news-details
கவிதை
காமநாயக்கன்பட்டி புதுமையின் தாய்!

கோவில்பட்டி கடந்து துறையூர் வந்ததும்

தூரத்தில் அழகிய இரு கோபுரங்கள்;

இயேசுவைக் காணச் சென்ற அரசர்களுக்கு

வழிகாட்டிய வால்நட்சத்திரம்போல் விலாசங்கள்!

 

ஆலயத்தில் நுழைந்தபோது உயரத்தில்

பரலோக அன்னை அரசியாக அரியணையில்;

செபமாலைத் தோட்டத்தின் வாயிலில்

விண்ணக மண்ணக அரசியே வாழ்க!

 

ஆழ்ந்து செபம் செய்கையில் என்னை

ஈன்றவள் சொல்லிய வார்த்தை ஞாபகம்

உன் கையில் உள்ள இரத்தம் வழியும்

மருக்கள் சரியாகக் கும்பிடு;

சேவை செய்துவிட்டு வா!”

 

வற்றாத தீர்த்தக்கிணற்றில் தீர்த்தமெடுத்து

மூன்று முறை ஊற்றிக்கொண்டேன் தலையில்;

இருகைகூப்பி முகம் குப்புற விழுந்தேன் தரையில்!

 

வேண்டுதல் நிறைவேற்றிய சில நாள்களில்

கைகளில் மாற்றம்;

இரத்தம் வழிந்த மருக்களின் சீற்றம் 

சில்லாக உடைந்து காணாமல்போனது!

 

நலமடைந்த கைகளால் பரலோக அன்னைக்கு

என்ன காணிக்கைக் கொடுத்தால் தகும்?

அன்னையின் தேரினை தரையில் படாமல்

என் கைகளின் மேல் உருட்டி வந்தாலும் தகாதே!

 

தயங்கிக் கேட்ட வேண்டுதல்கள்

இப்போதெல்லாம் எனை

ஈன்றவளிடம் கேட்பதுபோல தயங்காமல் கேட்கிறேன்;

கேட்ட வரங்கள் எல்லாம் கிடைக்குது

கோடி மலர்கள் அவள் பாதம் தேடுது!