்கையான கதைகளைப் பகிர்ந்து கொண்டார். தாயும் குழந்தைகளும் தந்தையின் வேடிக்கையான மற்றும் வீரக் கதையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அது ஒரு சாதாரண, அமைதியான மாலை நேரம். திடீரென்று தொலைப்பேசி ஒலித்தது. தந்தை பதிலளித்தார். அவரது புன்னகை மறைந்தது. அவர் அமைதியான பயத்துடனும் சோகத்துடனும் தனது மனைவியைப் பார்த்தார். மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அவரது சகோதரர் ஒரு விபத்தில் சிக்கினார். அந்தச் செய்தி எல்லாவற்றையும் மாற்றியது. சிரிப்பு மறைந்துவிட்டது, உணவு தொடப்படவில்லை. சாதாரண மாலைப்பொழுதாக இருந்த ஒன்று கண்ணீர் மற்றும் கேள்விகளின் இரவாக மாறியது.

எந்த எச்சரிக்கையும் இல்லாமல் புயல்கள் நம் வாழ்வில் இப்படித்தான் வருகின்றன. தயாராக நேரமில்லை; சிந்திக்க நேரமில்லை. இதைத்தான் நற்செய்தி நமக்குக் கூறுகிறது. கடலில் ஒரு பெரிய புயல் எழுந்தது. அது திடீரென ஏற்பட்ட புயலாக இருந்திருக்கும்; சீடர்கள் இயேசுவுடன் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அடுத்த கணம் அலைகள் படகில் மோதின. அவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்தார்கள். புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சீடர்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுடன் இருந்தார்கள்; அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்; எனினும், புயல் வந்தது. இந்த நற்செய்தி கலிலேயா கடலை மட்டும் பற்றியது அல்ல; இது நமது வீடுகள், நமது குடும்பங்கள், நமது குழந்தைகள், நமது ஆரோக்கியம், நமது அமைதி பற்றியது. ஒரு தொலைப்பேசி அழைப்பு, ஒரு மருத்துவ அறிக்கை, ஓர் உடைந்த உறவு போன்ற அனைத்தும் மூழ்கி வருவதுபோல் உணர்கிறது.

எங்கே நமது நம்பிக்கை?

இயேசு படகில் இருந்தார். அவர் தூங்குவதுபோல் தோன்றினாலும், அவர் அங்கே இருந்தார். அவரது மௌனம் அவர் இல்லாதது அல்ல; சீடர்கள், “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றுங்கள்என்று கூக்குரலிட்டபோது, அவர் எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். மிகுந்த அமைதி நிலவியது. பழைய ஏற்பாடு இதுபோன்ற ஒரு காட்சியை நமக்குத் தருகிறது. இஸ்ரயேலர்கள் திடீரென்று செங்கடலுக்கும் பார்வோனின் படைக்கும் இடையில் சிக்கிக்கொண்டனர். படை வருவதை அவர்கள் பார்க்கவில்லை. ஆனால், கடவுள் ஒரு பாதையைத் திறந்தார். அங்கு யாரும் இல்லை. அவர்கள் புரிந்துகொண்டதால் அல்ல; மாறாக, அவர்கள் நம்பியதால்!

புனித எலிசபெத் ஆன் செட்டனும் திடீர் புயல் ஒன்றைச் சந்தித்தார். அவரது கணவர் மிகவும் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டார், அவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். வறுமை, தாழ்வு, நிராகரிப்பு, வலி இருந்தபோதிலும், அவர் இயேசுவைப் பற்றிக்கொண்டார். அவர் ஒருமுறை, “துன்பங்கள் சொர்க்கத்திற்குப் படிக்கட்டுகள்என்று கூறினார்.

புயல்களை நம்மால் தடுக்க முடியாமல் போகலாம். ஆனால், நம் இதயங்களை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். புயலுக்கு முன்பும், புயலின்போதும், புயலுக்குப் பின்னரும் ஒன்றாகச் செபிக்கும் குடும்பம்தான், பெரும் புயலிலிருந்து தப்பிப் பிழைக்கும் குடும்பம். எல்லாம் திடீரென்று மாறினாலும், உங்கள் படகில் யார் இருக்கிறார்கள்? என்பதை மறந்துவிடாதீர்கள்.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் (யோசு 1:9) என்கிற இறைவார்த்தை நம்முடைய உள்ளமும் உலகமும் கடும்புயலால் சுழன்று கொண்டிருக்கும்போது, நம்மை மூழ்கச் செய்யக்கூடிய சூழ்நிலையில்கூடஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்?” என்று கேட்கத் தூண்டுகிறது. இருள்மிக்க சோதனைகள், நம்பிக்கையைப் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் அல்லது நம்முடைய நம்பிக்கைக்கே ஆபத்தான நெருக்கடிகளாக அவை இருக்கலாம். அதேபோல், பரிமாற்றங்களின் காற்று, புயலான சூறாவளியாகக் கத்திக்கொண்டே திரு அவையின் நாவாயைச் சுழற்றி வீசக்கூடும். ஆனால், இது நாம் புது ஒளியுடன் புத்துருவாக்கப்பட்ட திரு அவைக்குள் நுழையும் முன் கடந்து செல்ல வேண்டிய புயலான பயணம் மட்டுமே.

ஆண்டவர் அங்கே இருக்கிறார், நாம் பயப்படத் தேவையில்லை!

எந்தவொரு காரணமாக இருந்தாலும் சரி, நம் வாழ்க்கை கடவுளை நோக்கித் திசைதிருப்பப்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால், நாமும் எளிதில் கவனச்சிதறலுக்கு உள்ளாகி, நம்முடைய இலக்கையும் திசையையும் இழந்துவிடுவோம். முக்கியமாக, வாழ்க்கையின் புயல்களில் நாம் இயேசுவை நோக்கிக் கண்களைக் குவித்து, அவரை நோக்கியே பயணிக்க வேண்டும். நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து, உவர்நீரில் மூழ்கிடச் செய்யாமல் காக்கக்கூடியவர் இயேசு மட்டுமே. நம்மை அவரிடம் அருகில் வரச்செய்ய தொடர்ந்து அழைக்கும் கடவுளின் குரலுக்குப் பதிலளிப்பதில் நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கின்றோம்?

இயேசுவின் சீடர்கள் புயலின் நடுவே ஒரு தேர்வில் இருந்தார்கள்!

அவர்கள் படகில் இருந்துகொண்டு ஆண்டவரை நம்புவார்களா? அல்லது படகை விட்டுத் தப்பிக்க முயற்சிப்பார்களா? அவர்கள் பயத்தில் இருந்தும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் படகை விட்டு வெளியேறியிருந்தால், அலைகளால் அடித்துத் தள்ளப்பட்டு நீரில் மூழ்கியிருக்க வாய்ப்பு அதிகம். அந்தப் படகும், அதிலுள்ள சீடர்களும் ஓர் ஆழமான அடையாளத்தையும் கொண்டுள்ளன. படகு என்பது திரு அவையைக் குறிக்கிறது. அதிலுள்ள சீடர்கள் நம்மைக் (புனித மக்களை) குறிக்கின்றனர். அந்தப் படகில் இயேசு அவர்களுடன் இருந்தார்... புயலின் நடுவிலும்கூட. நாம் இயேசுவைப்போலவே நம்பிக்கையுடன் நிற்க முடிகிறதா? நம் வாழ்க்கையில் நம்மை மீட்ட ஆண்டவர், சீடர்களுக்காகப் புயலை எப்படி அமைதிப்படுத்தினார் என்பதைப் பார்த்தபோது, நாம் ஓர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவுடன் நாம் அனைத்தையும் வெல்ல முடியும்; நாம் செய்ய முடியாததை அவர் செய்கிறார். ஆண்டவர் நம்மை நம்பிக்கையின் பாதையில் வலிமையடையச் செய்கிறார். எந்தவோர் இடையூறும் துன்பங்களும் வந்தாலும், நாம் இடைவிடாமல் பயணிக்கச் செய்கிறார். நம் வாழ்வின் வழியில் நாம் கடவுளைப் போற்றும் தூய்மையான வாழ்க்கையை நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

வாழ்க்கையின் குழப்பமான தருணங்களில்தான் சீடர்கள் இயேசுவை ஆழமாக அறியத் தொடங்கினார்கள். அவ்வாறே, நாமும் குழப்பத்திலும் துன்பத்திலும் ஆபத்தான நிலைகளிலும் கடவுளைச் சந்திப்போம். அதுவே அவருடன் ஆழமான அனுபவம் பெறும் தருணமாக அமையும்.

மரண பயத்தைத் தவிர, மற்ற எந்தப் பயத்தையும்விட வலிமையானது எது?

அன்பில் பயமில்லை முழுமையான அன்பு பயத்தைத் துரத்தும் (1யோவா 4:18); “அன்பு மரணத்தைவிட அதிகமான வலிமையானது (இபா  8:6). இயேசுவின்மீது கொள்ளும் தன்னிகரற்ற அன்பே நமது எல்லாவித பயத்தையும் போக்கவல்ல வலிமையான ஆயுதம்!