news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (10-08-2025) சஞா 66:18-21; எபி 11:1-2,8-19; லூக் 12:32-48

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு நற்செயல்கள் செய்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும். உயிரோட்டமுள்ள செயல்கள் வழியாக இறைமையை வெளிப்படுத்துவதே உண்மையான உயிருள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கை கொண்டவர்கள் விழிப்போடு தம்முடைய கடமைகளையும் நற்செயல்களையும் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். இவர்களையேவிழிப்பாயிருக்கும் பணியாளர்கள்என்று இயேசு குறிப்பிடுகிறார். நாம் இறைவன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை உண்மையென்றால், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிறைவிற்காகவும் உழைப்பவர்களாக வாழவேண்டும்.

நம் நம்பிக்கை உயிரோட்டமானது என்பதற்கு நாம் புரிகின்ற நற்செயல்களே அடையாளமாக இருக்கின்றன. “உயிர் இல்லாத உடல்போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததேஎன்கிறார் புனித யாக்கோபு. நம் வாழ்க்கையில் துன்பமோ, வறுமையோ, ஏழ்மையோ, துயரமோ, கண்ணீரோ, சோதனையோ எது வந்தாலும், கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி அடையாது, ‘ஆண்டவர் பார்த்துக்கொள்வார்என்று வாழும்போது, அவர் நமக்கு முன்னே சென்று அனைத்தையும் ஆசிராக மாற்றுவார்நாம் நம்பிக்கையில் நிலைத்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் மக்களாக வாழவும், நம்முடைய  நற்செயல்கள் வழியாக இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம் கடவுள் நம்பிக்கை உள்ளவர். நாம் கேட்பதற்கு முன்னதாகவே நம் தேவையறிந்து கொடுக்கக்கூடியவர். தமது பாதுகாப்பையும் உடனிருப்பையும் நாளும் கொடுத்துக் காத்து வருபவர். அவர் மீது நம்பிக்கை கொண்டு வாழும் நமக்கு மீட்பையும் நலன்களையும் தந்து மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்துவார் என்பதை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் அனைவரும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கிறோம். நம் வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் இறைவனிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும். நம் முன்னோரை வழிநடத்திய வாக்கு மாறாத தேவன், நம்மையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ அழைக்கும் 2-ஆம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாக விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைக்கு நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்களுக்காய் உமக்கு நன்றிகூறுகின்றோம். காலத்தின் தேவையை அறிந்து, கருத்தாய் செய்யக்கூடிய ஞானத்தை எம் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாதுகாக்கும் பரம்பொருளே எம் ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு இந்நாள் வரை நீர் செய்த நன்மைகளுக்கு நன்றிகூறுகின்றோம். நாங்கள் வேண்டுவதற்கு மேலாகவே அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்துகின்ற உமது பேரன்பில் நிலைத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது உடனிருத்தலை அன்றாட வாழ்வில் நாங்கள் அனுபவிக்கவும், எம்முடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் நாங்கள் உடனிருக்கவும், நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! எமது மறைமாவட்டத்திலும் பங்கிலும் எம் குடும்பத்திலும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதியும். இந்த அறிவியல் உலகில் உம்மை அறிவதில் ஆர்வம் கொண்டு வாழத் தேவையான ஞானத்தை எமது குழந்தைகளுக்கு  வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.