‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்தியத் தாய்த் திருநாடு பல்வேறு விழாக்களை ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றது. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதனுடைய சுதந்திர தினம்.
‘இந்தியா சுதந்திரம் பெற்றதா? அல்லது சுதந்திரமானது இந்தியாவுக்கு அளிக்கப்பட்டதா?’ என்ற கேள்வியே உலக அரங்கில் இன்னும் விவாதப் பொருளாக இருக்கின்றது. பிபின் சந்திரா போன்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய மக்களின் கடும் போராட்டத்தாலும் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறுகின்றனர். மறுபுறம் சர்ச்சில் மற்றும் ஜூடித் எம். புரோன் போன்ற ஆங்கிலேயர்கள் பிரித்தானிய அரசு உலகப் போரால் பலவீனம் அடைந்ததன் விளைவாக இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என்று இந்திய விடுதலைப் போராட்டத்தின் வலியின் வடுக்களை மறைக்க முயற்சி செய்கின்றனர். இதில் யாருடைய கூற்று உண்மை? என்று பதிலளிக்க வேண்டிய கடமை இந்தியர்கள் அனைவருக்கும் உண்டு. இதே கேள்வியைத்தான் பாரதியும் ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்ற வரிகளின் மூலம் கேட்கின்றார். நாடு சுதந்திரம் பெற்றாலும், நாட்டு மக்களிடம் நிலவும் அடிமை மனப்பான்மையிலிருந்து இன்னும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை.
‘இந்தியா சுதந்திரம் பெற்றது; இந்தியர்கள் சுதந்திரம் பெற்றார்களா?’ என்ற கேள்வியை புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே
எழுப்பியுள்ளனர். இதை மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே அளவிட முடியும். மக்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தைச் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு ஆய்ந்தறிவது தவறான அணுகுமுறையாகும். ஏனெனில், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவானது பிரித்தானியாவின் ஒரு காலனி நாடு. இதன் காரணமாக இந்தியர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கான கடமைகளைப் பெருக்கி, உரிமைகளை நசுக்கியது பிரித்தானிய அரசு. ஆனால், தற்பொழுது இந்தியா ஒரு சனநாயக நாடு. சனநாயக நாட்டில் மக்களே மன்னர்கள். எனவே, இந்திய சனநாயகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இதுவே சுதந்திர நாட்டின் இயல்பான நிலையாகும். இவ்வியல்பான நிலை தவறும்பொழுதெல்லாம், இந்தியக் குடிமகனின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. பல நேரங்களில் வாழ்வாதாரமும்,
சில வேளைகளில் தனிமனித வாழ்வுமே பறிக்கப்படுகின்றது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சுதந்திரத்தை முழுமையாகச் சுவாசிக்காத இனக்குழுக்கள் இம்மண்ணில் உள்ளன.
பிரித்தானிய
அரசிடமிருந்து பெற்ற விடுதலையானது ஊழல், மதக்கலவரங்கள், இன மோதல்கள், சாதியப்
பாகுபாடுகள், வாரிசு அரசுகள் மற்றும் பிற்போக்குச் சிந்தனைகள் போன்ற பல கதவுகளுக்குப் பின்
மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அக்கதவுகளின் சாவியைச் சிலர் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் மட்டுமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் சுரண்டப்படுகின்றனர். அனைவருக்கும் பொருந்தும் வகையில் அம்பேத்கர் வடித்த சட்டப் புத்தகத்தின் முகவுரையில் உள்ள ‘இந்தியர்களாகிய நாம்’ என்ற பதம் இன்று அனைத்து இந்தியர்களையும் குறிப்பதில்லை; பணம் மற்றும் அதிகாரத்தைக் கொண்ட உயர் வகுப்பு இந்தியர்களை மட்டுமே குறிக்கின்றது.
நள்ளிரவில்
மின்னிடும் நகையுடன் பெண்கள் பாதுகாப்பாய் வலம் வரும் நாளே இந்திய விடுதலை நாளென்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நண்பகலில் அபயா போன்ற பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலையில் இந்தியா உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இராமர், ஒடிசாவில் ஜகநாதர், மேற்குவங்கத்தில் காளி மற்றும் தமிழ்நாட்டில் முருகர் என்று கடவுள்களின் உரிமையைக் காக்க மனிதர்களை ஒன்றிணைக்கின்றனர். இது பக்தியின் வெளிப்பாடாக இருந்தால் பாராட்டுக்குரியது. ஆனால், இது சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராகப் பெரும்பான்மை சமூகத்தின் மனத்தில் பகையை உண்டாக்கும் முயற்சியாகும்.
பெரும்பான்மை
மக்களின் கடவுள்களுக்கும் உரிமைக்கும் வாழ்வுக்கும் சிறுபான்மை இன மக்களால் பிரச்சினை
என்ற நாசிச மற்றும் பாசிச அரசின் கொள்கைகளை இந்திய மண்ணில் தொடர்ந்து விதைக்கின்றனர். இதன்மூலம் பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் சுமையை மறக்கடித்து, அவர்களைச் சிறுபான்மையினரின் பக்கம் திருப்பி விடுகின்றனர். இதைத்தான் இலங்கையில் சிங்கள அரசு செய்தது. இன்று இலங்கையின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரச் சுமையைப் பெரும்பான்மை இந்துகளும் மற்றும் சிறுபான்மையினரும் சேர்ந்து சுமக்கின்றனர் என்ற தெளிவை இந்தியர்கள் அனைவரும் பெற வேண்டும். ஏனெனில், வெகுசன மக்களை மதத்தின் பக்கம் திருப்பி விட்டு விட்டு, நாட்டின் செல்வங்களைப் பெரும் முதலைகளும் ஊழல் எலிகளும் சுரண்டுகின்றன.
நாடு
முழுவதும் ஏறக்குறைய 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. ஜெர்மனியின் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்’ என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 180 நாடுகளில், 96-வது இடத்தில் உள்ளது. வங்கி முறைகேடுகளின் மொத்த மதிப்பு 36,014 கோடி என்று கணக்கிடப்படுகின்றது. இவை மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.5 விழுக்காடு இருக்கும். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அரசுக்கு ஜி.எஸ்.டி.
செலுத்துவதற்காகவே சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொழுது, இந்தியாவின்
40 விழுக்காடு வளங்களை வெறும் 1 விழுக்காடு நபர்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் ஈட்டும் வருவாயை இந்தியாவின் வருவாயாக ஆவணப்படுத்தி, இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக முழங்குகின்றனர். மொத்தத்தில், இந்தியாவில் பணம் உள்ளது; ஆனால், அனைத்து இந்தியர்களிடமும் இல்லை.
இந்தியாவின்
உற்பத்தித் திறன் ஒரு மூலையில் அதிகரிக்கும் பொழுது, மக்களின் வாங்கும் திறன் குறைந்து கொண்டிருக்கின்றது. இதன்மூலம் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை விரைவில் சந்திக்க உள்ளது. உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக வளர்ச்சியடைய வேண்டும். அப்படி இல்லாமல் உடலின் ஒரு பாகம் மட்டும் வளர்ந்ததென்றால் அது வீக்கம், நோய். இந்தியாவும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையேயான பெரும் பொருளாதார இடைவெளி என்ற நோயால் அவதிப்படும் அபாயத்தில் உள்ளது.
இப்படி
மக்களை மதங்கள் மற்றும் இனக் கலவரங்களில் மூழ்க வைத்து, நாட்டின் மொத்த வளங்களும் சுரண்டப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற இந்தியாவின் வளமானது பணக்காரர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கடன் சுமை, வரி என்ற பெயரில் பாமர மக்களின் முதுகில் ஏற்றப்படுகின்றது.
இப்படிப்
பொருளாதாரச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இருப்பவருக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்று நீதியைத் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றுகின்றனர். இதற்கு ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற முயற்சிக்கின்றனர். செயற்கையாகக் கலவரங்களை ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே, நிகழும் கலவரங்களில் தொடர்ந்து எண்ணெய் ஊற்றுகின்றனர். இதற்கு இன்றும் தொடரும் மணிப்பூர் கலவரமே எடுத்துக்காட்டாகும். ‘ஆப்ரேஷன் சிந்தூர்’
என்று மார்தட்டிக்கொள்ளும் இவர்கள், உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பிறருக்குத் தெரியாமல் தவறான தரவுகளைக் கொண்டு மறைக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய மாநில அரசுகளை, வருமானவரித்துறையின் மூலம் தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்கின்றனர்.
எப்பொழுது
நாட்டு மக்களின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆட்சியாளர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின் நலன் முன்னிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்நாட்டு மக்கள் தங்களின் சுதந்திரத்தை இழக்கின்றார்கள். இந்த அடிமை முறையிலிருந்து விடுபட இந்தியர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்.
வரி
செலுத்துவதுபோல், வாக்கையும் சரியாகச் செலுத்தவேண்டும். சரியான முறையில் சரியானவர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே, குறைவான வரி என்பது இந்தியாவில் சாத்தியமாகும். நாட்டை ஆட்சி செய்வதற்காகத் தேர்தல் என்ற நிலை மாறி, அரசியல் விளையாட்டுகளின் முதல் புள்ளியாகத் தேர்தல் மாறிவிட்டது. இதற்கு இந்தியர் அனைவரும் காரணம் என்று உணர வேண்டும். அரிஸ்டாட்டில் ‘குடியரசு’
என்ற தன் படைப்பில் கூறுவது போல் ‘குறைந்த தீமையைத் தேர்ந்தெடுக்காமல், நிறைந்த அறிவுடன், பிறர்நலச் சேவைக் கண்ணோட்டத்துடன் தேர்தலில் நிற்கும் இளைஞர்களுக்கும், கட்சிசாரா தன்னார்வத் தொண்டர்களுக்கும் வாக்களிக்கவேண்டும். இனி வரப்போகும் அனைத்துத் தேர்தல்களிலும் அறிவாளிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
‘முழுச்சுதந்திரமே இலக்கு’ என்று இச்சுதந்திர தின நாளில் முடிவெடுப்போம். இந்தியர்கள் அனைவரும் தாய்த்திருநாட்டின் மன்னர்கள் ஆவர். தன்னுடைய சகமனிதன் துயருறும்பொழுது, ஒவ்வொரு மன்னரும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மணிப்பூரில், காஷ்மீரில், சாத்தான் குளத்தில் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் பற்றியெரியும் பொழுது, இந்தியர்கள் அனைவரும் கொதித்தெழ வேண்டும். ஏனெனில், அதேநிலை நமக்கு நாளை வரலாம்; அப்பொழுது, நமக்காகக் குரல் கொடுக்க அவர்கள் வேண்டும்.
மதவாதம்,
ஊழல், சாதி பாகுபாடு, வாரிசு அரசியல் மற்றும் சினிமா மோகம் என்ற பாதையில் பயணிக்கும் இந்திய அரசியலை முற்போக்குப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டியது இந்தியர்களுடைய கடமையாகும். ஒவ்வோர் இந்தியனும் அரசியல் போக்கை அறிந்து, விவாதித்து அதைச் செயல்படுத்தவேண்டும். நல்லது செய்பவர்கள் இந்த அரசியல் கோமாளிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களைக் கண்டறிந்து அரியணை ஏற்ற வேண்டும். அதற்கு இந்தியாவில் உள்ள இன, மொழி, மத, சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டும். ஏனெனில், இந்தியர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இப்புரட்சிகள் நிகழ்ந்தால், இந்தியா
தானாக முன்னேற்றம் அடையும். இந்தியர்களும் முழு சுதந்திரம் அடைவார்கள். இந்திய இளைஞர்கள் தங்கள் கையில் இணையம் மட்டுமல்ல, இந்தியாவும் உள்ளது என்று உணர வேண்டும்.
இளைஞர்கள்
அரசியல் பயின்று, அரசியல் பாடமெடுக்கத் தொடங்கும் நாளில், இந்தியாவின் சுதந்திரம் நிரந்தரமாகும். அதுவரை...?