news-details
சிறப்புக்கட்டுரை
கறுப்பு தினம் - தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் சேர்க்கக் கோரி ‘கறுப்பு நாள்’உரிமைப் போராட்டப் பேரணி

ஆகஸ்டு 10-ஆம் தேதி இந்தியக் கிறித்தவர்கள் குறிப்பாக, தலித் கிறித்தவர்கள் 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களின் உத்தரவால் (1950, பத்தி 3), பாராளுமன்றத்தில் முறையான விவாதத்துக்கு உட்படாமலே கையெழுத்தானது. ‘இந்துகள் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள் என எழுதப்பட்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் நாள் இச்சட்டத்தைத்  தனி அதிகாரத்தின் கீழ் கையெழுத்திட்டார் குடியரத் தலைவர். இந்த வரலாற்று அநீதிக்கு எதிராக ‘கறுப்பு நாள் என்ற பெயரில் நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டன.

தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவரை மீண்டும் பட்டியல் இனப் பிரிவிற்கு இணைத்தது. இதற்குப் பிறகு 1993-இல் பௌத்த மதத்தைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் பட்டியலினப் பிரிவில் இணைக்கப்பட்டனர். ஆனால், இன்றுவரை கிறித்தவ மற்றும் இசுலாமியப் பட்டியல் இனத்தவரைத் தங்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுவதற்கு இந்த மதங்களைக் காரணம் காட்டிக் கடந்த 75 ஆண்டு காலமாக கிறித்தவப் பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

மேலும், 2005, இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமையாலும், உச்ச நீதிமன்றத்தில் 2004 முதல் நடைபெறும் SC அந்தஸ்தைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமலும் தமிழ்நாடு அரசின் தனித்தீர் மானத்தைத் தாமதித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இதனால் தலித் கிறித்தவர்கள் தலைமுறைதோறும் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சாரம், சட்டப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த அந்த நாள் தலித் கிறித்தவர்களின் வாழ்நாளிலே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத கறுப்பு நாள் எனக் கருத வேண்டியுள்ளது.

எனவே, ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, 1950 பத்தி 3-ஐ இரத்து செய்து தலித் கிறித்தவர், தலித் இசுலாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக ஆகஸ்டு 10 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்டு, பேரணிகளும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதம் என்பது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை அங்கீகரிக்க இடையூறாக இருக்கக் கூடாது என்றும், சமத்துவத்திற்காக மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தலித் சமூகங்களும் ஒன்றுபடுவது அவசியம் என்றும் வலியுறுத்திய பேரணியில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வலியுறுத்துவது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள், தென்னிந்தியத் திரு அவை பேராயர்கள், தமிழ்நாடு லூத்தரன் திரு அவை ஆயர்கள், பிற மதத் தலைவர்கள் (இந்து, முஸ்லிம், பௌத்த, சீக்கிய), அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சமூக  இயக்கங்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள், இளையோர், மறைமாவட்ட  SC\\ST பணிக்குழுவின் செயலர் தந்தையர்கள், தலித் கிறித்தவ மக்கள், பொதுக்குழு, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிர்வுகள் கூட்டமைப்பு, தோழமை அமைப்புகள்,  இயக்கங்கள்,  மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுக்கூட்டங்களைக் காவல்துறையினரின் ஒப்புதலோடு நடத்தி, அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களை வழங்கினார்கள்.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில், இயக்குநர் அருள்தந்தை மரிய ஜான்போஸ்கோ (SC\\ST பணியகம்) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் SC நிலைப்பாட்டைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமல் இருப்பதோடு, தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தையும், கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமையேற்க, அருள்தந்தை ஹென்றி ஜெரோம் அவர்கள் வரவேற்புரை வழங்க, பணிக் குழுச் செயலர் அருள்தந்தை சந்தியாகப்பன் அவர்கள் தொடக்க உரையாற்றிய கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ‘எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இறுதியில், ஒன்றிய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எழுப்பப்பட்டன.

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் வழிகாட்டுதலில், முதன்மைக்குரு பேரருள்தந்தை குழந்தைசாமி தலைமை தாங்க, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.செ. சிந்தனைச் செல்வன் எழுச்சியுரை வழங்கினார்.              

கோயம்புத்தூர் மறைமாவட்டம்

அருள்பணி. டெல்லிஸ் ரோச் ஒரு நுண்ணறிவு மிக்க உரையை நிகழ்த்தினார். சம உரிமைகளைக் கோருவதில் தொடர்ந்து வாதிடுதல் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை அவர் விரிவாகக் கூறினார். எதிர்ப்பின் அடையாளமாக அருள்பணி. ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் ஒரு கறுப்புக் கொடியை ஏற்றினார்.   விழிப்புணர்வை ஏற்படுத்த தலித் கிறித்தவர்களின் போராட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் துண்டுப் பிரசுரங்களும் பரப்பப்பட்டன.

மேலும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் SC/ST பணிக்குழுத் தலைவர் ஆயர் ஜீவானந்தம் மற்றும் செயலாளர் அருள்தந்தை நித்யா OFM. Cap அவர்களால், அனைத்து மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் SC/ST ஆணையச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்களின் வலையமைப்பின் மூலம் ஏனைய மறைமாவட்டங்களிலும்  தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டப் பேரணியானது ஒருங்கிணைக்கப்பட்டது.  ‘தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்களுடன் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.