திருப்பலி முன்னுரை
‘இடுக்கமான வாயிலே இறைவாயில்’ என்பதைப் பற்றிச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பிறருக்கு நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் நிறைவாழ்வின் செல்வங்கள். இடுக்கமான வாயில் வழியே செல்வதே இறைவழி செல்வதாகும். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, உண்மை, நீதி, நேர்மை போன்றவற்றின்படி வாழ்வதையே ‘இடுக்கமான வாயில்’ என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. துன்பத்தை, சோதனையை, ஏளனத்தை, அவமானத்தை, வேதனைகளைத் தரக்கூடிய இடுக்கமான வாயிலான எருசலேம் நோக்கி இயேசு பயணிக்கிறார். துன்பத்தை நோக்கி இயேசு பயணம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய பெத்லகேம் அனுபவத்தையே நாடுகின்றோம். துன்பத்தைத் தந்தாலும் இறுதியில் வெற்றியையும் நிலைவாழ்வையும் கொடுக்கக்கூடிய எருசலேம் அனுபவத்தை நாம் விரும்புவதே இல்லை. எருசலேம் அனுபவம் மீட்பின் அனுபவம். துன்பம்
தேவையற்றது என்று சிந்திப்பதை விட்டு விட்டு, நம்முடைய வாழ்வில் அங்கமாக இருக்கும் துன்பத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும், நாம் அனுபவித்தத் துன்பங்களை நாம் ஒருபோதும் மற்றவருக்குக் கொடுக்காமல் நற்செயல்களின் வழியாக நற்செய்தியை விதைத்திடவும், நம்முடைய அனைத்து நிலைகளிலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம் முன்னுரை
நீதிக்காக, உண்மைக்காக, நேர்மைக்காக நாம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் ஆண்டவர் உடனிருப்பார். பிரிவுகள், அடுத்துள்ள மனிதரில் இறைச்சாயலைக் காணும்போது இறைவன் நம்மை மேன்மைப்படுத்துவார். நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிந்து, அதன்படி நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
கடவுள் இரக்கமுள்ளவர், பேரன்பு கொண்டவர், அனைத்து நிலைகளிலும் நம் உடன்வருபவர், தேவையானவற்றைத் தக்க நேரத்தில் தரக்கூடியவர். அவரது நன்மைத் தனங்களை மறந்து நம் மனம்போன போக்கில் வாழும்போது நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். தாயைப் போன்று அன்பு செய்தும், தந்தையைப் போன்று கண்டித்தும் நம்மைத் தூய வழியில் வழிநடத்தி வரும் இறைவனின் மகிமையை உணர்த்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின் இறைவா! உமது மீட்புப் பணியை இந்த அகிலத்தில் செய்துகொண்டிருக்கும் எம் திரு அவைத் தலைவர்கள் தங்களது வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நற்செய்தியைப் போதிக்கவும், மக்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் இறைவா! நாங்கள் வழிதவறும்போது எங்களை நீர் கண்டித்துத் திருத்துவதை நாங்கள் நல்மனதுடன் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வாழ்வில் வேரூன்றவும், தவறு செய்வதிலிருந்து திருந்தி வாழவும் தேவையான மனப்பக்குவத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின் இறைவா! ‘இடுக்கமான வாயிலில் நுழையுங்கள்’ என்ற உமது அழைப்பினை ஏற்று, எங்கள் வாழ்க்கையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் உமது மதிப்பீடுகளைக் கைவிடாமல் வாழவும், எங்களது சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் உமக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அன்பை மட்டும் விதைக்கவும், எம் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்கு நடமாடும் நற்செய்தியாக வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிடவும் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.