ஆகஸ்டு மாதம் 4-ஆம் நாள் புனித ஜான் மரிய வியான்னியின் விழாவினைக் கொண்டாடினோம். இவர் காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் எழுதவில்லை. புனிதர்களான அகுஸ்தினார், அக்குவினாஸ் போன்று இவர் ஒரு மறைவல்லுநரும் அல்லர். பெரிய துறவற சபைகளை இவர் ஏற்படுத்தவில்லை; பல நாடுகளுக்கு மறைப்பணியாற்றவும் சென்றதில்லை. இவர் திருமறைக்காக இரத்தம் சிந்தவில்லை. இருப்பினும், அகில உலகின் அனைத்து அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இவரையே திரு அவை அழைக்கிறது. காரணம், இவர் கிறிஸ்துவின் பணிவையும் தாழ்ச்சியையும் அப்படியே அணிந்துகொண்டார். இயேசுவும் திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டிய தாழ்ச்சி எனும் பாதையைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டார். தான் மற்றவர்களால் ‘கழுதை’ என அழைக்கப்பட்டாலும், ‘இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!’ என்பதில் பணிந்து நடந்தார். “மேன்மையடையத் தாழ்மையே வழி” (நீமொ 18:12) என்பதில் உறுதியாக இருந்தார்.
தாழ்ச்சியுடையவர்
எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார். ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். தாழ்ச்சி என்பது தாழ்வுமனப்பான்மை அல்ல; தாழ்ச்சி என்பது உண்மைநிலை; உயர்வுநிலை. “தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்” (நீமொ
22:4). தாழ்ச்சியும் பணிவும் உடையவராக வாழ்தல் பொதுவாக எல்லாருக்கும் நல்லதாகும். அவர்களுள் சிறப்பாக, செல்வருக்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்றுரைக்கின்றார் திருவள்ளுவர்.
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே
செல்வம் தகைத்து’
(குறள் 125)
பொதுக்காலத்தின்
22-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். எந்நிலையிலும் நாம் பணிவோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைய
நற்செய்தி இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றியும், அவ்விருந்திலே அவர் கற்றுத்தந்த பாடங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பரிசேயர் வீட்டில் ஓய்வு நாளில் நடந்த ஒரு விருந்தில் இயேசு பங்கெடுக்கிறார். பல கண்கள் அவரையே
கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன.
இது இயேசுவின்மீது கொண்ட உயர்ந்த மனநிலையில் அல்ல; அவர்மீது குற்றம் சுமத்தும் நோக்கில் ‘அவரைக்
கூர்ந்து கவனித்தனர்’ (லூக்
14:1). பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும் தம் மனத்தில் தோன்றிய உண்மைகளை இயேசு பாடங்களாகப் புகட்டுகிறார்.
இயேசு
தமது பணிவாழ்வு முழுவதும் எந்தவோர் இடத்திலும் ஆணவத்துடனோ, இறுமாப்புடனோ நடந்துகொள்ளவில்லை. மேலும், தாம் இறைத்தந்தையின் ஒரே மகன், மீட்பர், போதகர், எல்லாம் வல்லவர், அருளடையாளங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்த இடத்திலும் முதன்மையான இருக்கையைத் தேடவில்லை. மாறாக, சிலுவை மட்டும் தம்மைத் தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). தாழ்ச்சி மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும். எல்லா நற்பண்புகளின் தாய் தாழ்ச்சியே. ஆகவேதான், இன்றைய நற்செய்தியில் பொதுவிருந்தில் முதன்மையான இடத்தைத் தேடிச்சென்ற விருந்தாளிகளுக்குப் பணிவோடு நடந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றார் இயேசு.
சமுதாயக்
குழுமங்களில் நாமாக முதன்மையான இடத்தைத் தேடி அமரக்கூடாது என்பது படிப்பினை. எந்த ஒரு செயல்பாட்டிலும், பிறரை முன்னிறுத்திச் செய்வது நல்லது. தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி. பணிவு பாடத்தைக் கற்றுத்தரும் இயேசு, பணிவு பாடங்களுக்குச் சிகரமாகத் தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற புகழ்பெற்ற அறிவுரையை வழங்குகிறார் (லூக் 14:11).
இன்றைய
முதல் வாசகமும் தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்கள் பெறுகின்ற மூன்று நற் பயன்களை அடையாளப்படுத்துகின்றது. முதலாவது, செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தாழ்ச்சியோடும் பணிவோடும் நடந்துகொள்பவர்களை இந்த உலகம் நேசிக்கும் (சீஞா 3:17). இரண்டாவது, தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்களுக்கே ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிடைக்கும் (3:18). மூன்றாவது, தாழ்ச்சி உள்ளவர்களுக்கே தமது மறைபொருளை வெளிப்படுத்தும் கடவுள் (3:19) தாழ்ந்தோராலே அவர் மாட்சி பெறுகிறார் (3:20). எனவே, தலையாயப் பாவம் ஆணவம் என்றால், தலையாயப் புண்ணியம் தாழ்ச்சி. இறுமாப்பு அழிவுக்கு அடித்தளம். அகம்பாவம் பெரும்பாவம். அதுவே அருளின் வாய்க்காலுக்குத் தடை. இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்தே இல்லை (3:28). இறுமாப்பு தீமைகளின் வேர். இறுமாப்பே பலரையும் நெறிபிறழச் செய்திருக்கிறது (3:24). “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்” (நீமொ
29:23), “இறுமாப்பு வானதூதர்களைச் சாத்தான்களாகவும், தாழ்ச்சியானது மனிதர்களை வானதூதர்களாகவும் மாற்றுகிறது” என்கிறார்
புனித அகுஸ்தின்.
இயேசுவின்
தாழ்மைக்கும் பணிவுக்கும் அவரே ஒப்பற்ற முன்மாதிரி. “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி
2:5) என்கிறார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான்! தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அழியாத அடையாளம். “ஒருவர்
மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” (1பேது
5:5). “ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார்” (4:10) என்கிறார்
யாக்கோபு. “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழுங்கள்”
(எபே 4: 2-3) என்கிறார் பவுல்.
தாழ்ச்சி
என்பது செயல்பாடாக மாறும்போது, ஒருவர் ஏழைகளில் ஒருவராக மாறமுடியும்; அவர்களுக்காகக் கைம்மாறு எதிர்பாராமல் பணி செய்ய முடியும். “தாழ்ச்சி என்பது பிறருக்கான சேவையைக் குறிக்கிறது” எனும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று எண்ணிப்பார்க்கத்தக்கதே (மார்ச் 30, 2015, குருத்து ஞாயிறு மறையுரை). கிறித்தவர்களுக்கான உண்மையான வாழ்வுப்பாதை தாழ்ச்சியே. கடவுள் தம் மக்களுடன் இணைந்து நடக்க அவர் தேர்ந்துகொண்ட பாதையும் தாழ்ச்சியே (பிலி 2:7). இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றுவதன் வழியே அவருடைய விண்ணக விருந்திலே நாம் பங்குபெற முடியும். ஆகவேதான் இயேசு நற்செய்தியின் இறுதிப்பகுதியில் ஒரு புரட்சிகரச் சிந்தனையைத் தருகிறார்.
விருந்துக்கு
அழைப்பது என்பதும், அழைக்கப்படுவது என்பதும் ஒருவரின் சமூக நிலையின் அங்கீகாரம். சமூகத்தின் சமநிலையில் இருப்போர் தங்களுக்கு நிகரான ஒருவரை விருந்துக்கு அழைத்துக்கொள்வர். செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் செல்வந்தர்களின் எண்ணிக்கையே நிரம்பி வழியும். இவர்களின் விருந்திலே அன்பைவிட ஆடம்பரமும், பாசத்தைவிட பாசாங்குமே நிழலாடும். விருந்து நேரங்களில் அவரவர் தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்றே விரும்புவர். இச்சூழலில் எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கைம்மாறு செய்ய இயலாத ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் விருந்துக்கு அழையுங்கள் என்கிறார் இயேசு. கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்தளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக்கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப்பெறுவார்.
இயேசுவின்
புரட்சிக்கரப் போதனை இன்று நம்முன் வைக்கும் சவால்கள் என்னென்ன? நமக்கான முதல் சவால், எல்லாரும் சமூகப் படிநிலையில் உயர்நிலையில் இருப்பவர்களைத் தேடும்போது, சமூக ஏணியில் கடைசிப்படியில் இருப்பவர்களை, முற்றிலும் வலுக்குறைந்தவர்களை நம் விருந்தினர்களாகத் தேடப் பணிக்கிறார் இயேசு. இரண்டாவதாக, கடவுள் அனைவரையும் சமமாகவே படைத்தார். தம் உருவிலே படைத்தார். யாரையும் யாருக்கும் கீழானவர்களாகப் படைக்கவில்லை. எனவே, இல்லாதவர்களோடும் இயலாதவர்களோடும் வேற்றுமை பாராட்டாத அன்புக் கட்டளையை நாம் ஏற்கப் பணிக்கிறார். மூன்றாவதாக, இயேசுவைப் பொறுத்தமட்டில் தாழ்ச்சியைத் தேடுவதே உயர்வின் இலக்கணம். இயேசுவின் இவ்விலக்கணத்தை ஏற்பது கடினம் எனினும், தாழ்ச்சியில் உயர்வு தேடும் மனம் கொண்டு வாழ இன்று அவர் நம்மை அழைக்கிறார்.
ஆகவே,
இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றி இயேசுவுக்கு நம் இதயத்திலே இடமளிக்க முயல்வோம். தாழ்ச்சியின் மகிமையை உணர்ந்து பிறருக்கான சேவையில் ஈடுபாடு கொள்வோம். எளிய வழியே புனிதத்துக்கான பாதை. தாழ்ச்சியே இறைவனின் பாதை!