news-details
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 10, 2025, ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சாஞா 18:6-9; எபி 11:1-2,8-19; லூக் 12:32-48 - இழக்கக்கூடாதது இறைவன் மீதுள்ள நம்பிக்கையே!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் தாய் ரோஸ் கென்னடி. கத்தோலிக்கரான இவர் ஆழமான இறைநம்பிக்கையோடு வாழ்ந்தவர். இவரது மகன் ஜான் கென்னடி அமெரிக்க அதிபராகி, சமத்துவத்திற்காக உழைத்ததற்காகக் கொல்லப்பட்டார்.  அவருக்குப்பின் அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் போட்டியிட்ட அவரது தம்பி இராபர்ட் கென்னடியும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஒரே மகளும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். இத்தகைய வேதனையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ரோஸ் கென்னடி ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்குச் செல்வதை ஒருபோதும் விட்டுவிடவில்லை. இது குறித்துக் கேட்டபோது அவர் கூறிய பதில்: “பல்வேறு துயரமான நிகழ்வுகளுக்குப் பின்னும் நான் நம்பிக்கையோடு இருப்பதற்கான காரணம், நான் நாள்தோறும் வேண்டும்ஆண்டவரே, உம்மில் நான் கொண்டுள்ள நம்பிக்கையைத் தவிர அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்என்ற இறைவேண்டல்தான்.”

நம்பிக்கை என்பது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் வரம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது நம்பிக்கையினாலேயே கட்டி எழுப்பப்படுகிறது. கிறிஸ்துவே நமது தலைவர். நம் வாழ்வில்நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துவரும் அதை நிறைவு செய்பவரும்...” (எபி 12:2) அவரே. அவர்மீதே நம் கண்களைப் பதிய வைக்க அழைக்கப்படுகிறோம். பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் நம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றன.

சாலமோனின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயண நிகழ்வில் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த இரவை நினைத்துப் பார்க்கிறார் (18:6). அந்த இரவு இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் இரவாக அமைந்திருந்தது. எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நலமான வாழ்விற்கு எத்தனையோ போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டியிருந்தது. பசி, தாகம், பாலைவன வாழ்வு இப்படிப் பல துன்பங்களை அவர்கள் சந்தித்தாலும், தங்கள் விடுதலைப் போராட்டத்திலும் பாலைநில வாழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டனர்கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டனர். தங்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும், கடவுள் தங்களுக்காகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டனர்.

எபிரேயர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. நம்பிக்கை என்பதற்கான அற்புதமான வரையறையை எபிரேயத் திருமுக ஆசிரியர் தருகிறார்: ) நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; ) கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). இவ்வரையறையை ஆழமாகச் சிந்திக்கும்போது, ‘எதிர் நோக்கி இருப்பதுஎன்பது, நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணுவது அல்ல; மாறாக, திருத்தூதர் பவுல் குறிப்பிடுவதுபோல, “கடவுளின் மாட்சியில் பங்குபெறுவதே (உரோ 5:2) நம் ஒரே எதிர்நோக்கு. இந்த எதிர்நோக்கே பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவது என்பது கண்ணுக்குப் புலப்படக்கூடிய பணம், வீடு, பொருள் சார்ந்தவற்றில் நம்பிக்கை கொள்ளாமல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்வதாகும்.

திருவிவிலியத்தில்இறைநம்பிக்கையின் தந்தையாக (உரோ 4) நம் கண்முன் வருபவர் ஆபிரகாம். இவர் தான் காணாதவற்றையும் நம்பி ஏற்றார். ஆபிரகாம் கடவுளைச்சிக்கெனப் பற்றிக்கொண்டார்வாக்களிக்கப்பட்ட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது (எபி 11:8), அவர் குடியேறிய நாட்டில் ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது (11:9), மிக வயதான காலத்திலும் கடவுள் ஒரு மகனைக் கொடுப்பார் என்ற அவரின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டது (11:10), சோதிக்கப்பட்டபோது தன் ஒரே மகனையே பலியிடத் துணிந்தது... (11:17) என எல்லாவற்றிலும் ஆபிரகாம் கடவுளின் வாக்குறுதியின்மேல் நம்பிக்கைகொண்டார். ஆபிரகாம் நம்பிக்கையினால் மட்டுமே கடவுளுக்கு ஏற்புடையவரானார் (தொநூ 26:5). சில வேளைகளில் கடவுள்மீது நம்பிக்கை கொள்வதற்கு அவரது உள்ளம் போராடிய சூழலிலும் (தொநூ 15:8; 16:2; 20:1-2), கடவுள் மீதான தன் நம்பிக்கையை அவர் புதுப்பித்துக்கொண்டார்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையின் பொருளை இன்னும் ஆழமாக விவரிக்கிறது. தொடக்க வரிகளான, “உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை, பூச்சியும் அரிப்பது இல்லை (லூக் 12:33) என்று செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை இயேசு நம் அனைவருக்கும் தருகிறார்.

பணத்திற்கு ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து வருகிறோம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைச் சேர்ப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைப் பகிர்வது. பணமும் செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல; அவற்றைத் திரட்டுவதிலும் குவித்து வைப்பதிலும் நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே செல்வத்தைத் தீயதாக்கி விடுகிறது. பணமே ஒரு மனிதரின் சமூகச் செல்வாக்கையும் வாழ்வுநிலையையும் நிர்ணயிக்கக்கூடிய கருவியாக மாறிவிட்டது. பணத்தின்மீதான பற்று பணத்தை முழு மூச்சோடு ஒரு மனிதரைத் தேடவைக்கிறது. மனிதரும் கடவுளை விடுத்து, பணத்திற்கும் செல்வத்திற்கும் அடிமையாகும்போது அவர்களின் முழுக்கவனமும் எப்போதும் செல்வத்தின்மீதுதான் இருக்கும். அதனால்தான் இயேசுஉங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் (12:34) என்று எச்சரிக்கிறார். இறைநம்பிக்கையை வாழ்வாக்க இயேசு முன்வைக்கும் சில படிப்பினைகள்:

முதலில், பணத்தின்மீதான பற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி எப்போதும் விழிப்பாய் இருப்பதுதான். விழிப்பாக இருக்கும் பணியாளர்தான் தன் தலைவனிடத்தில் நற்பெயர் பெறுவார் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம் உள்ளத்திலும் அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணர முடியாமல் இருப்பதே விழிப்பற்ற மனநிலைஅதாவது, இவ்வுலக மாயையும், செல்வத்தின்மீதான பேராசையுமே கடவுளைக் காணும் நம் அகக்கண்களை மறைக்கின்றன. பற்று உண்மையைப் பார்க்கவிடாமல் நம் கண்களை மறைத்துவிடுகின்றது. “கடவுளைக் கண்டடைவதற்கு, ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள்என்று எழுதுகிறார்ஆன்மிகவியலின் இளவரசர்என அழைக்கப்படும் புனித சிலுவை யோவான். எனவே, உண்மையான நம்பிக்கை என்பது, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதாகும். கடவுளிடம் முழுமையாகச் சரணடைதல்தான் நம்பிக்கை வாழ்வின் உச்சநிலை (12:22-28).

இரண்டாவது, நாம் சேர்த்து வைத்தவை செல்லரித்துப் போகலாம் அல்லது திருடப்படலாம் என்று எச்சரிக்கும் இயேசு, அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். பணம் அல்லது செல்வம் மரணத்திற்குப் பின் ஒருவருக்கு முற்றிலும் பயனற்றுப் போகின்றன. எனவே, அவை பயன்தரும் காலம் வரையில் அதாவது, இவ்வுலகில் செல்வத்தைத் தகுந்த வகையில் பயன்படுத்த வேண்டும். பணம் என்பது உரம் போன்றது. அது நிலங்களில் பரப்பப்படும்போதுதான் வளம் தரும், உயிராக மாறும். பணம் பதுக்கப்படவேண்டியது அல்ல; அது பகிரப்படவேண்டியது. அவற்றை முக்கியமாக ஏழை மக்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். அவ்விதம் செய்தால், அவர்கள் மறுவுலகில் நம்மை வரவேற்கத் தயாராக இருப்பார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருள்களைப் பிறருக்குப் பரிசாகக் கொடுப்பாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது, “இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றிற்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றிற்கு நான் அடிமைஎன்று அவர் பதில் கூறினாராம்.

மூன்றாவது, உண்மையான நம்பிக்கை என்பது பணிபுரிவதில் அடங்கியிருக்கிறது எனப் போதிக்கிறார் இயேசு. அதாவது, பணிபுரிதல் என்பது தலைவரின் மன விருப்பத்திற்கேற்பச் செயலாற்றி அவரது பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவதாகும். நன்மதிப்பைப் பெறுவதே ஒரு பணியாளரின் தலையாயக் கடமை. அதுவே, அவர் சேர்க்கும் நிலையான செல்வம். திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள நற்செயல்களை ஆற்றிய முறைகள், வாழ்வின் இறுதி நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்என்கிறார் (மூவேளைச் செபவுரை, 07.08.2022).

புனித யாக்கோபுவின் கூற்றுப்படி, நம்பிக்கை என்பது நற்செயல்களில் மட்டுமே காணக்கூடிய ஒன்று என்பது தெளிவு (2:17,18). கிறித்தவர்களாகிய நாம் அடிப்படையில் நம்பிக்கையின் மக்கள்; நற்செயல்கள் வழியே உலகில் நம்பிக்கையை வளர்ப்பதே நமது அழைத்தல்! ஆகவே, இன்றைய திருப்பாடல் கூறுவதுபோலநாம் ஆண்டவரையே நம்பியிருப்போம் (34:20). எச்சூழலிலும் இறைவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்காதிருப்போம்!