news-details
தலையங்கம்
ஆகஸ்டு 10 - ‘கறுப்பு தினம்’

பன்னெடுங்காலமாக இந்தியச் சமூகக் கட்டமைப்பு ஏதோ ஒருவகையில் பிளவுபட்டே கிடக்கிறது. பிளவுபடுத்தும் பல்வேறு சக்திகளால் அது இன்றும் இன்னும் கூறுபோடப்பட்டுக்கொண்டே இருப்பதுதான் மிகவும் அவலமான சூழல்!

உணவு, உடை, கலாச்சாரப் பண்பாடு எனும் மக்கள் வேறுபாடுகளுக்கான காரணிகள் நீளும் பட்டியலில்... மதம், சாதி, மொழி, இனம் என்னும் கூறுகளும் தவிர்க்க முடியாததாகிப்போயின. எல்லாத் தளங்களிலும் சேர்ந்து செயல்படுவதும், இணைந்து வளர்நிலை காண்பதும், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதுமே ஒரு சமுதாயம் சிறப்பதற்கான உன்னதமான வழி. பிரித்துப் பார்ப்பதும் பிரிந்து கிடப்பதும் அறியாமையின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமைபாராட்டும் இந்தியத் திருநாட்டில், வேதகாலம் தொட்டே மறைமுகமாகவும், இன்று வெளிப்படையாகவும் தொழிலை, சாதிப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தந்திர சூழ்ச்சியால் சிலர் பிரிவினையை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மேல்தட்டு, அடித்தட்டு என்னும் வர்க்கக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அடித்தட்டில்அடுத்தடுத்துத் தட்டுகள்இருப்பதாகச் சமூகத்தைத் தங்கள் வசதிகளுக்கேற்றவாறு இன்றும் கட்டமைத்துக்கொள்கிறார்கள்.

ஒருசாராரின் சொர்க்கமாகவும் ஏற்றத்தாழ்வின் இருப்பிடமாகவும் இருந்த இந்து மதத்தின் சாதிக் கொடுமைகளைக் கண்ட அண்ணல் அம்பேத்கர், “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்என்றுரைத்தார். கசப்பான தனது உணர்வை வெளிப்படுத்திய அவர், “இந்து மதம், உயர்சாதி மனிதனின் சொர்க்கம்; சாமானிய மனிதன் மீளமுடியாத நரகம். சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்ம குணம்; ஏற்றத்தாழ்வின் மற்றொரு பெயர்தான் இந்து மதம்என்றார்ஒன்றிணையும் சமூகத்தைத் தடுப்பதே சாதியின் தந்திரம் எனக் கண்ட அவர், “வர்க்க வேற்றுமையை விட சாதிய வேற்றுமையே, இங்கு மனிதச் சமூகத்தை மிகவும் பெரிதளவில் இழிவுபடுத்துகிறதுஎன்றும் உரக்கக் கூறினார்.

இந்திய மண்ணில் படிந்து கிடந்த சாதியக் கட்டமைப்பு எனும் இருளிலிருந்து, சமூகத்தின் சமத்துவப் புரட்சிக்கான விடியல் நிறைந்த சிந்தனைகளை விதைத்த ஆதவன் அவர். ஆதிக்க மனநிலையின் அடித்தளம் தகர்த்த புரட்சியாளர் அவர். தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இந்து மதத்தோடு இருக்கும் தொடர்பை முற்றாக அறுத்தெறிய முனைப்பாக நின்ற அம்பேத்கர், பின்னாளில் தன்னைப் புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.

தீண்டாமை தொடரும் இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்குவதாக 1932, ஆகஸ்டு 17 அன்று அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்  மக்டொனால்டு. ஆயினும், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர் மகாத்மா காந்தி. தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த இங்கிலாந்து அரசு சதிசெய்வதாகக் கூறிஎரவாடாசிறையில் உண்ணாநோன்பில் ஈடுபட்டவர் அவர்.

வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் பட்டியல் இன மக்கள் இன, மத, வர்க்கக் கட்டமைப்பில் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து இந்திய அரசியல்  அமைப்புச் சட்டம் (பிரிவு 25-28) வழங்கிய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆயினும், தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே தக்கவைத்துக்கொள்ள சிறப்புச் சலுகைகளும் தீண்டாமை ஒழிப்புச் சிந்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அப்போது, “அரசியலில் மதத்திற்கு எந்த வேலையும் இல்லை என்பவர்கள், மதம் என்றால் என்ன என்பதை அறியாதவர்கள்என்று தனதுசத்திய சோதனையில் எழுதினார் மகாத்மா காந்தி. மத உணர்வு மிக்கவர்கள் அற வழிப்பட்ட அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் பிறந்த அவருடைய கருத்து அது. ஆனால், அதே காந்தி பின்னாளில்மதம் என் சொந்த விவகாரம்; அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லைஎன்றும் முழங்கினார்.

உண்மை...

தெளிந்த நீரைப் போன்றது;

அறிவுஜீவிகள்

அந்த நீர் இருக்கும்

குட்டையைக் குழப்பிச்

சேறாக்கி விடுகிறார்கள்

என்றகவிக்கோஅப்துல் ரகுமானின் வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன.

மேலும், “இந்தியாவில் இந்துகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்கள்; இந்தியாவைத் தங்கள் நாடாகக் கொண்டிருக்கும் இந்துகள், முஸ்லிம்கள். பார்சிகள், கிறித்தவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மக்களே. உலகின் எந்தப் பகுதியிலும் ஒரே தேசிய சமுதாயம் என்பது ஒரே மதம் என்ற நிலையில் இருந்ததில்லை, இந்தியாவிலும் அப்படி இல்லைஎன்றுஇந்திய சுயராஜ்யம்எனும் தனது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டவரும் காந்திதான்!

1949, நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950, சனவரி 26 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம். இந்தியாவின் ஆன்மாவாக, உயிர்நாடியாக விளங்கும் இந்த விரிவான ஆவணமானது, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, அதன் எல்லா அமைப்புகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அவர்களின் கடமைகள் என யாவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவை இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற மக்களாட்சி கொண்ட நாடாக உலகிற்கு அடையாளப்படுத்துவதும் இந்த ஆவணமே! சமூக நீதி, மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் அடிப்படைக் கூறுகளை, உரிமைகளை உறுதி செய்வதும் இந்த ஆவணமே!

ஆயினும், இந்த ஆவணம் வெளிவந்த ஏழு மாதங்களுக்குள், 1950, ஆகஸ்டு 10 அன்று இந்து மதத்திலிருந்து கிறித்தவம் அல்லது இஸ்லாத்திற்கு மாறியவர்களுக்குப் பட்டியல் சாதி உரிமையை மறுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் வேதனையின் உச்சம். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குத் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் பெருமளவில் வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்தச் சட்டத் திருத்தத்தால் கிறித்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு மாறுபவர்களுக்குப் பட்டியல் சாதி (SC) உரிமம் மறுக்கப்பட்டது. இத்தகைய நீதியற்ற செயலால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கக்கூடிய இடஒதுக்கீடு கிறித்தவ, இஸ்லாமிய தலித் மக்களுக்கு முற்றிலுமாகத் தடைபடுகிறது.

தொடர்ந்துவரும் இந்தப் பாகுபாட்டை மதச்சார்பற்றதாக மாற்றவும், இந்து தலித்துகள் பெறும் சலுகைகளும் உரிமைகளும் கிறித்தவ, இஸ்லாமிய தலித்துகளும் பெறும் வகையில் ஒன்றிய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதும் எமது நெடுநாள் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. பட்டியல் சாதி வரையறை மீதான மத அடிப்படையிலான கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என நீதியரசர் இரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரை செய்தபோதும் ஒன்றிய அரசு அதற்கான முயற்சிகளை முன்னெடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஏறக்குறைய 74 ஆண்டுகளாகத் தொடரும் இந்த முரண்பட்ட நிலைப்பாடு முடிவுக்கு வர வேண்டும் என்பதே எமது நெடுநாள் கோரிக்கை.

இத்தகைய சூழலில், உரிமை மீட்புக்கான செயல்பாடுகள் இயக்கங்களாகவும் போராட்டங்களாகவும் முன்னெடுக்கப்பட்டதும்தான் வரலாறு சொல்லும் பதிவுகள். குடிமை உரிமைகள் இயக்கம் (Civil Rights Movement) என்பது சட்டத்தின் முன் எல்லாருக்கும் சம உரிமை என முழங்கிய உலகளாவிய அரசியல் இயக்கங்களில் ஒன்று.  1954 முதல் 1968-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இனப்பிரிவினை மற்றும் பாகுபாட்டைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்திய ஒரு சமூக அரசியல் இயக்கமாகப் பிறப்பெடுத்தஅமெரிக்கக் குடிமை உரிமைகள் இயக்கம்குறிப்பிடத்தக்க சட்ட மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய வழிவகுத்தது என்பதும் வரலாறு.

குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோரின் முயற்சியில் புதைந்திருப்பதுபோல, சமூக மாற்றத்திற்கான எழுச்சி, உரிமையை மீட்பதற்கான புரட்சியில் பொதிந்திருக்கிறது. இயக்கமாக ஒன்றிணைவதும், உரிமைகள் மீட்கக் குரல் கொடுப்பதும் இன்று காலத்தின் கட்டாயமாகிறது.

ஆகஸ்டு 10-‘கறுப்பு தினம்அத்தகைய செயல்பாடுகளுக்கான முன்னோட்டமாக அமையட்டும்.

தடைகளைக் கண்டு செய்வதறியாமல்

திரும்ப நினைக்கும் நதி எங்குமில்லை;

நமது இலக்கை அடையும்வரை

விரைந்து சென்றால் என்றும் தோல்வியில்லை!’

எழுந்திடுவோம்; இணைந்திடுவோம்; விரைவில் வென்றிடுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்