(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்:
“தந்தையே, திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு வெவ்வேறு வகையான உறவுக் கொடைகளை வழங்குகிறது என்பதைச் சிந்தித்து வருகிறோம். இதன் பின்னணியில் திருமுழுக்கு எவ்வாறு நம்மைத் தூய ஆவியின் ஆலயமாக மாற்றுகிறது என்பதைக் குறித்துக் கூறமுடியுமா?”
அருள்பணி:
“ஒரு கட்டடம் என்பது கற்களால் கட்டப்படுவது. அக்கட்டடத்திற்குள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அக்கட்டடத்தின் பெயர் மாற்றப்படும். ஒரு கட்டடத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் தங்கியிருந்தால், அக்கட்டடம் ‘விடுதி’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கணவன், மனைவி என்று ஒருவரையொருவர் அன்பு செய்பவர்கள் தங்கியிருந்தால் அது ‘வீடு’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் நாட்டை அரண்போல இருந்து பாதுகாத்து வருகின்ற அரசன் இருந்தால் அது ‘அரண்மனை’ என்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கடவுளின் பிரசன்னம் தங்கியிருந்தால் அது ‘கோவில்’ என்றும், ‘ஆலயம்’ என்றும் அழைக்கப்படும். ஒருவகையில் பார்த்தால் இந்த உலகின் ஒரே அரசர் கடவுள் மட்டுமே! ‘கோன்’ என்றால் ‘அரசன்’ என்று பொருள். எனவே, இவ்வுலகின் அரசராகிய கடவுள் இருக்கின்ற இடமே கோவில் (கோன்+இல்) என்று அழைக்கப்படுகிறது.”
அன்புச்செல்வன்:
“மனிதர்களாகிய நம் உடலில் தூய ஆவி தங்குவதன் காரணமாக நாமும் அவரது கோவிலாக இருக்கிறோம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ (1கொரி 3:16) என்கிறார் புனித பவுல். அவரே தொடர்ந்து, ‘உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?’ (1கொரி 6: 19) என்று எழுதுகிறார்.”
மார்த்தா: “தூய ஆவியார் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நம்மீது இறங்கி வருகிறார் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது: இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது தூய ஆவி இறங்கி வந்தார் (மத் 3:16). கொர்னேலியுவும் அவரது குடும்பத்தாரும் திருமுழுக்குப் பெற்றபோது, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டனர் (திப 10-ஆம் பிரிவு). மேலும், இயேசுவின் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கிலிருந்து வித்தியாசமானது. திருமுழுக்கு யோவானின் திருமுழுக்குத் தண்ணீரால் கொடுக்கப்பட்டது. அது மன மாற்றத்திற்காக மட்டுமே
கொடுக்கப்பட்டது. இயேசுவின் திருமுழுக்கு தூய ஆவியைக் கொடையாக வழங்கும் திருமுழுக்கு (திப 1: 2).”
அருள்பணி:
“மனிதர்களாகிய நமக்குள்ளேயே கடவுளின் பிரசன்னம் இருக்கின்றது என்ற சிந்தனையைக் கிறித்தவம் அதிகமாக வலியுறுத்தினாலும், இத்தகைய சிந்தனை மற்ற ஆன்மிக மரபுகளிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சிவவாக்கிய சித்தர் இவ்வாறு கூறுகின்றார்:
‘கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும்
குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும்
மனத்துளே குளங்களும் மனத்துளே!’
அதேபோல
திருமூலரும், ‘கூடிய நெஞ்சத்து கோயிலாகக் கொள்வனே’ என்று சொல்கிறார்.”
அகஸ்டின்:
“தந்தையே! எனக்கு ஒரு கேள்வி எழும்புகிறது. தூய ஆவியின் பிரசன்னம் நமக்குள் இருப்பதன் காரணமாக நாமே கோவிலாகத்தான் இருக்கின்றோம். எனவே, நாம் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு கடவுளைத் தியானிக்கவும் வழிபடவும் செய்யலாமே! ‘ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்?’ இது எனது கேள்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற சில இளைஞர்கள் ‘New age Spirituality’ என்று
சொல்லப்படுகின்ற நவீனவகை ஆன்மிகத்தின் பின்னணியில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.”
அருள்பணி:
ஏறத்தாழ இதேபோன்ற ஒரு கேள்வியை ஒரு துறவு மடத்தின் தலைவராக இருந்த தலைமைத் துறவியிடம் ஓர் இளம் துறவி கேட்டாராம். அதாவது ‘நானே கோவிலாக இருக்கும்போது, நான் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்?’ என்ற கேள்வி! அப்போது அந்தத் தலைமைத் துறவி ஓர் எரிகின்ற மெழுகுதிரியை இளம் துறவியிடம் கொடுத்து, திறந்த வெளியில் பிடித்திருக்கச் சொன்னார். திரி காற்றினால் அணைந்து போனது. அதே திரியை மீண்டும் ஏற்றி ஒரு கட்டடத்திற்குள் பிடிக்கச் சொன்னார். இப்போது மெழுகுதிரி அணையவில்லை. தலைமைத் துறவி இளம் துறவியிடம், ‘கடவுள் நமக்குள் இருந்தாலும், அவரை உணர்வதற்கு ஏற்ற சூழல் எல்லா இடங்களிலும் இருந்து விடுவதில்லை. இத்தகைய தகுந்த சூழலை ஆலயம் வழங்குகிறது’ என்று
சொன்னாராம்.”
மார்த்தா: “தந்தையே, திருமுழுக்கு நமக்கு வழங்கும் அடுத்த கொடை ‘திரு அவையின் உறுப்பினர்’ என்பது!
அது குறித்து...?”
அருள்பணி:
“மனிதர்களாகிய நாம் உறவி(வா)ல் உருவாவதோடு,
உறவிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம். உறவிற்காக ஏங்குவதும், உறவை நோக்கிப் பயணிப்பதும் மானுட வாழ்வின் அடிப்படைத் தன்மை. உறவிற்காக ஏங்கும் நாம், உறவை ஏற்படுத்தி, அதில் வளர்வதற்காக நல்ல தளத்தை நமக்கு அமைத்துக் கொடுப்பது திரு அவை! உதாரணமாக, நமது பங்குத் திரு அவையும், அதில் உள்ள பல்வேறு வகையான பக்தசபைகளும், நாம் உறவில் வளர்வதற்கான ஏற்ற இடம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், திரு அவை என்பது தங்களிடையே ஆழமான உறவு கொண்ட இறைமக்களின் கூட்டம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
அன்புச்செல்வன்:
“தொடக்கக் கிறித்தவர்களின் இணைந்த, இயைந்த வாழ்வு (திப 2 மற்றும் 4-ஆம் பிரிவுகள்), ஒற்றுமை கொரிந்து நகர கிறித்தவர்களிடம் இல்லாததை புனித பவுல் கண்டித்தது (1கொரி 11-ஆம் பிரிவு), கிறித்தவ வாழ்வின் அடிப்படை நெறியாக அன்பை அவர் சுட்டிக்காட்டுவது (1கொரி 13-ஆம் பிரிவு)... இவை அனைத்துமே திரு அவையின் உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், யூதர்-கிரேக்கர், அடிமைகள்-உரிமைக் குடிமக்கள் போன்ற மேலோட்டமான வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் (1கொரி 12:13), திரு அவை என்கின்ற ஒரே உடலின் உறுப்புகளாக நாம் வாழ்வதற்கான அழைப்பையும் புனித பவுல் தருகிறார்.”
அருள்பணி:
“திரு அவையில் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு முக்கியமான நிகழ்வு இரண்டாம் வத்திக்கான் சங்கம்! இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்புவரை திரு அவை ஓர் அமைப்பாகக் (Institution) கருதப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கமோ திரு அவை ஓர் இறைமக்களின் குழுமம் (Community of people
of God) என்ற கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தது. திரு அவையின் நிறுவனத்தன்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் உறவுத்தன்மையைத் தூக்கிப்பிடித்தது இரண்டாம் வத்திக்கான் சங்கம். திருமுழுக்குப் பெறும் ஒரு நபர் இத்தகைய ஓர் உறவுக் கூட்டத்தின் உறுப்பினராக இணைகின்றார்.”
மார்த்தா:
“தந்தையே, உறுப்பினர் என்கின்ற வார்த்தை ஓர் அற்புதமான வார்த்தை. அது ‘உறுப்பு’ என்கின்ற வார்த்தையைத் தன்னகத்தே கொண்டது. உடலில்
ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தன்மை உண்டு. எனினும், மற்ற உறுப்புகளோடு இணைந்திருக்கும்போது மட்டுமே அந்த உறுப்பு செயல்பட முடியும். ‘உடல் ஒன்றே! உறுப்புகள் பல’
(1கொரி 12:12-30) என்கிறார் புனித பவுல். இங்கு உடல் உறுப்புகள் தனித்தன்மையோடும், அதேவேளையில் ஒன்றையொன்று சார்ந்தும் செயல்படுவதை புனித பவுல் உதாரணமாகக் காட்டி, திரு அவையின் உறுப்பினர்களும் அவ்வாறே செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். திரு அவையாகிய உடலின் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே (எபே 5: 23) என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.”
அருள்பணி:
“இன்றைய திரு அவையானது ஸ்டீபன் ஹாக்கிங் திரு
அவையாக (Stephen hawking Church) இருக்கின்றது.
ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர். அண்மையில்தான் அவர் இறந்தார். அவர் தலை மிகவும் சிறப்பாகச் செயல்படக்கூடியது. விண்வெளி இரகசியங்களை ஆராயக்கூடியது. ஆனால், அவரது ஒட்டுமொத்த உடலோ செயலற்றதாக இருந்தது. 20 வயதில் வந்த ஒரு நோயின் காரணமாகத் தலையைத் தவிர உடலின் எல்லா உறுப்புகளும் செயலற்றதாக மாறின. 20 வயது முதல் 76 வயது வரை அவர் சக்கர நாற்காலியில்தான் இருந்தார். திரு அவையாகிய உடலின் தலையாகிய கிறிஸ்து இன்றுவரை சிறப்பாகச் செயல்படுகிறார். உடலாகிய நாமோ சாதியம், சடங்காச்சாரம் போன்றவற்றால் முடக்கப்பட்டுக் கிடக்கின்றோம். திரு அவையின் உறுப்பினர்களாகிய நாம் நம் மேன்மையை உணர்ந்து கிறிஸ்துவோடு இணைந்து செயல்படக்கூடிய உயிரோட்டம் உள்ள உடலாக மாறுவது அவசியம்.”
(தொடரும்)