news-details
ஆன்மிகம்
பொதுநிலையினரும் சமபொறுப்புள்ள பணியாளர்களே! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 06)

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலம்பொதுநிலையினரின் பொற்காலம்என அழைக்கப்படுவது உண்டு. ஏனெனில், சங்கம் அவர்களது சமமான மாண்பையும் இறையாட்சிப் பணிப் பொறுப்பையும் உறுதியாக எடுத்துரைத்தது. அதன் அறிவுறுத்தலுக்கேற்ப மறைமாவட்ட மற்றும் பங்கு அளவில் அருள்பணிப் பேரவைகள், நிதிக் குழுக்கள் என்பனவற்றில் பொதுநிலையினர் இடம்பெற்றனர். தலைமைப் பொறுப்புகளுக்கு வழிகாட்டப்பட்டனர். அத்தகைய மாற்றத்தில் மலர்ந்ததுதான்கூட்டொருங்கியக்கத் திரு அவை.’ இக்கருத்தை மாமன்றத்தின் மைய ஆய்வுப் பொருளாக வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அது மட்டுமின்றி, பொதுநிலையினரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மாமன்றக் கலந்துரையாடல்கள் அடிமட்டத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றார். அனைத்திற்கும் மேலாக, ஆயர் மாமன்றத்தில் முதன்முதலாகப் பொதுநிலையினர் சிலரும் வாக்குரிமையுடன் பங்கேற்க வழிசெய்தார். இதனால் மாமன்றமும் பொதுநிலையினரைப் பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் கலந்தாய்வு செய்துள்ளது.

உலகுசார் துறைகளை ஊடுருவி உருமாற்றுபவர்கள்

திரு அவையின் மறைத்தூதுப் பணி அதன் அனைத்து உறுப்பினர்களையும் சார்ந்தது. புகுமுக அருளடையாளங்கள் வழியாக அப்பணிப் பொறுப்பு அதன் உறுப்பினர் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. “திரு அவையின் பணி திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் உரியது (இஅ 66). அப்பணியை ஆற்ற இருபால் பொதுநிலையினர், துறவியர், திருப்பணியாளர்கள் என அனைவரும் பல்வேறு அருங்கொடைகளையும் அழைத்தல்களையும் பெற்றுள்ளனர்

தூய ஆவியார் அவர்களுக்குத் தந்துள்ள கொடைகளால் பொதுநிலையினரும் அதில் உயிரோட்டமுடன் பங்களிப்புச் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், சமூகத்தின் அனைத்துத் துறைகளும், அன்றாட வாழ்வுச் சூழமைவுகளும் அவர்களுக்கே சிறப்பான பணித்தளங்கள். “பொதுநிலைப் பெண்கள் மற்றும் ஆண்களின் முதல் கடமை நற்செய்தி உளப்பாங்குடன் உலகுசார் துறைகளை ஊடுருவி அவற்றை உருமாற்றுவதே (2-ஆம் வத். திரு அவை 31,33; பொதுநிலையினர் 5-7) (இஅ 66). அதிலும் குறிப்பாக, இன்றைய கணினிக் கலாச்சாரம், இளைஞர் பணி, தொழில்துறை, அரசியல், கலைகள் மற்றும் பண்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுவாழ்வில் பங்கேற்பு என்பனவற்றில் அவர்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களே அத்துறைகளில் திரு அவையை உடனிருக்கச் செய்பவர்களும் நற்செய்தி அறிவிப்பவர்களும் ஆவர்.

குடும்பமே முதல் பணித்தளம்

பொதுநிலையினர் நற்செய்திப் பணியாற்ற வேண்டிய முதல் தளம் தங்கள் குடும்பமே. திருமணம் எனும் அருளடையாளத்தால் கிறித்தவக் குடும்பம் உருவெடுக்கிறது. அந்த அருளடையாளம்தனிப்பட்ட ஒரு மறைத்தூதுப் பணியை ஒப்படைக்கிறது. அப்பணி குடும்ப வாழ்வு, திரு அவையைக் கட்டியெழுப்புதல், சமூக ஈடுபாடு என்பனவற்றைச் சார்ந்தது (இஅ 64). கிறித்தவக் குழுமத்தின் அடித்தளம் குடும்பமே. அது அன்புறவு, அருள்வாழ்வு என்பனவற்றின் ஒன்றியம். அதுவே நம்பிக்கை உருவாக்கம்; கிறித்தவ வாழ்க்கைமுறை என்பனவற்றின் முதல் அனுபவமாகவும் முக்கிய அறிமுகமாகவும் திகழ்வது. அங்கு நம்பிக்கையில் வாழ்ந்து, பகிரும் பெற்றோரும் தாத்தா-பாட்டியருமே முதல் மறைத்தூதுப் பணியாளர்கள்.

மேலும், “கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கு அவசியமான அடிப்படை நடைமுறைகளைக் குடும்பங்களில் நாம் அனுபவத்தில் கற்றுக்கொள்கிறோம். குடும்பங்கள் முறிவுற்ற நிலையையும் துன்பங்களையும் அனுபவித்தாலும், அன்பு, நம்பிக்கை, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் புரிதல் என்பனவற்றை நாம் கற்றுக்கொள்ளும் இடங்களாக அவை திகழ்கின்றன. ‘நாம்எனும் உறவின் வழியாகக் குடும்பம் மக்களை மனிதமயமாக்குகிறது; அதேவேளையில், ஒவ்வொருவருடைய முறையான வேறுபாடுளையும் அது வளர்த்தெடுக்கிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (இஅ 35).

பொதுநிலைத் திருப்பணியாளர்கள்

பொதுநிலையினர் பெற்றுள்ள பல்வகை அருங்கொடைகள் தூய ஆவியார் திரு அவைக்கு வழங்கியுள்ள தனிச்சிறப்பான வரங்கள் ஆகும். அவற்றை இனங்கண்டு, ஏற்று, முழுமையாகப் பாராட்டி, ஊக்கப்படுத்திப் பயன்படுத்துவது அவசியம். “திருக்குழுமமும், அதனை வழிநடத்தும் பொறுப்பாளர்களும் மக்கள்முன் வெளிப்படையாக அருங்கொடைகளை ஏற்றுக்கொள்ளும்போது அவை திருப்பணிகள் ஆகின்றன (இஅ 75). இவ்வாறு அவை நிலையான முறையில் மறைத்தூதுப் பணிக்கு உதவுகின்றன. தெளிதேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உருவாக்கம் அளித்து, உரிய சடங்குமுறை வழியாக அவற்றுள் சில ஆயரால் வழங்கப்படுகின்றன. வாசகர், பீடத்துணைவர், வேதியர் என்பன இலத்தீன் மரபுத் திரு அவையில் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பொதுநிலையினர் திருப்பணிகள். இவை தவிர, தங்கள் திரு அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏனைய திருப்பணிகளைத் திருத்தந்தையின் அனுமதியுடன் நிறுவவும், அவற்றிற்கான தகுதிகளையும் உருவாக்க முறைகளையும் முடிவு செய்யவும் ஆயர் பேரவைகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்ப தமிழ்நாடு ஆயர் பேரவை நற்செய்திப் பணியாளர் (வாசகர்), நற்கருணைப் பணியாளர் (பீடத்துணைவர்), நோயுற்றோர் பணியாளர், நீதிப்பணியாளர், அருள்பணித் துணைவர், வேதியர் என ஆறு பொதுநிலையினர் திருப்பணிகளைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. இது அனைத்துலகத் திரு அவைகளுக்கே முன் மாதிரி காட்டும் செயல்.

அவ்வாறே, மாமன்றத்தின் பின்வரும்  படிப்பினை அருங்கொடைகளையும் திருப்பணிகளையும் பற்றிய அதன் நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது: “அனைத்து அருங்கொடைகளும் திருப்பணிகளாக ஏற்படுத்தப்பட வேண்டியதில்லை; அதுபோல திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருப்பணியாளர் ஆகவேண்டியதில்லை. ஓர் அருங்கொடை திருப்பணியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், அதற்கான உண்மையான அவசியத்தைத் திருக்குழுமம் இனம் காண வேண்டும். பொதுநிலையினரின் அதிகத் திருப்பணி வகைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றிற்குத் திருநிலைகள் எனும் அருளடையாளம் தேவையில்லை; அவை திருவழிபாட்டைச் சார்ந்தவையாக இருக்கவேண்டியதும் இல்லை. அவை நிறுவப்பட்டவையாகவோ நிறுவப்படாதவையாகவோ இருக்கலாம் (இஅ 66). அப்பணிகள் எத்தகையவை ஆயினும், அனைத்துப் பணியாளர்களும் கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றுவது திரு அவையின் இணைந்த பயணத்திற்கு இன்றியமையாதது.

கிறித்தவக் குழுமங்களிலும் பொதுநிலையினர் அதிகமதிகமாகப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  “அவர்களது இத்தகைய பங்களிப்புகள் இன்றியமையாதவை என்பதால், அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்க்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் (முஅ 8). மேலும், இத்தகைய பணிகளுக்கு நிலைத்தத்தன்மை தரவும், இவை மக்களால் ஏற்று மதிக்கப்படவும் உதவும் வகையில் இவற்றைத் தலத்திரு அவைப் பொறுப்பாளர்கள் திருக்குழுமத்தின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கலாம். மேலும், நற்கருணை வழங்கல், அருள்பணியாளர் இல்லாத சூழ்நிலைகளில் ஞாயிறு வழிபாடு நடத்துதல், சில அருள்வேண்டல் குறிகளை வழங்குதல் என்பன போன்றவற்றில் சிறப்புரிமைத் திருப்பணியாளராகப் பொதுநிலையினர் செயல்பட வாய்ப்பு ஏற்கெனவே உள்ளது. “அந்தந்த இடத்துச் சூழ்நிலைகளின் தேவைகளுக்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் பொதுநிலையினர் திருப்பணிகள் ஆற்ற இத்தகைய வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வது பற்றியும், நிலையானவை ஆக்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும் (இஅ 76).

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. பங்கு, மறைமாவட்ட மற்றும் அனைத்துலகத் திரு அவை அளவுகளில் இன்று அதிகமதிகமாக அருள்பணி சார்ந்த பல செயல்பாடுகளும் திருப்பணிகளும் பொதுநிலையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இறையியல் விளக்கங்களும், திரு அவைச் சட்ட வழிவகைகளும் இந்த முக்கிய வளர்ச்சியுடன் இயைந்து இருத்தல்வேண்டும். குறிப்பாக, திரு அவையின் மறைத்தூதுப் பணி ஒன்றே என்பதைக் கருத்தில்கொண்டு, திரு அவையின் அகப்பணிகள் திருநிலையினருக்கும், உலகுசார் பணிகள் பொதுநிலையினருக்கும் உரியன எனக் கூறுபோடுதல் தவிர்க்கப்பட வேண்டும். “உலகில் பொதுநிலையினர் ஆற்றும் பணியைச் சரியாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது கிறித்தவக் குழுமத்தைக் கவனிக்கும் பணியை ஆயர்களிடமும் அருள்பணியாளர்களிடமும் மட்டுமே ஒப்படைப்பதற்குப் போலிக் காரணம் ஆகிவிடக்கூடாது (முஅ 18டி).

2. திரு அவையின் முடிவெடுக்கும் செயல் முறைகளில் பங்கேற்கவும், மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர் பயிற்சி இல்லங்கள், இறையியல் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றிலும் பொறுப்புள்ள பணிகளில் செயல்படவும் பொதுநிலை மற்றும் இருபால் துறவியருக்கும் அதிக வாய்ப்புகள் தரப்படவேண்டும் (இஅ 77). 

3. தலத்திரு அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திருப்பணிகளை ஏற்படுத்துவதும், இளையோருக்கும் அவற்றைத் தருவதும் அவசியம். வாசகர் திருப்பணி இன்னும் விரிவான இறைவார்த்தைப் பணியாகப் புதுப்பிக்கப்படலாம்; மறையுரை வழங்குவதும் அதனுடன் இணைக்கப்படலாம்

4. குடும்ப வாழ்வை ஆதரித்தல் மற்றும் திருமணத் தயாரிப்புப் பணிகளைத் திருப்பணிகளாக ஏற்படுத்தி, அவற்றை ஆற்றும் தம்பதியருக்கு அத்திருப்பணிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

5. ஏற்ற நிறுவன அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் வழியாக அருள்பணித் தலைவர்களும் இறையியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோரும் உரையாடல் மேற்கொள்வது அவசரமான தேவை (இஅ 67).