நம்பிக்கை ஒளி நம்மில் சுடர்விடும்பொழுது பேரன்பு அனுபவம் மேலோங்கும். அப்பொழுது ஆற்றல்மிக்க செயல்கள் நன்மைகள் என ஒளிரும். நாமும் அன்பின் நற்செய்தியை முழக்கமிட ஆற்றல் பெறுகிறோம். நற்செய்தியின் சுருக்கம் பின்வரும் இயேசுவின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது: “தம் ஒரே மகனில் நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வைப் பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” (யோவா 3:16). திருமுழுக்குப் பெற்ற நம்பிக்கையாளர்களாகிய நாம் இந்த நற்செய்தியை நம் வார்த்தையாலும் வாழ்வாலும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்தப் பொறுப்பினை நிறைவேற்ற அருள் அளிக்கும் இறைவன் உடனிருந்து செயலாற்றுகிறார். உலகிற்கு ஒளியாகத் திகழ அருள் வழங்குகின்றார்.
புனித
பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்”
(பிலி 2:13). “உமது முகத்தின் ஒளி என்மீது வீசச் செய்யும் ஆண்டவரே” என்று செபித்து ஆற்றல் பெறுவோம். நான் இறைவனின் பிள்ளை, இறையாட்சிப் பணியாளர் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் பொழுது இறைநம்பிக்கை நம்மில் நங்கூரமாக நிலைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும்.
மறைந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘நாமெல்லாம் உடன்பிறப்புகள்’ என்று
உரக்க உரைத்தார். இன்றைய நம் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களும் ‘திரு அவை உலகளாவிய குடும்பம்’
என்று வலியுறுத்துகின்றார். நாமும் நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்து (எபி 12:2), ஒளியின் செயல்களை ஆற்றி உலகில் ஒளியாகும் பேறு பெற்றவராவோம்.
மே
23 - வெள்ளிக்கிழமை இடைக்காட்டூர் இயேசுவின் திரு இருதய திருத்தலத்திற்குச் சென்றிருந்தேன். திருப்பலி முடிந்த பின்பு ஆலயத்திலிருந்து வெளியில் வந்தேன். ஒரு தாய் தன் மகனுடன் உணவுப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்தார். அங்கு சென்று இரண்டு வடைகள் வாங்கினேன். ரூபாய் எடுத்துக்கொடுக்க முயன்றபொழுது பணம் அறையிலேயே வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தேன். அந்த வடைகளைத் திரும்பக் கொடுத்து, ‘பின்பு வாங்கிக் கொள்கிறேன்’ என்று
கூறிவிட்டு கெபியில் அமர்ந்து செபித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தாய் தன் மகனிடம் வடைகளைப் பொட்டலமாகக் கொடுத்து அனுப்பினார்கள். எவ்வளவோ மறுத்தும், கட்டாயமாகக் கொடுத்துவிட்டார்கள். செபம் முடிந்தபின் அறைக்குச் சென்று ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்; வாங்க மறுத்துவிட்டார்கள். ‘ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக’ என்று
கூறிவிட்டுத் தொடர்ந்து செபித்தேன். “நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்...... மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:35,40) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய இந்த எளிய சகோதரியை நன்றியோடு நினைத்து, ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபித்தேன்.
வலிமையற்ற
என் கால்களைக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வது கடினமாக இருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து காரில் வந்த என் உறவினர் என்னைச் சந்தித்தார்கள். எனது நிலை அறிந்து, மதுரைக்கு வருவது தேவையில்லை என்றாலும் கூட, எனக்கு உதவும்படி மதுரை வந்து என் இல்லத்தில் விட்டுச் சென்றார்கள். இவற்றையெல்லாம் நினைக்கும்பொழுது திபா 37:5 வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது: “உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.”
நம்புங்கள்,
செபியுங்கள், நல்லது நடக்கும் என்பது வாழ்வின் பேருண்மை. நம்பிக்கைக்குரிய இயேசுவிடம் சரணடைவோம். அவரது அன்பின் சாட்சிகளாவோம், இறையாட்சி மலரச் செய்வோம்.