(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா: “தந்தையே, மனம் இயல்பாகவே புறம்நோக்கி
இயங்கக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய புறம்நோக்கிய மனம் பொருளைச் சேகரிப்பதிலும், தன்னைப்
பாதுகாத்துக்கொள்வதிலும்தான் அதிக அக்கறை காட்டுகிறதேயொழிய, உறவுகளைப் பற்றியோ, பிறர்நலத்தைப்
பேணுவது குறித்தோ அதிகம் அக்கறை காட்டுவதில்லை. திருமுழுக்கு அருளடையாளத்தின் நோக்கம்
புறம்நோக்கிய மனத்தை அகம்நோக்கித் திருப்பி, உறவை நோக்கித் திருப்புவதாகும். இது குறித்து
நாம் கடந்த சில கட்டுரைகளில் விவாதித்தோம்.”
அருள்பணி: “தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும்
மகிழ்வைத் தேடுவதற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமையும் கடமையும் உண்டு என்றாலும்,
பொருளை நோக்கி நகர்ந்துதான் அவற்றை அடையமுடியும் என்று மனம் நினைப்பது தவறான ஒன்று.
இது நாம் ஏற்கெனவே சிந்தித்த மனத்தின் தன்மையாகிய மாயையோடு தொடர்புடையது. மனிதர்கள்
தங்களைக் காத்துக்கொள்ளவும், தங்களது மகிழ்ச்சியைக் கண்டுகொள்ளவும் உறவு என்பது மிகவும்
முக்கியமான ஒன்று.”
அன்புச் செல்வன்: “இன்று வெளிவரும் பல்வேறுவிதமான சமூகவியல்
ஆய்வுகளின்படி, ஒரு மனிதரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தின் பங்கு
20 விழுக்காடு மட்டுமே! உறவுதான் 80 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உறவு தன்னோடு உறவு,
பிறரோடு உறவு, இயற்கையோடு உறவு, கடவுளோடு உறவு என்று நான்கு நிலைகளில் பரிணமிக்கவேண்டும்.
எந்த ஒரு மனிதர் இந்த நான்கு வகையான உறவுகளில் ஒரு சேர வளர்கிறாரோ, அம்மனிதர் உண்மையான
பாதுகாப்பு உணர்வை அனுபவிப்பதோடு, நிலையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்.”
அருள்பணி: “இத்தகைய உறவை நோக்கி ஒரு மனிதர் நகர்வதற்கு
உதவி செய்யும் பொருட்டு கொடுக்கப்படும் அருளடையாளமே திருமுழுக்கு! திருமுழுக்கு நிகழ்வின்போது
கேட்கப்படுகின்ற ‘சாத்தானையும் அவனது செயல்பாடுகளையும் விட்டு விடுகிறீர்களா?’ என்ற
கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிவினையின் பிதாமகன் சாத்தான். எனவே, சாத்தானை
விட்டுவிடுவது என்பது உறவிற்கு எதிரான பிரிவினை எண்ணங்களை விட்டு விடுவதாகும். அதேபோல
‘கடவுளை நம்புகிறாயா?’ என்கின்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. கடவுளை நம்புவது என்பது
உறவை நோக்கித் திரும்புவதாகும். கடவுள் என்றாலே உறவு மற்றும் அன்பின் இருப்பிடம்தானே!”
கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு
எத்தகைய உறவுகளைப் பெற்றுத்தருகிறது என்பது குறித்துக் கூறுங்கள் தந்தையே!”
அருள்பணி: “புனித பிரான்சிஸ் சலேசியார் (St. Francis de Sales) திருமுழுக்கு வாங்கிய குழந்தையைப் பார்த்து
இவ்வாறு கூறுவாராம்: ‘என் மகனே, நீ வானதூதரின் தோழன்; இயேசுவின் சகோதரன்; தூய ஆவியின்
கோவில்; கத்தோலிக்கத் திரு அவையின் அங்கம்; இறைவனின் பிள்ளை.’ திருமுழுக்கு அருளடையாளம்
பெற்றுத்தரும் அற்புதமான உறவு கொடைகள் இவை. புனித சலேசியாரின் இக்கூற்றை நாம் கூர்ந்து
நோக்கினோம் என்றால், திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாக மண்ணக உறவுகளை மட்டுமல்ல,
விண்ணக உறவுகளையும் நாம் பெற்றுக் கொள்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரியவரும்.”
மார்த்தா: “தந்தையே, ஒவ்வோர் உறவாக எடுத்து விளக்குங்களேன்!”
அருள்பணி: “முதலாவதாக, திருமுழுக்கின் வழியாக
நாம் வானதூதர்களின் தோழர்களாக மாற்றப்படுகின்றோம். வானதூதர்கள் என்பவர்கள் கடவுளின்
பணியாளர்கள்; கடவுளின் பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் ஒவ்வொரு மனிதருக்கும் எடுத்துச்
செல்லக்கூடிய பணியைச் செய்பவர்கள். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு குழந்தையும், வானதூதர்களைப்
பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் பெறுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தோபித்து.
தோபித்து மகன் தோபியா நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டபோது அவனுக்குத் துணையாகச் சென்றவர்
இரபேல் என்ற வானதூதர்.”
மார்த்தா: “தந்தையே, வானதூதர்கள் மூன்று விதமான
பணிகளைச் செய்வது குறித்து திருவிவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அ) பாதுகாக்கும் பணி:
‘நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார்’ (திபா 91:11); ‘என் தூதர் உங்களோடு இருக்கிறார்; அவரே
உங்கள் வாழ்வைப் பாதுகாப்பார்’ (பாரூக் 6:6). ஆ) பரிந்து பேசும் பணி:
‘இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள், இவர்களுடைய
வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்’ (மத் 18:10). இவ்வசனம் நம் வானதூதர்கள்
இறைப் பிரசன்னத்திலிருந்து நமக்காகப் பரிந்து பேசுவதை எடுத்துரைக்கிறது. இ) வழிநடத்தும்
பணி: மரியா, யோசேப்பு, ஞானியர் ஆகியோருக்கு வானதூதர்கள் கடவுளின் செய்தியைக் கொண்டு
வந்து, அவர்களை வானதூதர்கள் வழிநடத்தியது நாம் அறிந்ததே!”
அகஸ்டின்: “அன்று மட்டுமல்ல, இன்றும் வானதூதர்கள்
நம் தோழர்களாக இருந்து நம்மை வழிநடத்துகின்றனர் என்ற செய்தியை அண்மையில் நான் வாசித்த
ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘Angels in my Air’ என்பதாகும்.
இதை எழுதியவர் லோர்னா பைரன் (Lorna Byrne) என்பவர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த
ஒரு விதவை இவர். இவர் எழுதிய இப்புத்தகம் வெளியிட்ட சில நாள்களிலேயே இலட்சக்கணக்கான
பிரதிகள் விற்பனையானது. ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் புத்தகம் மொழியாக்கம்
செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்: ‘நாம் வாழ்வின் எந்தச்
சூழ்நிலையிலும் தனியே இருப்பதில்லை; ஒரு வானதூதர் நம்மோடு இருக்கிறார்.’ லோர்னா வானதூதர்களை
தனது ஊனக்கண்களால் பார்ப்பதாகவும், மற்ற மனிதர்களுடன் பேசுவது போலவே அவர்களுடன் உரையாடுவதாகவும்
கூறுகிறார். வானதூதர்கள் நம் மிகச்சிறந்த தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றனர்
என்பதை எடுத்துரைக்கின்றார். “
அருள்பணி: “திருத்தந்தை புனித 23-ஆம் யோவான்
(இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் தொடங்கியவர்) ஒருமுறை புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு
மறைமாவட்ட ஆயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆயர், ‘திருத்தந்தையே, என்
பொறுப்பு மிகப் பெரியதாக இருக்கின்றது; என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை’ என்றாராம். அதற்குத் திருத்தந்தை, ‘நான் திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதே போன்றுதான் எனது பெரும்பொறுப்பை நினைத்துத் தூக்கமின்றித்
துன்பப்பட்டேன். ஒருமுறை இவ்வாறு நான் தூக்கமின்றிப் படுக்கையில் புரண்டபோது வானதூதர்
என்னிடம், ‘யோவானே, நீ திரு அவையை நடத்துவதாக நினைத்துக்கொள்ளாதே! உன்னைப் பற்றி பெரிய
அளவில் எண்ணிக் கொள்ளாதே. திரு அவையை வழிநடத்துவது தூய ஆவியார் என்பதை மறந்துவிடாதே’ என்றார். அன்று முதல் நான் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தேன்’ என்றாராம். இன்றும் வானதூதர்களின் செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது
என்பதற்கு இந்நிகழ்வும் ஓர் உதாரணம். நம் ஒவ்வொருவருக்குமே வான தூதர்களின் தோழமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனினும், நாம் அவர்களது குரலுக்குச் செவி கொடுக்கின்றோமா என்பதுதான் நமக்கு முன்னால்
உள்ள கேள்வி!”
கிறிஸ்டினா: “திருமுழுக்கு நம்மை இயேசுவின் சகோதரர்களாக்குகிறது
என்று சொன்னீர்கள் தந்தையே! அதை விளக்க முடியுமா?”
அருள்பணி: “இயேசு கடவுளின் மகன் என்ற முறையிலும், நாமும் கடவுளின்
மகன் / மகள் என்ற முறையிலும் இயேசுவின் சகோதரர்களாக திருமுழுக்கின் வழியாக மாற்றப்படுகின்றோம்.
‘தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால்
இயேசு இவர்களைச் சகோதரர்-சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை’ (எபி 2: 11) என்று எபிரேய நூலாசிரியர் கூறுவது நினைவுகூரத்தக்கது.
மேலும் இயேசு, ‘என் தந்தையும், உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ (யோவா 20:17) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. அதுபோல,
இறைவனின் திருவுளப்படி அவர் செயல்பட்டதுபோல் யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்கள்
எல்லாருமே அவரது சகோதர-சகோதரிகள் என்பதை இயேசுவே சுட்டிக்காட்டியிருக்கிறார் (மத்
12:50). இத்தகைய சகோதர பாசத்தின் பொருட்டே இயேசு நம்மை மீட்பதற்காகச் சிலுவையில் அறையுண்டார்.
சகோதர அன்பிற்காக அவர் கொடுத்த மாபெரும் விலை அது!”
மார்த்தா: “தந்தையே! சில கத்தோலிக்கக் கிறித்தவர்கள்
பெந்தகோஸ்து கிறித்தவர்களால் தூண்டப்பட்டு ‘இயேசப்பா’ என்று
கூறுகிறார்களே! இது சரிதானா?”
அருள்பணி: “அப்படியானால் இயேசு ‘தந்தை’ என்று அழைத்த தந்தையாகிய கடவுள் நமக்கெல்லாம் தாத்தாவா?
உணர்வுப்பூர்வமாகச் சொல்லப்படும் இத்தகைய வார்த்தைகள் தவறான இறையியலை நமக்குத் தந்துவிடுகின்றன.
இவற்றின் மட்டில் நாம் கவனமுடன் இருப்பது அவசியம்.”
(தொடரும்)