மக்கள்தொகையிலும் சந்தை மதிப்பிலும் மனித வளத்திலும் சனநாயக மதிப்பீடுகளிலும் உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை எப்படிக் கையாளக்கூடாதோ, அப்படிக் கையாண்டு சர்வதேச அரங்கில் பல தளங்களில் இந்தியா நிலை தவறி அவமானப்பட்டு நிற்பதற்குப் பிரதமர் மோடியின் ‘தன்முனைப்பு’ ஒரு பெரும் காரணம். உலக நாடுகளை நமது நட்பு நாடுகளாக உருவாக்குவதில் நாட்டம் செலுத்தாமல், அந்நாடுகளின் தலைவர்களைத் தனது தனிப்பட்ட நண்பர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதிலேயே அவரது நேரத்தினையும், வெளியுறவுத் துறையின் செயலாக்கத்தையும் பயன்படுத்தினார். உலக நாடுகளின் பெருந்தலைவர்களைத் தனது ‘பால்ய நண்பர்கள்’ போல நடத்துவதால், உள்நாட்டில் தனக்கு ஓர் அகில உலகத் தலைவர் (விஸ்வ குரு) என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற அவரது தவறான அணுகுமுறையால் உலக அரங்கில் பல இழப்புகளைச் சந்தித்துள்ளோம். சர்வதேச உறவுகள் என்பதும், வெளியுறவுக் கொள்கை என்பதும் தனி நபர் சார்ந்ததல்ல என்பதை அவர் உணரக்கூடிய காலம் வந்துவிட்டது.
அமெரிக்க
அதிபர் டிரம்ப்பைத் தனது தனிப்பட்ட நண்பர் என்று பீற்றிக்கொள்வதில் நமது பிரதமருக்கு ஓர் அலாதி இன்பம். சர்வதேச இராஜதந்திர உறவுகளின் எல்லைகளை மீறி, விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியாவின் பிரதமர் அந்நிய மண்ணில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்காகப் பகிரங்கமாக வாக்கு கேட்டார். அவரைத் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குக் கூட்டிவந்து, பல நூறு கோடி
ரூபாய் செலவு செய்து கொண்டாட்டங்கள் நடத்தினார். அதற்காக
ஏழைகள் வாழும் குடிசைகளையெல்லாம் அப்புறப்படுத்தினார். அந்தத் தேர்தலில் டிரம்ப் தோற்றதால் வெற்றி பெற்ற சனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் நல்லெண்ணத்தை இந்தியா இழந்தது.
மீண்டும்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வாக்குகளை டிரம்ப்புக்குப் பெற்றுத் தருவதற்குப் பா.ச.க.வின் அயலக அணியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு நிறுவனங்களும் கடுமையாக உழைத்தன. டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரத்தை இந்தியாவுக்கும், அமெரிக்க அரசு நிர்வாகத்தை இந்திய வம்சாவளியினருக்கும் டிரம்ப் திறந்து விடுவார் என்று இடைவிடாது பிரச்சாரம் செய்தனர். உலக அரங்கில் அமெரிக்காவுடன் உள்ள உறவு மட்டுமே போதும் என்று காலங்காலமாக இந்தியாவுடன் நட்புறவாக இருந்த நாடுகளையெல்லாம் நமது வெளியுறவுத்துறை தள்ளி வைத்தது. பல முக்கியமான கட்டங்களில்
நாம் தொடர்ந்து பின்பற்றி வந்த அணுகுமுறைகளையும் நிலைப்பாடுகளையும் மாற்றி, அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டையே நமது வெளியுறவு நிலைப்பாடாக அறிவித்தது. சர்வதேசச் சட்டங்களைப் பல நாடுகள் மீறியபோது
ஐக்கிய நாடுகள் சபையில் நியாயத்தின் பக்கம் நின்று வாக்களிக்க வேண்டிய இந்தியா, அமெரிக்காவுக்குப் பயந்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்வது அல்லது எதிராக வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. பாலஸ்தீனம்-காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இன அழிப்பைக்கூட கண்டிக்க
இந்தியா முன்வரவில்லை என்பது எவ்வளவு பெரிய தவறு! இஸ்ரேலைப்போல இந்தியாவும் ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவின் ‘நிரந்தரக் கையாளாக’ மாறக்கூடும் என்பதைப் போன்ற ஓர் அணுகுமுறையை நமது வெளியுறவுத் துறை பின்பற்றத் தயங்கவில்லை.
இதற்குக்
கைமாறாக அமெரிக்கா நமது பொருளாதாரத்தைப் பெருக்கவும், நமது பாதுகாப்பினைப் பலப்படுத்தவும் பெரும் உதவிகளைச் செய்யும் என்று மோடி அரசு எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், நம் தலையில் மண்ணை அள்ளிப் போட டிரம்ப் அரசு முடிவெடுத்திருப்பதுதான் நமக்கு இன்று ஏற்பட்டுள்ள சோகம்.
அமெரிக்கத்
தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் மிகக்குறைந்த வரியில் தடையின்றித் தாராளமாக அனுமதிக்காத எந்த நாட்டுடனும் அமெரிக்கா வியாபாரம் செய்யாது. அந்த நாட்டுப் பொருள்கள் அமெரிக்காவுக்கு உள்ளே வர தாறுமாறான இறக்குமதி
வரியையும் மற்றும் சில நாடுகளுக்கு அபராத வரிகளையும் டிரம்ப் அரசு விதித்து வருகிற வேளையில், தனது தனிப்பட்ட நட்பின் காரணமாக இந்தியாவுக்கு மட்டும் மிகக் குறைவான வரியைத்தான் விதிப்பார்கள் என்று நமது பிரதமர் எதிர்பார்த்திருந்த வேளையில், டிரம்ப்பின் அறிவிப்பு பேரிடியாக நம் தலையில் விழுந்துள்ளது.
ஆகஸ்டு
மாதத்திலிருந்து இந்தியப் பொருள்களுக்கு 25% வரி
என்றும், அது தவிர இரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருள்களையும் ஆயுதங்களையும் அதிகமாக இறக்குமதி செய்வதால் அதற்காகத் தனியாக அபராத வரியும் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டதைப்போல’, அமெரிக்காவை
நம்பி இப்போது நாடு அநாதரவாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சனநாயகம்,
மனித உரிமைகள், எல்லாருக்குமான வளர்ச்சி, உலக நாடுகளிடையே சமாதானம் நிறைந்த நல்லுறவு, அணு ஆயுதக் குறைப்பு, புவி வெப்பமயமாதலைத் தடுப்பது, ஏழை எளிய நாடுகளுக்குப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்று எந்த நல்ல சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இனிமேல் சம்பந்தமே இல்லை என்று பதவியேற்றவுடன் அறிவித்த டிரம்ப், ‘பணம்’ மட்டுமே தனது நோக்கம் என்பதை ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் கூறிவருகிறார். உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவர் என்ற ஆணவத்தின் உச்சத்தில் நிற்கும் அவர், உலக நாடுகள் காலங்காலமாகப் போற்றி வரும் சர்வதேச நிறுவனங்கள், உறவுகள், வியாபாரம், தகவல் பரிமாற்றம் போன்ற அனைத்தையும் தான் தோன்றித்தனமாக ஒவ்வொரு நாளும் சிதைத்து வருகிறார். உலகின் பல நாடுகள் தங்களின்
இருப்புக்கே அமெரிக்காவின் தயவு தேவைப்படுவதால் அவமானங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு அமைதி காக்கின்றன. இந்த நாடுகளின் வரிசையில் நம்மையும் நிற்க வைக்க டிரம்ப் நினைக்கின்றார்.
நாமும்
பெருமளவில் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சார்ந்து நிற்கிறோம். அமெரிக்காதான் நமது உற்பத்திகளின் பெரிய சந்தை. 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவோடு நமக்கு நடந்த வியாபாரத்தின் மொத்த மதிப்பு 124 பில்லியன் டாலர். நமது இறக்குமதி போக நம்மிடம் வணிக மிகுதியாக (trade
surplus) இருப்பது சுமார் 43 பில்லியன் டாலர். நமது மொத்த ஏற்றுமதியில் சுமார் 20% அமெரிக்காவுக்குச்
செல்கிறது.
இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையில் இருதரப்பு வணிகம் சம்பந்தமாகவும், இரண்டு தரப்பினரும் ஒத்துக்கொண்டு பல்வேறு ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட வேண்டிய வரிகள் சம்பந்தமாகவும் பேசி முடிவு செய்ய அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஐந்து முறைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. ஆறாவது மற்றும் இறுதி பேச்சுவார்த்தையினை இம்மாத இறுதியில் இந்தியாவில் நடந்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அது முடிவதற்குள் நம்மைப் பயமுறுத்தி நெருக்கடி கொடுப்பதற்காகவும், ஒத்துக்கொண்டு சரணடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று டிரம்ப் நம்புவதாலும் இப்படி ஒரு முரட்டுத்தனமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
சீனா,
கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக வலிமையான எதிர்வினை ஆற்றியுள்ளன. அத்தகைய தன்னம்பிக்கையும் சுயகௌரவமும் மோடி அரசுக்கு இருக்க முடியாது. இந்தியா-பாகிஸ்தான் மோதலை “நான்தான் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினேன்” என்று
டிரம்ப் கூறும்போது, மோடியும் மோடி அரசும் எப்படி மௌனம் காத்தார்களோ, அதைப்போல இப்போதும் அமைதியாக இருப்பது என்றே முடிவு செய்துள்ளனர்.
டிரம்ப்பின்
இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட, மோடியின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்கான பாதிப்புகள் அதிகம். டிரம்ப்பை எதிர்த்து மோடி எதிர்வினையாற்றினால், அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனம் அதானிமீது தொடர்ந்துள்ள மோசடிக் குற்றத்திற்கான கிரிமினல் வழக்கின் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும். அம்பானியும் அதானியும் அமெரிக்காவில் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்களைத் தவிர குஜராத்தைச் சார்ந்த பல பெருமுதலாளிகள் அமெரிக்காவில்
பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் டிரம்ப் அரசின் நிர்வாகத்தில் பல அதிகாரம் நிறைந்த
பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பா.ச.க.வுக்கும்,
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான டாலர் நன்கொடைகள் அமெரிக்காவிலிருந்தே வருவதாகக் கூறுகிறார்கள். இந்திய அரசும் மோடியும் டிரம்ப்பை எதிர்த்தால் இவர்களுடைய நிலைமை அமெரிக்காவில் மிகவும் சிக்கலாகிவிடும். அமெரிக்காவின் தயவில் பெரும் பணம் சம்பாதிப்பவர்களும் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதால், அமெரிக்காவையும் டிரம்ப்பையும் பகைத்துக் கொள்ள மோடி மிகவும் யோசிப்பார். ‘தனது நண்பர்களுக்காக இந்தியப் பொருளாதாரத்தை மோடி நாசம் செய்துவிட்டார்’ என்று
இராகுல்காந்தி அடிக்கடிக் கூறிவருவதன் காரணம் இதுவே. டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கு அவருடைய தனிப்பட்ட விருந்தினர்களாக அம்பானியும் அதானியும் அழைக்கப்பட்டு முக்கியமான இருக்கைகளில் உட்காரவைக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட செல்வாக்கை அவர்கள் இருவரும் இழக்க மோடி ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.
‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்தது’
என்பதைப்போல, அநியாயமாக வரிகளை விதித்ததோடு, அபராத வரிகளையும் விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். இரஷ்யா விலிருந்து ஆயுதங்களையும் பெருமளவில் பெட்ரோலிய பொருள்களையும் நாம் இறக்குமதி செய்வதால் அமெரிக்காவுக்கு நாம் தண்டம் கட்ட வேண்டுமாம்! நமக்குத் தேவையான பொருள்களை நாம் எங்கே வாங்கவேண்டும் என்பதைக்கூட டிரம்ப்தான் முடிவு செய்வார் என்றால், இந்தியாவை ‘அமெரிக்காவின் காலனி நாடு’ என்றுகூட அறிவித்துவிடலாமே!
டிரம்ப்பின்
தேர்தலுக்கு முன்னர் குஜராத் வந்த டிரம்ப் ‘மோடியை உலகின் மிகப்பெரிய தலைவர்’ என்று புகழ்ந்தார். இந்தியாவை, ‘உலகின் மிகச் சிறந்த நாடு, மிகப்பெரிய பொருளாதாரம்’ என்று
வர்ணித்தார். அதே டிரம்ப் இன்று இந்தியப் பொருளாதாரத்தை ‘செத்துப் போன பொருளாதாரம்’ என்றும்,
‘நாமும் இரஷ்யாவும் சேர்ந்து அழியப் போகிறோம்’
என்றும் சாபம் விடுகிறார். ‘இந்தியாவை எதிர்ப்பவர்களைப் பீரங்கி குண்டுகளால் சுட்டுப் பொசுக்கி விடுவேன்’
என்று இரண்டு நாள்களுக்கு முன்னால் பாராளுமன்றத்தில் கர்ஜித்த ‘56 இஞ்ச் மார்பு’ வாய் திறக்காமல் பயந்து மௌனம் காக்கிறது. சீனாவைப்போல ‘வா, ஒரு கை பார்க்கலாம்’ என்று சவால்விடக்கூடிய அளவுக்கு நமது பொருளாதாரத்தை மோடி அரசு கட்டமைக்கவில்லை.
டிரம்ப்
அரசின் இந்த ஒருதலைப்பட்சமான அதீத வரிவிதிப்பால் இந்தியா பல துறைகளில் தனது
ஏற்றுமதிச் சந்தையை இழக்க நேரிடும். குறிப்பாக, ஜவுளிகள், தங்க-வைர நகைகள், அணுசக்தி இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், முத்துகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள், தாது உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழ்நாடு மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் ஜவுளி ஆடைகள், தோல் பொருள்கள், மொபைல் போன்கள் போன்ற முக்கியத் தொழில்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
நம்மோடு
ஏற்றுமதியில் போட்டியிடுகின்ற நாடுகளுக்கும், நம்மைச் சுற்றி இருக்கின்ற அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவின் குறைந்த வரிவிதிப்பு நடைமுறையில் இருக்கும்போது, நமக்கு மட்டும் ஏற்றுமதி வரிகளை மிக அதிகமாகக் கூட்டுவதற்கு டிரம்ப் கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.
எழுபது
விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களாக இருக்கும்போது, இந்தியச் சந்தையினை அமெரிக்க விளைபொருள்களுக்குத் தடையின்றி, குறைந்த வரிவிதிப்பில் திறந்துவிட வேண்டும் என்ற டிரம்ப்பின் நிர்ப்பந்தத்திற்கு நாம் எப்படிப் பணிய முடியும்? மரபணுக்கள் மாற்றப்பட்ட விதைகளையும் பயிர்களையும் எப்படி அனுமதிக்க முடியும்? அதனால் நமது பாரம்பரிய விதைகளும் பயிர்களும் நிரந்தரமாக அழிந்துவிடுமே!
அமெரிக்கப்
பசுக்களின் பால் மற்றும் பால் பொருள்களைத் தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் நிர்ப்பந்திக்கிறார். அமெரிக்கப் பசுக்களுக்குக் கொடுக்கப்படும் தீனியில் மாட்டு இறைச்சியும், பிற மிருகங்களின் இரத்தமும் சேர்க்கப்படுகின்றன. அந்தப் பால் கெட்டுப்போகாமல் இருக்க நம் நாட்டு உணவு கலப்படத் தடைச்சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஏராளமான வேதிப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பாலை நமது நாட்டில் எப்படி அனுமதிக்க முடியும்?
நமது
பசுக்களின் தீவனத்தில் தாவரங்களும், தாவரப் பொருள்களுமே சேர்க்கப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை பசு என்பது ஒரு புனிதமான அடையாளம். பசுவின் பால் ஆலய அபிஷேகங்களுக்கும், விழா காலங்களில் இறைவழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கப் பசுவின் பாலைப் புனித காரியங்களுக்குப் பயன்படுத்த முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் கறவை மாடுகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அமெரிக்கப் பாலையும் பால் பொருள்களையும் வரைமுறை இல்லாமல் திறந்து விட்டால், அந்த மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்?
இவற்றில்
எல்லாம் சமரசத்திற்கு இடமே இல்லை என்பதை மோடி அரசு உரக்கக் கூற வேண்டும். கச்சா எண்ணெய் எங்கே மலிவாகக் கிடைக்கிறதோ அங்கே கொள்முதல் செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு. இறையாண்மை உள்ள ஒரு நாட்டிடம் அதற்குத் தேவையான பொருள்களை இங்கேதான் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை நமது பிரதமர் தைரியமாகக் கூறுவாரா?
ஒரு
வாரத்திற்கு முன்னதாகவே இரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.
வரலாற்றில்
மிகப்பெரிய வாய்ப்பினை இந்திய சனநாயகம் மோடிக்கு வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தப் பிரதமருக்கும் கிடைக்காத வளமான பொருளாதாரம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக நிபந்தனைகளே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் பெரும்பான்மை, கேள்வியே கேட்காமல் ஒரு பக்தர் சபைபோல செயல்படும் பா.ச.க.,
வரலாறு காணாத வரி வசூல், எந்நாளும் இல்லாத அந்நியச் செலவாணி கையிருப்பு, தொடர்ந்து 12 ஆண்டுகளாக வறட்சியே இல்லாத பருவ மழை, பிரதமரின் விருப்பம் அறிந்து செயல்படும் அரசு நிர்வாகம், ஊடகங்கள், அரசியல் சாசன நிறுவனங்கள் என்று இவ்வளவு சாதகங்கள் இந்தியாவில் எந்தப் பிரதமருக்கும் கிடைக்கவில்லை. இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப் பெற்ற பிரதமர், அவைகளை இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தினாரா? என்ற
கேள்விக்கு மோடியின் பதில் என்ன?
மோடி
பதவியிலிருந்த பத்தாண்டுகளும் வீண் ஆடம்பரங்களிலும் வெற்றுக் கோஷங்களிலுமே கழிந்தது. வருடத்தில் பாதி நாள்கள் வெளிநாட்டிலும், மீதி நாள்களை உள்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்களிலும் செலவிட்ட மோடி, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வழிகாட்டுதலையும் நிர்வாகத்தையும் தரவில்லை. மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும் ஒற்றுமை உணர்வினையும் வளர்த்தெடுக்க வேண்டிய மோடியும் பா.ச.க.வும் மோடி அரசும் இந்திய மக்களை மதம், சாதி, மாநிலம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்ததால், உண்மையான வளர்ச்சியும் முன்னேற்றமும் நாட்டுக்கு வாய்க்கவில்லை.
உள்நாட்டில்
மக்கள் மத்தியில் சமூகப் பதற்றம், எல்லைப் பகுதிகளில் நிரந்தரமான அச்சுறுத்தல்கள், அண்டை நாடுகளோடு பழுதாகிப்போன உறவுகள், சரிவை நோக்கி விரையும் பொருளாதாரம் என்று அனைத்து முனைகளிலும் தோற்று நிற்கும் மோடி அரசுக்கு வரும் நாள்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மிரட்டுவதற்கும்
ஓர் எல்லை உண்டு. பணிந்து போவதற்கும் ஒரு வரைமுறை உண்டு. ‘குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள்! குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்’
- எங்கள் ஊர் பழமொழி.