பா.ச.க. கட்சி என்பது ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு; இது இந்திய அரசியலின் இந்துத்துவா முகமும் முக மூடியுமாகும். மோடியும் அமித்ஷாவும் தன் தாய்வீடான ஆர்.எஸ். எஸ். அமைப்பிற்கு இணங்க மறுக்கிறார்கள்; பதவி மோகத்தில் பிடிவாதம் பிடிக்கிறார்கள். “75 வயதானால் புதியவர்களுக்கு வழிவிட அமைப்பு, கட்சி, ஆட்சி என அனைத்துப் பொறுப்புகளிலிருந்து தானே விலக முன்வரவேண்டும்” என்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமைப்பீடம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதிகள் பா.ச.க.வுக்குப் பொருந்தாது என மோடியின் துதிபாடிகள் வியாக்கியானம் பேசுகிறார்கள்.
‘ஆர்.எஸ்.எஸ். பெரியதா? பா.ச.க.
பெரியதா?’ என்ற கேள்விக்கான விடை, ‘ஆர்.எஸ்.எஸ். பெரியது’ என்றே முடிவாகும். இராமர் கோவில் திறப்பு விழாவில் முதல் மரியாதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்குத் தரப்பட்டது. இரண்டாம் மரியாதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகிக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் மரியாதை இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரசாதத் தேங்காயைத் தவறுதலாக மோடிக்குத் தர நீண்ட கரம்
இழுக்கப்பட்டது. அது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றது.
பா.ச.க.வில்
75 வயதானால் பதவி விலக வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், ஜஸ்வந்த் சிங், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு இது செயல்முறையானது. இவர்கள் 75 வயதை எட்டும்முன் வயதைக் காரணம் காட்டி ‘சீட்’ மறுக்கப்பட்டது. நம்மூர் ஹெச். இராஜாவுக்கும் இவ்விதி பொருந்தியது. இல. கணேசன் அவர்களுக்கு மட்டும் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். என்பதால் ஆளுநராகப் பதவி தொடர்கிறார்.
“75 வயதானால் தானாகப் பதவி விலகவேண்டும், மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும்” என்று
ஜூலை 09 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார். இதைக் கூறுகிற மோகன் பகவத் அவர்களுக்குச் செப்டம்பர் 11-இல் 75 வயதாகிறது. பகவத், தான் பதவி விலகும்முன் புதிய ஆர்.எஸ்.எஸ். தலைவரையும், பா.ச.க.
தேசியத் தலைவரையும், புதிய பிரதமரையும் அடையாளம் காணவேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த தத்தாத்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதே மேல் மட்டத்தில் கசியும் தகவல். இவர்தான் சனவரி 2025-இல் இந்திய அரசியல் சாசனச் சட்ட முகப்பில் ‘சமதர்ம சமயச் சார்பற்ற’
என்ற வரிகளை நீக்கவேண்டும் எனப் பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ச.க. கட்சிக்கு
நட்டாவுக்குப் பிறகு ‘யார் அடுத்தத் தலைவர்?’ என்ற போட்டி நடக்கிறது. மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணி அதிரடியாக நடக்கிறது. அதன் முடிவில் பா.ச.க.
தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். நிதின்
கட்காரி அல்லது நிர்மலா சீதாராமன் என்ற இருவர் பெயரும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பேசப்படுகிறது. சரி,
‘மோடிக்குப் பின் அடுத்தப் பிரதமர் யார்?’ என்ற கேள்விக்கு இராஜ்நாத் சிங் பெயரை ஆர்.எஸ்.எஸ். முன்மொழிகிறது. அடுத்த 2029 மக்களவைத் தேர்தலுக்கு ஆர்.எஸ்.எஸ். தன் செல்லப்பிள்ளையான உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை முன்நிறுத்தத் திட்டம் தீட்டுகிறது.
பிரதமர்
மோடி செப்டம்பர் 17-இல் தனது 75 வயதில் ஓய்வு பெறவேண்டும். மோடி ஓய்வு பெறுவாரா? என்பது பெருங்கேள்வி. பா.ச.க.
மூத்த தலைவர்கள், ‘மோடியின் முகமே பா.ச.க.வை மூன்று முறை
ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அவரே தொடர்வார்’
என்கிறார்கள்.
மகாராஷ்டிரா முதல்வர் பட்னா விஸ் ஒரு படி மேலே சென்று கூறுகிறார்: “அப்பா உயிரோடு இருக்கும்போதே அடுத்த வாரிசு யார்? என்ற பேச்சு தேவை இல்லை; இது அடிப்படையில் மொகலாயர்களின் கலாச்சாரம்” என்கிறார்.
வாருங்கள்,
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் 75 வயது ஓய்வு பற்றிய வரலாற்றைப் புரட்டுவோம்.
2014-2016-களில் குஜராத்
முதல்வராக இருந்தவர் ஆனந்தி பென் பட்டேல். அவருக்கு 2016, நவம்பரில் 75 வயதாகிறது. ஆனந்தி பென் ஆகஸ்டு மாதமே பதவி விலகுகிறார். அவரது அறிவிப்பு ‘75 வயதாகி விட்டது, கட்சி விதிகளின்படி விலகுகிறேன்’ என்பதே.
அப்போது அமித்ஷா “எல்லாருக்கும் ஆனந்தி பென் சிறந்த வழிகாட்டலை உருவாக்கிவிட்டார், இது எல்லாருக்கும் பொருந்தும்” என்றார்.
சவுகானின்
மத்தியப்பிரதேச அமைச்சரவையிலும், மந்திரி சபை மாற்றம் என்ற பெயரில் 75 வயதான மூத்த அமைச்சர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். 2019-இல் ‘தி வீக்’ பத்திரிகைக்கு அமித்ஷா அளித்த நேர்காணலில் “75 வயதைத் தொடும் மூத்த தலைவர்களுக்குச் ‘சீட்’ தரமாட்டோம்; இது எங்கள் கட்சியின் விதி” என்கிறார். 2024 மக்களவைத்
தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடியின் 75 வயது பணி மூப்பு பதவி விலகல் பற்றிப் பேச 2029-லும் மோடியே பிரதமர் வேட்பாளர் என பா.ச.க. முட்டுக்கொடுத்தது.
மோடியின்
வெளிநாட்டுப் பயணங்களையும், உயரிய விருதுகள் என்ற பெயரில் வீண்பெருமை தேடுவதையும் ஆர்.எஸ்.எஸ். இரசிக்கவில்லை. பொதுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனிமனித வழிபாட்டையும், தனிமனித காட்சி அரங்கேற்றத்தையும் விரும்புவதில்லை. இந்துத்துவா குறித்த பொதுச் சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், குடியுரிமைச் சட்டம் என்பதில் பா.ச.க.வின் வேகம், மோடியின் செயல்திறன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கொதி நிலைக்குத் தள்ளியுள்ளது.
மூன்றுமுறை
நடந்த மோடி-மோகன் பகவத் சந்திப்புகளும் பயனற்றுப் போயின. மதவாதத்தை வைத்து நீண்ட நெடிய அரசியல் நடத்த முடியாது என்று உணர்ந்த பா.ச.க.வின் எதார்த்தம் ஆர்.எஸ். எஸ். தலைவர்களுக்கு எரிச்சல் மற்றும் கோபமூட்டுகிறது. மோடி பதவி விலக செப்டம்பர் 11-இல், 75 வயதாகும் மோகன் பகவத் பதவி விலகி நெருக்கடி கொடுப்பார் எனப் பேசப்படுகிறது.
2024 - மக்களவைத் தேர்தலின்போதே
ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க.
மோதல் உச்சம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தல் வேலையைச் செய்ய மறுத்தது. அதன் விளைவாக உத்தரப்பிரதேசத்தில் பா.ச.க.
43 தொகுதிகளை இழந்து பெரும்பான்மை இல்லாத அரசாக உருவானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ச.க.வைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கத் திட்டமிடுகிறது. அமித்ஷா போன்றோர் 75 வயதில் பதவி விலகல் என்பது பா.ச.க.
கட்சியின் சட்ட
விதிகளில் இல்லை என அடம்பிடிக்கிறார்கள். ஏனெனில், அமித்ஷாவும்
ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டார்.
மோடிக்கும்
மோகன் பகவத் அவர்களுக்கும் தன் முனைப்பு (ஈகோ) பிரச்சினை உச்சம் பெற்றுள்ளது. அது எதில் முடியும்? என்பதே வரும் நாள்களின் இந்திய அரசியல். இதில் அதிகபட்சமாக ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது.
பிரதமர்
மோடியும் பா.ச.க.வும் தங்கள் பதவி ஆசைகளைத் துறந்து, இந்துத்துவா தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விலகி, மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதே ஆதங்கமும், நடுநிலையாளர்களின் கேள்வியுமாகும்.