news-details
சிறப்புக்கட்டுரை
இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் அரசுகள்

ஏழைகளிடமிருந்து கல்வியைப் பறிப்பது, வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து வேளாண் நிலங்களைப் பறிப்பது, அடர்ந்த காடுகளில் பல தலைமுறைகளாக வாழும் மலைவாழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழ்விடங்களைப் பறிப்பது, துறைமுகங்களின் விரிவாக்கம் என்ற பெயரில் கடற்கரையில் வாழும் மீனவர்களின் உறைவிடங்களைப் பறிப்பது, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தட்டு மக்களின் சேமிப்பு நிதிகளைப் பறித்து, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கடன்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு பின்னர் தள்ளுபடி செய்வது, தேசத்தின் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்களைப் பறித்து, பன்னாட்டு கம்பெனிகள் வரை முறையில்லாமல் கொள்ளையடிக்க அனுமதிப்பது, பட்டியல் இன, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அதிகார மையங்களிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து அவைகளைச் செயல்படவிடாமல் முடக்குவது... என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் இந்திய சனநாயகத்தினைப் பலவீனமாக்கும் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வினரும்  தற்போது பாராளுமன்ற சனநாயகத்தின் அடிமடியிலேயே கைவைக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு 2025 - ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு. சனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை, தனிமனித அடிப்படை உரிமைகள் போன்ற நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அவர்கள் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. அவை ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகள் என்றும், நம் மண்ணுக்கும், நமது கலாச்சாரத்திற்கும் அந்நியமானவைகள் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. மனுதர்மம் மட்டுமே நமது அரசியல் சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களது சித்தாந்தம். பெரும்பான்மையான இந்திய மக்கள் நமது அரசியல் சட்டத்தை இழக்க விரும்பமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள், தங்களுடைய முயற்சியில் வெற்றியடைய புதிய வியூகங்களை வகுத்துள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த நமது பிதாமகர்கள் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை எதிர்நோக்கியே, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க அரசியல் சட்ட நிறுவனங்களை உருவாக்கினர். நாடாளுமன்றம், சட்டமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்,  வரையறுக்கப்பட்ட அரசு நிர்வாகம், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குள் சுதந்திரமாகச் செயல்படும் மாநில அரசுகள் என்ற பல நிறுவனங்களைக் கட்டமைத்து அவைகளைச் செழுமைப்படுத்தியிருந்தனர்.

பாராளுமன்ற சனநாயகத்தின் ஊற்றுக்கண்நேர்மையான, சுதந்திரமான தேர்தல்என்பதில் தெளிவாக இருந்த நமது முன்னோர்கள், அதற்கான தேர்தல் ஆணையத்தினை உருவாக்கினர். அரசியல் சட்டத்தின் பிரிவு 324 தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியல்களைத் தயார் செய்வதற்குமான முழுமையான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. 18 வயது நிறைவடைந்த இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையினைப் பிரிவு 326 உறுதி செய்கின்றது. சாதி, மதம், மொழி, மாநிலம், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பது சுதந்திரம் நம் நாட்டு மக்களுக்குத் தந்த மிகப்பெரும் கொடை. குறிப்பாக, விளிம்புநிலை மற்றும் அடித்தட்டு மக்களின் குரலுக்கு நமது அதிகார வர்க்கம் இன்று செவிசாய்க்கிறது என்றால் அவர்கள் கைகளில் இருக்கும் வாக்குச்சீட்டுகளின் வலிமைதான். ஆதிக்கச்சாதியினரின் கைகளிலிருந்த அரசியல் அதிகாரம் சாமானியர்களின் கைகளுக்கு மாறியதற்கான மிகப்பெரும் காரணம் அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையே!

இட ஒதுக்கீடு, அடிப்படை உரிமைகள், பட்டியல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டங்கள் மற்றும் சமூகநீதிக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் இன்று நடைமுறையில் இருப்பதற்கு அடிப்படையான காரணம், அனைவருக்கமான வாக்குரிமையேவலதுசாரி மதவாதப் பாசிச சக்திகளுக்குஅனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் என்றும் உடன்பாடு இருந்ததில்லை. கல்வி அறிவு இல்லாத நாட்டில் எல்லாருக்கும் வாக்குரிமை கொடுத்தால் தேசம் சீரழிந்துவிடும் என்று கூக்குரலிட்டுப் பார்த்தனர். ஆனால், நமது முதல் பிரதமர் நேரு உள்ளடக்கிய தலைவர்கள்அனைவருக்கும் வாக்குரிமைஎன்பதில் மிகவும் உறுதியாக இருந்ததினால் எல்லாருக்கும் வாக்குரிமை சாத்தியமாயிற்று.

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தினால், ஆட்சியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்குணர்ந்தஅவர்கள்சுதந்திரம் நமக்கு வழங்கிய அனைத்து உரிமைளையும் ஒவ்வொன்றாகப் பறித்ததுபோல நம்மிடம் இருக்கும் வாக்களிக்கும் உரிமையினையும் பறிக்கச் சதிவலை விரித்துள்ளனர்தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் அதிகாரம் பெற்ற குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஓர் ஒன்றிய கேபினட் அமைச்சர் என்ற அடிப்படையில் அமித்ஷாவைப் பிரதமர் மோடி நியமித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தியின் ஆட்சேபனைகளையும் மீறி, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைத் தேர்தல் ஆணையர்களாக நியமித்துக்கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள அதிகார வர்க்கத்தில் தங்களது கருத்தியலுக்குச் சார்பாக இருக்கும் அதிகாரிகளையும், தாங்கள் விரும்புகின்ற எதனையும் செய்யத் துணிந்த அதிகாரிகளையும் அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்தல் ஆணையத்தில் பணியமர்த்தியுள்ளதால் தற்போது தேர்தல் ஆணையம் தேசிய சனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டதோ என்று நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு, அதன் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளன.

தேர்தல் அட்டவணையினை பா...வின் மற்றும் பிரதமரின் வசதிக்கேற்ப தயாரிப்பதும், தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர், அமித்ஷா மற்றும் பா... கூட்டணித் தலைவர்களின் தேர்தல் விதிமுறைகள் மீறுதல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், பா...வுக்கு ஆதரவான அதிகாரிகளைத் தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மாநிலத் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் போன்ற முக்கியமான பணியிடங்களில் இருக்கின்ற அதிகாரிகளை மாற்றிவிட்டு, தங்கள் சொல்படி மட்டுமே செயல்படும் அதிகாரிகளை நியமிப்பதும், ஆளும் கட்சி வெளியிடும்விதிகளை மீறும் விளம்பரங்களைஅனுமதிப்பதும், தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பின்னர் சி.பி.., வருவாய் புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசுத்துறை அதிகாரிகளை எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை என்கிற பெயரிலும், விசாரணை என்ற பெயரிலும் அவர்களைத் தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதை அனுமதிப்பது என்று தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் செய்த மற்றும் செய்யத் தவறிய முறைகேடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

இந்தத் தவறுகளின் உச்சத்தைத்தான் அரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் சந்தித்தோம். பதிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட வாக்குகளுக்கும், இறுதியாக எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளிகள், வாக்குப்பதிவின் கடைசி மணித் துளிகளில் அதிசயிக்கத்தக்க வகையில் பதிவாகும் இலட்சக்கணக்கான வாக்குகள், அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டபோதும் வாக்குப்பதிவின் இறுதி நிலவரங்களை வெளியிடுவதில் உள்ள முரண்பாடுகளும், விளக்கவே முடியாத காலதாமதங்களும் பல நியாயமான சந்தேகங்களையும் யூகங்களையும் எழுப்புகின்றன. இந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவுகளின் வீடியோ பதிவுகளை யாருக்கும் தரக்கூடாது என்று அவசரம் அவசரமாக விதிகளைத் திருத்துவதும், நாற்பத்தைந்து நாள்களுக்குமேல் அவைகளை அழித்துவிடவேண்டும் என்று உத்தரவிடுவதும், தேர்தல் ஆணையம் எதையோ மறைக்க முற்படுகிறது என்ற நியாயமான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெரும் பிழைகளும் முரண்பாடுகளும், தேர்தல் நடத்தும் முறைகளும், அதனை நடத்துகின்ற முகமைகளும் அடியிலிருந்து அழுகத் துவங்கி விட்டன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இம் மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்இந்தியாகூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. 100 சதுர அடி வீட்டில் 150 வாக்காளர்கள் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் அக்கிரமத்தைத் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பா... கூட்டணி வேட்பாளர்களில் அநேகர் புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்குகளின் காரணமாகவே வெற்றி பெற்றிருப்பது மற்றுமொரு விபரீதம். இதற்கான விளக்கங்களை திரு. இராகுல்காந்தியும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக அந்தத் தலைவர்களையும், அவர்களது இயக்கங்களையும் மூன்றாம்தர மொழியில் விமர்சிப்பது ஓர் அரசியல் சட்ட நிறுவனம் (Constitutional Institution) செய்யக்கூடிய செயலா? என்பதையும் நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும். பாராளுமன்ற சனநாயகத்தின் அடிநாதமாக இருக்கின்ற தேர்தல்களை நடத்தும் முறைகளிலும், அதனை நடத்துகின்ற ஆணையத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் முறைகேடுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் தேசிய ஊடகங்களும் நீதிமன்றங்களும் கண்டும் காணாததுபோல இருப்பது, தவறு செய்கின்றவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்துள்ளதோ என்று நாம் அஞ்சுகிறோம்.

‘SIR’ (Special Intensive Revision) என்றழைக்கப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கை என்ற பெயரில், பீகாரில் இலட்சக்கணக்கான ஏழை, எளிய பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் வாக்குரிமைகளைப் பறிப்பதற்கு ஒரு பெரும் அநியாயத்தைத் தேர்தல் ஆணையம் அரங்கேற்றி வருகின்றது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு செய்து, இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிப்பதற்கான சில ஆவணங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்; அப்படித் தாக்கல் செய்யாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான படிவங்களைத் தேர்தல் ஆணையம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்; அவைகளைச் சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவு செய்துள்ள இந்த வாக்காளர்கள் இதுவரை ஐந்து பொதுத்தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த வாக்காளர் சீர்திருத்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள சீர்திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் இவர்களிடம் கேட்கும் ஆவணங்கள் எதுவும் இவர்களில் பலரிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வாக்காளர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபணம் செய்வதற்குத் தாக்கல் செய்யக்கூடிய பதினோர் ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், 12-வது வகுப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், சொத்துரிமைக்கான பத்திரங்கள்... என்று நீள்கின்ற பட்டியலில் சாமானிய அடித்தட்டு மக்களிடம் இருக்கும் ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகள் இடம்பெறவில்லை என்பதுதான் பெரும் துரதிருஷ்டம்! மேலும், இவர்களிடம் இல்லாத இந்த ஆவணங்களை முப்பது நாள்களுக்குள் பெற்று தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு, பீகார் அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலைசெய்யும் என்று தெரியாதா?

தேர்தல் ஆணையத்தின் தற்போதைய உத்தரவுக்கிணங்க பெரும்பாலான இந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் அவர்களது ஆதார் எண்களோடு இணைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் ஆணையமே ஏற்க மாட்டோம் என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவில் பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கும், அவர்களது சொந்த மண்ணுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இந்த வாக்களிக்கும் உரிமை மட்டுமே! இவர்களில் அநேகருக்கு அவர்களது வாக்களிக்கும் உரிமைகளைப் பறிப்பதற்கு இப்படி ஒரு சதி நடப்பதே தெரியாது. தெரிந்தாலும் பெரும் பொருள் செலவு செய்து பீகாருக்குப் பயணித்து மீண்டும் தொழில் செய்யும் மாநிலங்களுக்குத் திரும்பத் தேவைப்படும் பொருளாதார வசதி அவர்களிடம் இல்லை. அவர்களது அரை வேட்டியையும் அவிழ்த்து, சொந்த மண்ணில் அரசியல் உரிமைகளற்ற நிர்வாண மனிதர்களாக ஆக்கும் இக்கொடுமையினை உச்ச நீதிமன்றம் தடுக்குமா? என்பதைப் பார்க்க பதற்றத்துடன் காத்திருக்கின்றோம்.

வாக்காளர் பட்டியலைச் சீராய்வு செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு குடியுரிமைப் பட்டியலைத் தயார் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, எவ்வித முன்தயாரிப்பும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக அவசரம் அவசரமாக நடத்தப்படுவதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் படிவங்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்டப் படிவங்களை அவர்கள் மட்டுமே பெறவேண்டும் என்ற விதிகள் எங்கேயும் பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறார்கள். உள்ளூர் ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களின் சுகாதாரப் பணியாளர்களே இப்பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எவ்விதமான முறையான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. காய்கறிக் கடைகளில் அச்சடிக்கப்பட்ட பாரங்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து கிடப்பதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்றுக்கொண்டதற்கு எவ்வித அத்தாட்சியும் வழங்குவதில்லை. இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமைகளை இழக்கப்போவது உறுதி.

தேர்தல் ஆணையம் நடத்தும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு காரணமாக வாக்குரிமையினை இழக்கப்போகின்ற பெரும்பாலோர் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களே! பட்டியல் இன மக்களும், சிறுபான்மை மக்களும் சொத்துப் பத்திரங்களுக்கு எங்கு போவார்கள்? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுள் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட மக்களே! வாக்காளர் பட்டியல் சீராய்வு என்பது இவர்களிடமிருந்து வாக்குரிமைகளைப் பறிக்கும் சதி என்று இப்போது புரிகிறதா?

வாக்குரிமை இல்லாத எனக்கு இந்த நாட்டில் இனிமேல் என்ன இருக்கிறது?” என்று அங்கலாய்க்கின்ற மக்கள் இந்தத் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைத் தேர்தல் ஆணையம் உணர்வதாகத் தெரியவில்லை.

தேர்தலின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளவரைதான் சனநாயகம் வாழும். ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்தால் தேர்தல் மூலம் நீதி வழங்கலாம். ஆனால், தேர்தல் முறைகளே தவறும்போது நியாயம் கிடைப்பது எங்கே? கவிஞன் பாடினான்: ‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்! கங்கையே சூதானால் எங்கே போவது?’ என்று! இந்த வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.