திருத்தலங்கள் பற்றிய திரு அவை ஆவணங்களில் காணப்படும் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
1. ஓர் ஆலயம் அல்லது ஒரு சிற்றாலயம் ‘திருத்தலம்’ என்று அழைக்கப்படுவதற்குத் தலத் திரு அவையினுடைய மேலதிகாரியின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.
2. மறைமாவட்டதில்
உள்ள ஒவ்வொரு திருத்தலத்திற்கும் மறைமாவட்ட ஆயரால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் (statues) இருக்க வேண்டும். அதில் அத்திருத்தலத்தின் நோக்கம், அதிபரின் அதிகாரம், சொத்துகளின் உடைமையுரிமை மற்றும் நிர்வாகம் போன்றவை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும்.
3. ஒரு
திருத்தலம் தேசியத் திருத்தலம் (National shrine)
என்று அழைக்கப்படுவதற்கு அந் நாட்டு ஆயர் பேரவையின் அங்கீகாரமும், சர்வதேசத் திருத்தலம் (International shrine)
என்று அழைக்கப்படுவதற்கு உரோமைத் திரு ஆட்சிப் பீடத்தின் அங்கீகாரமும் தேவை.
4. திருத்தலங்களில்
தரமான, எளிமையான திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். திருத்தப்பட்ட திருவழிபாட்டு
நூலில் (General Instruction of the roman
mission, 2000) உள்ள விதிமுறைகளின்படி திருவழிபாடு நடத்தப்படவேண்டும்.
5. திருத்தலங்களில்
ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மனத்துயர் வழிபாடு நடத்தி, திருப்பயணிகளைத் தகுந்தமுறையில் தயாரித்து, ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கப் போதுமான இடத்துடன் கூடிய ஒப்புரவுச் சிற்றாலயம் இருப்பது விரும்பத்தக்கது. திருப்பயணிகளின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு மொழிகளைத் தெரிந்த ஒப்புரவுத் திருப்பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.
6. நோயாளிகள்
பலர் திருத்தலங்களை நாடி வருவதால், அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, திருச்சடங்கு நூல் விதிமுறைகளின்படி திருப்பலியில் நோயில் பூசுதல் அருளடையாளத்தை வழங்கலாம்.
7. திருத்தலங்களில்
நடைபெறும் திருப்பயணிகளின் வழிபாட்டு நிகழ்வுகளில் திருப்புகழ்மாலை (Liturgy of the hours)
குறிப்பாக, காலைத் திருப்புகழ் (Lauds) மற்றும்
மாலைத் திருப்புகழ் (vespers) கொண்டாட்டத்திற்குத் திருத்தல அதிபர் ஏற்பாடு செய்யவேண்டும்.
8. இறைவார்த்தையை
அறிவிக்கும் வாய்ப்பைத் திருத்தலங்கள் விவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மலைப்பொழிவின் போதனைகள், இறைவனின் எல்லையற்ற அன்பு மற்றும் பராமரிப்பு, அன்புக் கட்டளை, மீட்பளிக்கும் சிலுவையின் அருள், மனமாற்றத்திற்கான அழைப்பு, திருவிவிலிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும் சீடத்துவம் போன்ற தூதுரைகள் இந்த அறிவிப்பில் இடம்பெற வேண்டும்.
9. திருத்தலங்களின்
பிறரன்புப் பணிகள் கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துவதால், அங்கு வருகை தரும் ஏழைகள், எளியோர், முதியோர், நோயாளிகள், விளிம்பு நிலையினர் போன்றோருக்கு உரிய விருந்தோம்பலும் கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.
10. திருத்தலங்களில் குறிப்பாக, மரியன்னைக்கு
உரியவற்றில் கிறித்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும், பிரிந்திருக்கும் திரு அவைகளின் கிறித்தவர்களை ஒருங்கிணைத்து, கிறித்தவ ஒன்றிப்பு வாரம் மற்றும் உயிர்ப்பு, தூய ஆவியாரின் விழாக்களின்பொழுது சேர்ந்து செபிப்பது விரும்பத்தக்கது.
இறுதியாக,
சட்ட முறையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு திருத்தலம், திருப்பயணிகளின் அருள்பணிகளுக்கு இடையூறு இல்லாமல், விதிவிலக்காக, பங்கு ஆலயமாகவோ அல்லது அதன் கிளைக் கோயிலாகவோ செயல்படலாம். ஆனால், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு பங்கு ஆலயத்தையோ, அதன் கிளைக்கோவிலையோ அல்லது ஒரு சிற்றாலயத்தையோ ‘திருத்தலம்’ என்று
தன்னிச்சையாக அறிவித்து விளம்பரம் செய்வது திரு அவைச் சட்டங்களுக்கு முரணானது மட்டுமல்லாமல், மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதும் ஆகும்.
(தொடரும்)