news-details
ஆன்மிகம்
இளையோர் ‘இயேசு அனுபவம்’ பெற... (22-வது இளைஞர் ஞாயிறுக்கான ஆயரின் சுற்றுமடல்)

தமிழ்நாடு திரு அவை ஆகஸ்டு முதல் ஞாயிறை (03.08.2025) இளைஞர் ஞாயிறாகக் கொண்டாடுகின்றது. இவ்வாண்டின் இளைஞர் ஞாயிறின் கருப்பொருளாக, “நீங்களும் சான்று பகர்வீர்கள்; ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள் (யோவா 15:27) எனும் இயேசுவின் ஆற்றலூட்டும் வார்த்தைகளை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

இளைஞர் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு தங்கி, அவரின் பணிவாழ்வில் உடன் பயணித்து, அவரது இறையாட்சிக் கொள்கைகளைத் தமதாக்கி, அவரது பார்வையைக் கொண்டவர்கள் தாம் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பை உடனுணர்ந்த பிறகு இச்சீடர்கள், தங்கள் வாழ்வால் இயேசுவிற்குச் சான்றுபகர்ந்தார்கள். குறிப்பாக, தேவையிலிருப்பவர்களுக்குப் பணியாற்றுதல், ஏழைகள், கைம்பெண்கள், பிற இனத்தார் போன்றோருக்கு முன்னுரிமை கொடுத்தல், தயக்கமின்றித் துணிவுடன் உண்மையை எடுத்துரைத்தல், நோயுற்றோரை நலமாக்குதல், பிரிவினைகளை அகற்றி வாழ்தல், பெண் சீடர்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பணிகளாலும் பண்பாலும் சீடர்கள் சான்று பகர்ந்தார்கள். ஆட்சியாளர்களின் தீங்கிழைக்கும் ஆட்சி முறைக்கு எதிரான, முரண்பட்ட ஆளுமைகளாய் நயன்மை காத்தார்கள். தங்களின் நேர்மையான நிலைப்பாட்டிற்காக இன்னுயிரையும் இழக்க அவர்கள் தயங்கியதில்லை. எனவேதான், இயேசுவின் சீடர்களாய் வாழஇயேசு அனுபவம்பெற்றிருப்பதோடு, இயேசுவிற்குச் சான்று பகரும் வாழ்க்கைமுறையும் அடிப்படைத் தேவையாகிறது. இயேசு அனுபவமும் சான்று பகரும் வாழ்வுமே உண்மையான சீடத்துவ வாழ்வின் இரு இணைபிரியா, ஒன்றையொன்று நிறைவு செய்யும் பக்கங்கள்.

இயேசுவுடன் உடனிருத்தல்

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நண்பர்கள் என்றேன் (யோவா 15:15) என இயேசு இன்று இளைஞர்களுக்காக நட்பிற்கான அழைப்பை விடுக்கிறார். அதோடு, “வந்து பாருங்கள் (யோவா 1:36) என இளைஞர்களை அவரோடு தங்கி வாழ அழைக்கிறார். சான்று பகரும் சீடத்துவ வாழ்விற்கு இயேசுவோடு உடனிருக்கும் அருள்வாழ்வே அடித்தளமாகும். இதை உணர்ந்துதான் தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் முதல் முன்னுரிமையாக அருள்வாழ்வும் இறைநம்பிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இயேசுவோடு உடனிருக்கும் ஆழமான அருள்வாழ்வை வளர்க்க இளைஞர்கள் இறைவார்த்தையை வாசித்து, உள்வாங்கி, இக்காலச்சூழலுக்கு ஏற்ப புரிந்து வாழ்ந்து காட்டலாம்; அருளடையாளங்களின் பொருளுணர்ந்து, அவை விடுக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்; ஆழ்நிலைத் தியானம், இயற்கைத் தியானம், இனிய இசை தியானம், திருச்செபமாலை, புதுமையான இறைவேண்டல்கள், இளைஞர் திருப்பலி, ஆற்றுப்படுத்தும் ஒப்புரவு போன்ற அருள்வாழ்வு பயிற்சிகள் வழியாகவும் இயேசு அனுபவம் பெறலாம். இளைஞர் இயேசுவின் ஆளுமையையும் செயல்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும், வாழ்வின் மதிப்பீடுகளையும், உறவுகொள்ளும் முறையையும், உதவி செய்யும் பாங்கினையும் தன்வயப்படுத்தியும் இயேசுவோடு உடனிருக்கலாம். இவ்வாறு இளைஞர் இயேசு என்னும் திராட்சைச் செடியின் கிளைகளாய் இளைஞர்கள் இணைந்திருக்கவேண்டும். உயிரோட்டமான இணைவே கனிகள் ஈவதற்கான உயிராற்றல் என்பதை நெஞ்சில் நிறுத்தவேண்டும்.

சான்று பகர்தல்

இயேசுவோடு உடனிருந்து உயிரியக்கம் பெறும் இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தில் உயிராற்றலோடு ஈடுபடுவார்கள். “இளைஞர் தெருக்களில் களமாடுகிறார்கள்; மாற்றத்தின் மிக முக்கிய ஆதரவாளர்களாக இருக்க விழைகின்றனர்; இயேசு வெறும் பார்வையாளர் அல்லன் அவர் ஈடுபட்டார். எனவே, ஏதோ ஒரு வழியில் பொதுநலனுக்காகப் போராடுங்கள், ஏழைகளுக்குப் பணியாற்றிடுங்கள். அன்பும் பணியாற்றும் பண்பும் கொண்ட புரட்சியின் முதன்மையான செயல்பாட்டாளர்களாக இருங்கள் (கிவா 174) என்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்கிறிஸ்து வாழ்கிறார்என்ற திருத்தூது ஊக்கவுரை வழியாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இளைஞர்களே! நீங்கள் கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்ளவும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாக வாழவும் பிளவுபட்ட உலகில் அமைதிக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பணியாற்றுவதற்கான அழைப்பிற்குப் பதிலுரைக்க அஞ்ச வேண்டாம்எனத் திருத்தந்தை லியோ அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவோடு உடனிருந்து, அவரது அனுபவத்தில் வேரூன்றிய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை நிலைகளுக்கும் தனியழைப்பிற்கும் ஏற்ப சமூகத்தில் ஈடுபட்டு, சமூக நீதிச் செயல்பாடுகளில் களமாட வேண்டும். ஆண், பெண் நிகர்நிலையைப் பேணிக்காக்கப் பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம், பாலியல் கொடுமைகள் போன்றவற்றிற்கெதிராக அறச்சீற்றத்துடன் பல முன்னெடுப்புகளை எடுப்பதோடு பெண்ணுரிமையைப் பேணுதல், பெண்களின் மாண்பைப் போற்றுதல், சமவாய்ப்பு போன்ற மாற்றநிலை நோக்கிப் பயணிக்கவேண்டும். சாதியத்தால் பிளவுபட்டுக் கிடக்கும் திரு அவையையும் சமூகத்தையும் கேள்விகேட்டு, இளைஞர் இயேசுவின் அன்புநெறியிலும் சமன்மைப் பாதையிலும் இயங்கும் புதிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். மது, போதைப்பொருள்களால் மாண்பிழந்து தள்ளாடும் இளைஞர், மாணாக்கர் சமூகத்தை நெறிப்படுத்தி, போதையில்லாப் புதிய இளைஞர் பண்பாடு, போதை நோய்க்கான மருத்துவம், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கங்களோடு போராட வேண்டும். இளைஞர் உலகை வீழ்த்தும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், அறநெறியற்ற ஊடகப் பயன்பாடு, இணையவழி அச்சுறுத்தல்கள் போன்ற எண்மின் படையெடுப்புகளை வீழ்த்த அறநெறியுடன் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

உறவுகளையும் வளங்களையும் பாதுகாப்பையும் அழித்து, சொல்லொண்ணாத் துயரத்தில் குற்றுயிராக்கும் போர்களுக்கெதிராகவும் நாடுகளின் முதலாளித்துவப் போக்கிற்கெதிராகவும், பொதுமையில் வேரூன்றும் நிலையான அமைதியை நிலைநாட்டும் இறையாட்சியின் தலைவர்களாக இளைஞர்கள் உயர வேண்டும். பகட்டையும் கவர்ச்சியையும் புறந்தள்ளி, கொள்கையுள்ள அரசியலை இனம்காணவும், தாங்கள் வாழும் பகுதியில் அரசியல் தன்மையோடு இளைஞர்கள் செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைச் சூறையாடும் திட்டங்களையும் சட்டங்களையும் முதலாளித்துவ அமைப்புகளையும், அறிவுக்கூர்மையுடனும் அரசியல் ஆற்றலோடும் இளைஞர்கள் அகற்றவேண்டும்.

மலைவாழ் மக்களுக்கான நீதிப்பணிக்காக உயிர் விட்ட அருளாளர் இராணி மரியா, பழங்குடியினரின் உரிமைகளுக்காக உயிர்நீந்த அருள்பணி. ஸ்டேன் சுவாமி, ஊழலுக்கெதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளம் அருளாளர் ஃபுளோரிபர்ட் ப்வானா சூய் (Floribert Bwana Chui), நாட்டுரிமைக்காகப் போர்புரிந்த இளம் வீராங்கனை புனித ஜோன் ஆஃப் ஆர்க், ஊடகத் துறையில் கிறித்தவ மனநிலையோடு செயலாற்றிய அருளாளர் கார்லோ அக்குத்திஸ், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்ததால் கொலை செய்யப்பட்ட பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரையும் உங்கள் சான்று வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

இளைஞர் இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், எல்லாப் பங்குகளிலும் இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டுச் செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். பங்குகள், மறைவட்டங்கள், மறைமாவட்டங்கள் ஆகிய தளங்களில் இளைஞர்களுக்கான உருவாக்கப் பயிற்சிகளான தலைமைத்துவம், ஆளுமை, சமூகப் பகுப்பாய்வு போன்றவை வழங்கவேண்டும். எல்லா மறைமாவட்டங்களிலும் பயிற்சிபெற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து, பங்குச் சந்திப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அக்குழுக்கள் வழியாகப் பங்கு இளைஞர் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உயிரூட்டி, ஆற்றல்படுத்த வேண்டும்.

22-வது இளைஞர் ஞாயிறன்று (03.08.2025) போதைப்பொருள்களுக்கெதிராக விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்திடவும், குருதிக் கொடையாளர் பட்டியலை எல்லாப் பங்குகளிலும் உருவாக்கி, தமிழ்நாடு அளவில் தொகுத்திடவும், பங்களவில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கிடவும், மறைமாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திடவும், மதுக் கடைகளை அகற்றக் கோரியும், போதைப் பொருள்கள் விற்பனையைத் தடைசெய்யக் கோரியும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்குக் கோரிக்கை மனு வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இறையாசியும் அன்னை மரியாவின் வழிநடத்துதலும் உங்கள் அனைவரோடும் இருப்பனவாக!