அது என்னவோ தெரியவில்லை, விமலுக்கு முப்பத்தி நான்கு வயதான பிறகும் திருமணம் ஆகவில்லை. அவன் ஓர் எலக்ட்ரீசியன். அந்தப் பகுதியில் எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முன்பாகவும் அவனிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து விடுவார்கள். அவ்வளவு ‘டிமாண்ட்’ அவனுக்கு! அவன் வேலையில்லாமல் வீட்டில் இருந்ததே இல்லை. ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடுவான். குடும்பச் சூழல் அப்படி! நோய்வாய்ப்பட்ட தாய், பொறுப்பில்லாத அப்பா, ஒரு தங்கை என்று செக்குமாடுபோலத் தன் குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வந்துவிட்டான் விமல்.
தங்கை
திவ்யாமீது அதீத அன்பு கொண்டிருந்தான் விமல். புரியாத பிரியம்! பிரிவில் புரியும் என்பதுபோல தன் தங்கைக்குத் திருமணம் என்ற பேச்சு வரும்போதே உடைந்துபோனான் அவன். ஆயினும், தன் அன்புத் தங்கைக்குத் தானே முன்னின்று கடன் வாங்கித் திருமணத்தைத் தடால் புடலாக நடத்தினான். திருமணத்தில் எந்தக் குறையும் நடந்துவிடக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்தான். கடனை எல்லாம் தீர்த்துத் தனக்கென்று அவன் யோசிக்கத் தொடங்கும் நேரத்தில் அவனுக்கு வயது முப்பத்தி நான்கு.
சில
கல்யாணப் புரோக்கர்களிடமும் வரன் தொடர்பாகச் சொல்லிவைத்திருந்தான். அவனுடைய உருவம், படிப்பு, வேலை, குணநலம் எல்லாம் பலருக்குப் பிடித்தாற்போன்றுதான் இருந்தது. ஆனாலும், ‘ஏன் இன்னும் திருமணம் கைகூடவில்லை?’ என்பது ஒரு புதிர்தான்.
‘யாராவது பக்கத்து வீட்டுக்காரங்க இல்லாதது பொல்லாதது சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்காமச் செய்றாங்களோ?’ என்ற நினைப்பில் விமலின் தாய் பக்கத்து வீட்டுல யாரிடமும் பேசுவதில்லை.
“டேய்! இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சிங்கிளாகவே இருப்ப? எப்ப கல்யாணச் சாப்பாடு போடப்போற?’ என்று மறக்காமல் எல்லாக் குடும்ப நிகழ்விலும் சொல்லிவைத்ததுபோல எல்லாரும் கேட்பதுண்டு.
“உன் உடம்புக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே” என்று
அவனிடம் சிலர் சூசகமாகக் கேட்பாரும் உண்டு. அப்போதெல்லாம் விமலுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். இதுபோன்ற குண்டூசி வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு இப்போதெல்லாம் பழகிவிட்டது அவனுக்கு.
அன்று
ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணியளவில் திருமணப் புரோக்கர் ஒருவர் விமலுக்கு வரன் கொண்டுவந்திருந்தார். விமலுக்கும் அவன் தாய்க்கும் பெரும் மகிழ்ச்சி. புரோக்கரின் செல்போனில் பெண் பொலிவோடு காட்சி தந்தாள். பார்த்தவுடனேயே விமலுக்கு அப்பெண்ணைப் பிடித்துவிட்டது. “பெயர் சுவேதா, வயது 26, தனியார் பள்ளியில் வேலை, நல்ல குடும்பம்”
என்று புரோக்கர் பெண்ணைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டிற்கு முன்பாக ஓர் ஆட்டோ வந்து நின்றது. விமலின் தங்கை திவ்யா கையில் பெரிய சூட்கேசும், இடுப்பில் ஒரு குழந்தையுமாக வந்து இறங்கினாள்.
“என்னமா இந்த நேரத்தில்? வீட்டுக்காரர் வரலியா?” என்று அவளின் தாய் அடுக்கிக் கொண்டுபோன கேள்விகளுக்கு திவ்யாவின் ஒப்பாரி அழுகையே பதிலாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் கண் கலங்கிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் திவ்யா.
புரோக்கர்
கொண்டுவந்த புதுப்பெண் சுவேதாவைச் செல்போனில் பார்த்துப் பரவசமடைந்து திருமணம், புதிய வீடு, பிள்ளைப்பேறு என்று விமல் கனவில் திளைத்திருந்தபோது, இஸ்ரயேல் குண்டு மழையில் தரைமட்டமாகிப்போன காசா வீடுகள்போல அவன் கனவுகளும் நொடிப்பொழுதில் புழுதியில் புதைந்து போயின.
தன்
தாய், தந்தை, தங்கை, அவளின் குழந்தை என்று மறுபடியும் பம்பரமாகத் தன் குடும்பத்திற்காகச் சுற்றத்தொடங்கினான் விமல். காலச் சக்கரத்தில் ஆண்டுகள் பல கடந்தாலும், “டேய்!
இன்னும் எத்தனை நாளுக்குதான் சிங்கிளாகவே இருப்ப? எப்ப கல்யாணம்? ‘உன் உடம்புக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே?” என்ற கேள்விகள் மட்டும் கடந்துபோகாமலேயே விமலை மீண்டும் மீண்டும் சுற்றி வந்துகொண்டிருந்தன.
விமலைப்போலவும்,
அவனின் தங்கை திவ்யாவைப்போலவும் இன்று ஏராளமானவர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது பல கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் கொண்டிருக்கும் சுருக்குப்பை
என்றே சொல்லலாம்.
‘சைபர் திருமணங்கள் பற்றிக் கொஞ்சம் பேசுங்கள்’
என்று வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டதனால் இப்பதிவு சைபர் திருமணங்களையும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் பற்றிப் பேசுகிறது.
இந்தியக்
கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம். இன்று திருமணத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய திருமணங்களில்
பல குழப்பங்கள் மற்றும் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதிகரிக்கும் விவாகரத்துகள், தற்கொலைச் செய்திகள், வரதட்சணைக் கொடுமைகள், கௌரவக் கொலைகள் என்று நீண்டுகொண்டு போகின்ற குற்றப் பட்டியலே இதற்குச் சான்று. எனினும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ‘சிறப்புத் திருமணச் சட்டம் - 1954’ அடிப்படையில் சைபர் திருமணத்தைச் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அங்கீகரித்திருக்கிறது.
2022-ஆம் ஆண்டு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த வாஸ்மி சுதர்சனிக்கும், அமெரிக்காவைச் சார்ந்த இராகுல் மதுவுக்கும் சைபர் திருமணம் மூன்று சாட்சிகள் முன்னிலையிலும், மணவாளக் குறிச்சி துணைப்பதிவாளர் முன்னிலையிலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
சைபர்
திருமணங்கள் ஒருபுறமிருக்க, இணைய வழி திருமணச் சேவைகள் (Globle Matrimonial Sites) மழைக்காலப்
புற்றீசல்களைப்போல அதிகரித்திருக்கின்றன. இன்று திருமணச் சேவைத்தளங்கள் இணையத்தில் காணக்கிடக்கின்றன. இணையச் சேவை வழியாக நடைபெறும் திருமணங்கள் மற்றும் அதன் நீடித்தத்தன்மை குறித்த ஆய்வு இன்று தேவைப்படுகின்றது.
சைபர்
திருமணத் தளங்கள் இன்று பல்வேறு சைபர் குற்றங்களின் விளைநிலமாகவும் உள்ளன என்று இந்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளதோடல்லாமல், அவற்றை எவ்வாறு கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. ஒரு மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் தங்கள் தரவுகளைப் பதிவு செய்வதற்கு முன்பாக அத்தளத்தின் உண்மைத்தன்மையை மறுசீராய்வு செய்து பார்க்கவேண்டும். இத்தளங்களின் வழியாகச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கின்றவர்களை மறைமுகமான இடத்தில் தனிமையில் அல்லாமல், பொது இடங்களில் துணையாளர் ஒருவரின் உடனிருப்போடு சந்திப்பது நல்லது. இவ்வகை இணையத்தளங்களில் அறிமுகமாகின்ற மனிதர்கள் பற்றிய விவரங்களை நண்பர்களோடும் அல்லது பெற்றோரோடும் பகிர்ந்துகொள்ளலாம்.
மேட்ரிமோனியல்
இணையத்தின் வழியாகச் சந்திக்கும் மனிதர்களிடம் பணத்தையோ அல்லது அந்தரங்கப் புகைப்படங்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது. இணையத்தள மோசடிகள் எந்த வகையிலும் வரலாம்; எனவே, மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இணையம்
ஒரு மனிதனின் வாழ்வில் எந்நாளும் நீடித்திருக்கின்ற உறவுகளை ஒன்றிணைக்கின்றது. முகம் தெரியாத இரண்டு பேரை அறிமுகப்படுத்தி, அவர்களைத் திருமணம் என்னும் உறவில் இணைக்கின்றது. எனினும், இதயங்களை இணைக்கின்ற இணையம் மோசடியில் ஈடுபடுவதை என்னவென்று கூறுவது?!