news-details
சிறப்புக்கட்டுரை
திண்ணைவாசி (வலையும் வாழ்வும் – 24)

இராமையாவிற்கு முதுமை என்ற தீராத நோய். நாட்டு வைத்தியம் முதல் ஆங்கில மருத்துவம் வரை பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. முதுமைக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு முதுமை என்பது ஒரு நோய். முதியவர் என்பவர் ஒரு நோயாளர்.

இராமையா அந்த ஊரில் மிக முக்கியமானவர். வசதியாக வாழ்ந்தவர். அந்த ஊரிலேயே பெரிய வீடு ஒன்றைக் கட்டினார். யார் கண் பட்டதோ தெரியாது, தன் மனைவி சரோஜாவின் திடீர் மரணம் இராமையாவைத் தடுமாறச்செய்தது. இராணித் தேனி இல்லாத தேன்கூடு கலைந்துபோகும் என்பதுபோல சரோஜா இல்லாத அந்தக் குடும்பம் நிலைகுலைந்துப் போனது. எல்லாவற்றையும் இழந்தாலும் தாயில்லாத தன் மகன் அகிலனை ஒரு தாயைப்போல பராமரித்து, படிக்கவைத்து திருமணமும் செய்து வைத்தார் இராமையா.

மருமகள் கீதா கெட்டிக்காரிதான். ஈரோடு டவுனில் பிறந்து வளர்ந்தவள். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்திருக்கிறாள். தொடக்கத்தில் புல்லாணி கிராம வாழ்க்கை அவளுக்குச் சிரமமாகதான் இருந்தது. நிறையவே சுத்தம் பார்ப்பாள். இராமையாவின் முதுமையும் சுத்தமின்மையும் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. வெற்றிலைக்கறைப் பற்கள், மஞ்சள் குளித்த ஆடை, வேப்பெண்ணை நெடி... கீதாவிற்கு அவரைப் பார்க்கும்போதே எரிச்சலைத்தான் தந்தது.

தனக்குப் பிறந்த மகனை அவள் இராமையாவிடம் இதுவரை கொடுத்ததில்லை. ஆசையாய் கடைத்தெருவிலிருந்து மிட்டாய் வாங்கி குழந்தைக்குக் கொடுப்பார். “மாமா! அவனுக்கு நீங்க ஒண்ணும் வாங்கித் தரவேண்டாம். இட்ஸ் நாட் ஹைஜீனிக் என்பாள் கீதா.

ஒருமுறை குழந்தை, தாத்தாவின் மடியிலே புரண்டு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையிடமிருந்து பஞ்சுமிட்டாயைப் பறித்தெடுப்பதுபோல தன் மாமனாரிடமிருந்து குழந்தையைப் பறித்தெடுத்தாள். இராமையாவால் இந்தத் ‘தீண்டாமைக் கொடுமையை யாரிடமும் கூறமுடியவில்லை. ‘சரோஜா போனபிறகு அகிலனை நான்தான் சிறிய வயதிலிருந்து ஒரு தாயா வளர்த்தேன். நீ எனக்கே பிள்ளை வளர்க்க சொல்லித்தாரியா?’ என்று சில நேரங்களில் மருமகளிடம் கேட்க வேண்டும்மென்று தோன்றும். ஆனாலும், மனதிற்குள்ளேயே எல்லா உணர்வுகளையும் மறைத்துவைப்பார்.

அப்பா! நீங்க உங்க ரூம்ம கொஞ்சம் சுத்தமா வச்சிகோங்க. அங்கிருந்து ஸ்மெல் வருதாம். குழந்தைக்கு அது அலர்ஜி ஆகுதாம் என்று ஒருநாள் தன் மகன் அகிலனே தன்னிடம் கூறியதை இராமையாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்றே பெட்டிப்படுக்கையை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிட்டார். “நாமளா அவர அனுப்பினோம். அவர்தானே போனார்! இனி அங்கேயே கிடக்கட்டும் - கீதாவின் கடுஞ்சொல்லை வழக்கம்போல அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நாளிலிருந்து இராமையா தன் வீட்டுத் திண்ணையில்தான் வசிக்கிறார். அவரே வெளியே தனியாகச் சமைக்கிறார். இரவில் திண்ணையில் படுத்துக்கொள்கிறார். இப்போதெல்லாம் அந்தச் சிறு பையன்கூட தாத்தா பக்கம் வருவதில்லை. மாட்டுவண்டியின் சக்கரம் கழன்று சாலையில் கட்டுப்பாடின்றி ஓடுவதுபோல ஆண்டுகளும் பல கட்டுப்பாடின்றி வேகமாக ஓடின. முதுமையில் வாடிய அந்தக் கிழவன், தான் கட்டிய வீட்டுத் திண்ணையில் பல ஆண்டுகளாய் தீண்டத்தகாதவனாகவே கிடந்தான். குளிரிலும் மழையிலும் நோயிலும் வேதனையிலும் அங்கேயே கிடந்தான். மகனும் மருமகளும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த நாளே வீட்டிற்குள் அழைப்பார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டுவிட்டார் போலும்! அது நடக்கவேயில்லை. இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறு ஒன்றும் தென்படவில்லை.

ஒருநாள் காலைக் கதிரவன் எழும்போது அவர் மட்டும் திண்ணைப் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அடக்கச்சடங்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆடம்பரமாக நடந்து முடிந்தன. எந்தக் குற்றவுணர்வுமில்லாமல் அகிலன் இராமையாவின் புகைப்படத்தை அந்த மச்சுவீட்டில் மாட்டப்பட்ட தன் தாய் சரோஜாவின் பக்கத்திலே மாட்டிவைத்து மாலையிட்டான். இத்தனை ஆண்டுகள் திண்ணையிலேயே மக்கிக்கிடந்தவர் புகைப்பட வடிவிலே மச்சுவீட்டு மகாராசரானார். தீண்டத்தகாதவர் இன்று தீட்சிதர் ஆனார்!

அகிலன், அவன் மனைவி கீதா மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் அந்தப் புகைப்படத்தின் முன்பாக நின்றுகொண்டு ஒரு ‘செல்பி எடுத்துக் கொண்டார்கள். ‘வீ மிஸ் யூ அப்பா!’ என்று தன் ‘பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுத் தன் நண்பர்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பெற்றுக்கொண்டான் அகிலன். நடந்ததனைத்தையும் அந்த வீட்டுத் திண்ணை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இராமையா சுத்தமில்லாதவர், அழுக்கு மூட்டை என்றெல்லாம் கதைகட்டி அவரைத் தன் கணவரிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரித்து வீட்டை விட்டு வெளியேறச் செய்து திண்ணைவாசியாக்கிய கீதா இன்றைய ஊடக மொழியில் ஓர் ‘இன்புளுவன்சர் (Influencer).

இன்றைய வலைத்தள உலகில் செல்வாக்காளர்கள் (Influencers) அதிகம் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். பத்து இலட்சத்திற்கும் மேல் ‘பின் தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர் கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மெகா இன்புளுவன்சர்ஸ் (Mega-influencers) என்று அழைக்கிறோம். அதுவே ஓர் இலட்சம் முதல் பத்து இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மேக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Macro-influencers) என்று அழைக்கிறோம். மேலும், ஆயிரம் முதல் ஓர் இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers)  கொண்டிருப்பவர்களை ‘மைக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Micro-influencers) என்று அழைக்கிறோம். இதுவே ‘நேனோ இன்புளுவன்சர்ஸ் (nano-influencers)  என்றும் ஆயிரத்திற்கும் குறைவாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) என்று அழைக்கிறோம்.

உற்பத்தியாளர்களோடு கைகோர்த்துக்கொண்டு பொருளைச் சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துவதில் சமூக ஊடகச் செல்வாக்காளர்களின் (Influencers) பங்கு மிக அதிகமாகவே உள்ளது. டிஜிட்டல் உலகில் இதனையே செல்வாக்காளர்வழி சந்தைப்படுத்துதல் (Influencer- Marketing) என்கின்றனர்.

சமூக ஊடகங்களில் ‘இன்புளூவன்சர்கள் என்று அறியப்படுபவர்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, ஒருவருடைய அல்லது ஒரு கட்சி சார்ந்த கருத்தியலையும், தன்னைப் பின்தொடர்பவர்களிடம் சந்தைப்படுத்துகின்றனர். இதனை ‘சோசியல் இன்ஜினியரிங் (Social Engineering) என்கிறோம். நாம் எதைப் பேச வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எதைப் பார்க்கவேண்டும்? யாருக்கு வாக்களிக்கவேண்டும்? எங்குச் செல்லவேண்டும்? என்ன படிக்கவேண்டும்? எதை உண்ணவேண்டும்? என்பதைப் பல நேரம் நமக்குத் தெரியாமலேயே தீர்மானிப்பவர்களாகவும் திணிப்பவர்களாகவும் இந்த ‘இன்புளூவன்சர்கள் இருக்கின்றார்கள்.

சமூக ஊடகங்களில் வரும் இன்புளூவன்சர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; விமர்சனப் பார்வையோடு அவர்களையும் அவர்களின் கருத்துருவாக்கத்தையும் அணுகுவது நல்லது!