news-details
தலையங்கம்
பா.ச.க. ஆட்சியில் வாக்குத் திருட்டும்-பொய்யும் புரட்டும்!

1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்தியா ஒரு மக்களாட்சிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தங்களை ஆள்வதற்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமையைக் கொண்டஇந்த அரசியல் அமைப்பு, இன்று பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்றும், இங்கு நடைபெறுவது உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் தேர்தல் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டு, ‘மக்களாட்சியின் தாய் - இந்தியாஎன மார்தட்டிக்கொண்ட காலம் இன்று மலையேறிப் போய்விட்டது.

மக்களாட்சித் தத்துவம் என்பது, எங்கோ கடன் வாங்கப்பட்ட சிந்தனை அல்ல; இது இந்தியாவில் உள்நாட்டில் வளர்ந்த, பல காலமாகக் கொண்டிருக்கும் நடத்தை முறையால் ஆழமாக நிறுவப்பட்டதுஎன்றும், “அது நீதிநெறிக்கு உட்பட்டதுஎன்றும் வரையறை தருகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொதுக் கொள்கைகள் குறித்து முடிவெடுக்கும் நடைமுறையில் பங்குகொள்கிறது இந்த மக்களாட்சித் தத்துவம். இது நீதிநெறி, அறவாழ்வு, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டிருக்கிறது. ஆனால், இந்த நங்கூரம் இன்று பெரிதும் அசைவு கண்டிருக்கிறது; பேராபத்து நெருங்கியிருக்கிறது.

நம்மை அடிமைப்படுத்திய அரசுக்கு மாற்றாக, நம்மில் விடுதலை அரசு மலர்ந்த பின்பும் அது எல்லாவிதமான சுரண்டல் போக்குகளையும் அப்படியே பாதுகாத்தால் விடுதலைக் காற்று விழலுக்கிறைத்த நீர்போல் ஆகிவிடும். அங்கே விடுதலையின் உண்மையான உட்கூறுகளைக் காணமுடியாது; அடிமையின் தளை உடைத்த ஆனந்தம் தென்படாது.

உனது சுதந்திரத்தால் உனக்கு

ஒரு பயனும் இல்லை என்கிறார்கள்...

எனக்கும் தெரியவில்லை,

எனது சுதந்திரத்தை வைத்துக்கொண்டு

என்ன செய்வதென்று? அது இருக்கிறதென்ற

ஒரு நிம்மதியைத் தவிர!’

என்னும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன!

நாட்டில் நிலவிய சுரண்டலும் ஊழலும் ஒழிந்தபோதுதான் விடுதலைக் காற்று வீதிகளில் உலா வரக்கூடும். அதுவே விடுதலையின் அடையாளம்என்றுரைத்தார் நேரு. அரசியல் அமைப்பின் மூலம், பல்வேறு துறைகள் மற்றும் ஆணையங்களைக் கொண்டு எவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டுமென நேரு ஆசை கொண்டாரோ, அந்த அரசியல் அமைப்புகளை எல்லாம் இன்று அவற்றைப் பாதுகாக்கும் வலிமையான இரும்புக்கவசங்களாக ஒன்றிய அரசு மாற்றிவிட்டது.

மக்களாட்சித் தத்துவம் கொண்ட இந்தியாவில் சமத்துவமும் சகோதரத்துவமும் செழிக்க வேண்டுமென்றால், இங்கு மக்களால் சுதந்திரக் காற்று சுவாசிக்கப்பட வேண்டும். சுதந்திரக் காற்று வீசுவதற்கு மக்களாட்சிக் கோட்டையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும்; கதவுகளைத் தாங்கியிருக்கும் நிலைகள் என்றென்றும் உறுதி கொண்டிருக்க வேண்டும். கதவுகள் மூடப்படுவதும் நிலைகள் இற்றுப் போவதும் பேராபத்தின் அவலமான அடையாளங்களே!

அத்தகைய பேராபத்துகள் நிகழா வண்ணம் மேற்கொள்ளப்படும் மராமத்துப் பணிகள்தான், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் தேர்தல் நடைமுறைகள். மராமத்துப் பணிகளில் ஊழல் நடந்தால் மாளிகை பாழாகும், கோட்டையும் குடிசையாகிப் போகும்!

அரசியல் அமைப்புச் சட்டம் தந்த பிறப்புரிமையில் மிகவும் குறிப்பிடத்தக்கதுவாக்குரிமை.’ இன்று ஒன்றிய பா... அரசின் ஆட்சிக்காலத்தில் பிறப்புரிமையும் பறிக்கப்படுகிறது; வாக்குரிமையும் திருடப்படுகிறது. சுயநலத்தில், பதவி மோகத்தில் ஊறித்திளைக்கும் தலைவர்களின் திருவிளையாடல்கள் இவை. இன்னும் எத்தனை காலங்கள் நாம் இக்கொடுமைகளைக் காணவிருக்கிறோம் எனத் தெரியவில்லை!

உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையின் காப்பாளராக உள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், இப்போது தவறுகளுக்கு மேல் தவறுகள் எனப் பட்டியல் நீள, அவமானத்தின் உச்சியில் அலங்கோலமாய் அமர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரிசாவிலும் இந்த அநீதி நிகழ்த்தப்பட்டிருக்கிறது என அங்கே ஆட்சியைப் பறிகொடுத்த பிஜூ ஜனதாதளமும் களத்தில் இறங்கியிருக்கிறது. செத்துப் போனதாகக் கூறி நீக்கப்பட்ட பல்லாயிரம் வாக்காளர்களில் இருவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தி தேர்தல் ஆணையத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தார் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ். தனித்து  அறநெறி வழிநின்று, உண்மையின் பக்கம் நிலைப்பாடு கொண்டு, நீதி வழியில் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் ஒன்றிய பா... அரசுடன் கூட்டுச் சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது நாட்டிற்குப் பெரும் அவமானம்.

‘SIR’ (Special Intensive Revision of Electoral Rolls) எனப்படும் வாக்காளர் பட்டியல்களின்சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைஎன்ற பெயரில் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அங்குத் தேர்தல் ஆணையம் திடீரென மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது; அது இன்று சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கைத்தன்மை குறைந்த சூழலில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆளும் ஒன்றிய பா... அரசு மௌனம் சாதிக்கிறதுஎதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு பொய்யையும் புரட்டையும் பரப்பிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பா... அரசு கடந்த தேர்தல்களில் நாடெங்கும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக இராகுல் காந்தி குற்றம் சாற்றியிருப்பது, இன்று நாடெங்கும் பேசு பொருளாகியிருக்கிறது. ஒரு நபர் பல இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், ஒரே ஒரு படுக்கையறையைக் கொண்ட வீட்டில், 80 வாக்காளர்கள் வாழ்வதாக வாக்காளர் பட்டியல் இருப்பதாகவும் குறிப்பிடும் இராகுல் காந்தி, மூன்று வகையானமுகவரி மோசடிகள்நடந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று, இல்லாத முகவரியில் இருப்போர் என்றும்; அதாவது, அப்படிப்பட்ட முகவரியே இருக்காது என்றும்; இரண்டாவதாக, வீட்டு எண் 0, தெரு எண் 0 எனக் குறிப்பு ஏதுமற்ற முகவரிகளும், மூன்றாவதாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகளும் கொண்ட வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டுமே 40 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடும் என்கிறார். மேலும், எண்ம வாக்காளர் பட்டியலை வெளியிடத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியைத் தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? பா...-வின் கட்சிப் பிரதிநிதிபோல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளைத் தேர்தல் ஆணையம் மிரட்டுவது ஏன்? என அவர் எழுப்பும் பல கேள்விகள் நமது குரலாகவும் ஒலிக்கின்றன.

இது இந்திய மக்களாட்சித் தத்துவத்திற்கு எழும்பி இருக்கும் மிகவும் அவலமான நேரடி அச்சுறுத்தலாகும். ஆகவேதான், கடுமையான எதிர்வினைகள் தற்போது ஆங்காங்கே எழும்புகின்றன. “ஒன்றிய பா... அரசு, இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் கொள்ளையடிக்கிறது; இனியும் நாம் வேடிக்கை பார்க்க முடியாது. வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்ட போர்; இதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமைஎன்று அழைப்பு விடுக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

ஆயினும், “பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 இலட்சம் நபர்களின் பெயர்களைத் தனியாக வெளியிட அவசியமில்லை; இதை வலியுறுத்தும் வகையில் எந்தச் சட்ட விதியும் கிடையாதுஎன்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இக்குளறுபடிகளுக்குத் தெளிவான பதில் தரும் வகையில், தகுந்த ஆவணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, தனது ஆணவத்தைக் காட்டுகிறது தேர்தல் ஆணையம்.

ஆகவே, “வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை என்ற பெயரில் 5 கோடி வாக்காளர்களை நீக்கினால், நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதுஎனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இத்தகைய சூழலில், ‘அச்சமின்மைஎன்பது இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் காரணம்என்னும் விவேகானந்தரின் கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது. ஆகவே, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது அவசியமாகிறது. தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து, விமர்சனங்களைத் துறந்து, நாட்டு நலனுக்கான முன்னெடுப்புகளில் துணிவுடன் ஒன்றிணைய வேண்டும்.

பார்வையில் தெளிவு வேண்டும்; அரசியலில் தூய்மை வேண்டும். வாருங்கள்; துணிவோடு கரம் கோர்ப்போம்; ஒன்றாக அணிதிரள்வோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்