news-details
தலையங்கம்
வரலாறு படைக்கும் ‘நம் வாழ்வே!’- நீ வாழ்க! வளர்க! என்றும் உயர்கவே! - நம் வாழ்வின் மின்னஞ்சல் நாளிதழ் (E-newspaper)

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே!

நம் வாழ்வுவார இதழை ஞானத் தேன்கூடு என்பேன்! இம்மானுடத்தின் சமூகம்-அரசியல்-ஆன்மிகம் மற்றும் வாழ்வியலின் பல்வேறு தளங்களில் மலர்ந்த மலர்களிலிருந்து எடுத்து வரப்பட்ட ஞானத்தேன், சமூகத்தின் நீதித்தேன், அரசியல் அவலங்களைச் சுட்டிக்காட்டும் அறத்தேன்... என அனைத்தும் ஒன்றுசேர்ந்த ஞானத் தேன்கூட்டை உங்கள் கைகளில் நீங்கள் தாங்கியிருக்கிறீர்கள். இது இறைப்பற்றுக்கான ஞானத்தை ஊட்டுகிறது; அறவழிக்கான மானுட மதிப்பீட்டைக் கூறுகிறது; சமூக நீதிக்கான வழிகளைக் காட்டுகிறது; புதிய சமுதாயம் படைக்க புதுப்பாதை வகுக்கிறது! தொடரும் இந்த அமுதப் பரிமாறுதலில், ஆனந்த உபசரிப்பில், இது தேனாகவே தென்படுகிறது.

பல நூல் படித்துப் பெற்றக் கல்வியை, உயிர் ஆற்றல் கொண்டதாக வைத்திடவே வாசிக்கவும் யோசிக்கவும் அதன்பின் யாசிக்கவும் நம் முன்னோர்கள் வழிகாட்டினர். இன்று அதற்கெல்லாம் நேரமில்லை! பல நூல்களை, கட்டுரைகளை, செய்திகளை, தரவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமில்லை என்பதைவிட, நமக்கு நேரமில்லை என்பதுதான் சிலருக்கு எதார்த்தம், பலருக்குச் சாதகமான பதில்.

பல அறநெறி நூல்கள், இலக்கியங்கள், சமயப் புனித நூல்கள், சமூக-அரசியல் கட்டுரைகள் என யாவற்றிலிருந்தும் வடித்தெடுத்து, பிழிந்து சாறாக்கி அமுதமெனக் கொடுக்கின்றபோது அருந்த நாம் மறுப்போமோ?

நம் வாழ்வு - ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்என்னும் இலட்சிய வேட்கையோடு அதன் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து, புதுப்பொலிவு பெறும் இக்காலச் சூழலில், பெரும் எண்ணிக்கையில் வாசகர்கள் கூடுவதும் ஆதரவு அளிப்பதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! உங்கள் பேராதரவிற்கு மிக்க நன்றி!

50 ஆண்டுகள் வீறுநடைபோடும்நம் வாழ்வுஎன்னும் இவ்விதழ், சமூகத்தொடர்புக் கருவிகள் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் எழுந்த சிந்தனை மறுமலர்ச்சியின் கனி என்றால் அது மிகையாகாது. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் இவ்வேளையில், திருச்சங்கத்தின் வழிகாட்டுதலில் திரு அவை நாளுக்கு நாள் புடமிடப்படுகிறது; வளர்ச்சிநிலை அடைகிறது; காலத்தின் அறிகுறிகளைத் தன்வயப்படுத்தி மாற்றம் காண்கிறது என்ற சிந்தனையின் நீட்சியாகநம் வாழ்வும்அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

வியப்புக்குரிய பல தொழில்நுட்பங்களை மனித ஆற்றலால் கடவுளின் உதவியோடு நாம் கண்டுபிடித்திருக்கிறோம்; அவற்றுள், மனித  உள்ளத்தோடும் மானுட வாழ்வியலோடும் நெருங்கிய தொடர்புள்ள செய்திகளையும் கருத்துகளையும் வழிமுறைகளையும் மிக எளிதாக மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய புதிய வழிகளைத் தாய்த் திரு அவை ஏற்று தனிப்பட்ட அக்கறையோடு கூர்ந்து கவனித்து வருகிறது(Inter Mirifica, 1) என்கிறது திருச்சங்க ஏடு. மேலும், “முதலில் பொறுப்புணர்வு மிக்க அச்சு வெளியீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; கிறித்தவ உணர்வில் வாசகர்களை வளரச் செய்ய உண்மையான கத்தோலிக்க அச்சுத்துறையை நிறுவி வளர்க்க வேண்டும்; இயற்கை நெறிக்கும் கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் இயைந்தவாறு பொதுமக்களின் கருத்துகளை உள்வாங்கி, உருவாக்கி, உறுதிப்படுத்தி வளர்ப்பதோடு, திரு அவைச் செய்திகளை வழங்கி அவற்றிற்கு ஏற்ற விளக்கமும் வழங்கப்பட வேண்டும்; கிறித்தவக் கண்ணோட்டத்தோடு அவையனைத்தும் கணிக்கப்பட வேண்டும்...” எனவும் வழிகாட்டுகிறது அதே திருச்சங்க ஏடு (எண். 14).

இக்கருத்துகளை நன்கு உள்வாங்கிய ஆயர் பெருமக்கள்நம் வாழ்வுவார இதழின் பிறப்பு நாளில் ஆசி வழங்கியபோது, ‘இது வளர்ந்து நாளடைவில் கத்தோலிக்க இறைச்சமூகத்தின் அன்றாட நாளிதழாக மலர வேண்டும்என்றே ஆசி வழங்கியுள்ளனர். 50 ஆண்டுகால நமது கனவு இன்று எண்ணிமத் தொழில்நுட்ப உலகில்மின்னஞ்சல் நாளிதழாகநனவாகியிருக்கிறது. இச்சூழலில்,

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல் (குறள் 637)

எனும் ஐயன் வள்ளுவரின் வாக்கே எம் நினைவுக்கு வருகிறது. அதாவது, நூலறிவு கொண்டு பல செயல்களைச் செய்ய அறிந்த போதிலும், இயற்கையின் வழியறிந்து, உலகத்தின் நடைமுறைகளையும் கணித்து அதனோடு பொருந்திச் செயல்பட வேண்டும் என்கிறார்.

வாழ்வை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் சரிசெய்வதற்கும் தேவைப்படும் அற்புதமான இறை-மறைச் சிந்தனைகளை, சமூக-அரசியல்-வாழ்வியல் தளத்தில் உரசிப்பார்த்து நம்மை வளப்படுத்தும்நம் வாழ்வுவார இதழ் உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, மாவட்டங்கள், மறைமாவட்டச் சூழல்கள் என அனைத்துத் தளங்களிலிருந்தும் செய்திகளைச் சுமந்து மின்னஞ்சலாக, சமூக வலைத்தளங்களில் உங்கள் இல்லம் நோக்கி வலம் வந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து வரவிருக்கிறது!

செயல்களின் பிறப்பிடம்  நம்எண்ணம்என்பார்கள். எண்ணங்களே எல்லாச் செயல்களுக்கும் மூல காரணமாக அமைகின்றன. எண்ணங்கள் உயர்ந்தும் சிறந்தும் அமைகின்றபோது சாதனைகள் பல சாத்தியமாகின்றன. இலக்கை அடைவதற்கு நல்ல எண்ணங்களும் உறுதி கொண்ட செயல்பாடுகளும் வேண்டும் என எண்ணும்போது,

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவை எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்!’

எனும் முண்டாசுக் கவிஞனின் வரிகளே நம் கண் முன் நிழலாடுகின்றன!

இலக்கினை அடைய முயலும்போது பாதைகள் கடினமாய் அமைவது இயல்பே! இலக்கினை அடைய வீறுகொண்டு எழும்போது எதிர்வரும் தடைகள் அனுபவங்களாகவே மாறுகின்றன. “ஒவ்வொரு முறையும் நாம் முயற்சியைத் தொடங்கும்போது, நாம் இலக்கினை எட்டுகிறோம்என்ற ஆபிரகாம் லிங்கனின் வரிகள்தான் வரலாற்றில் பலருக்குப் பல வேளைகளில் இலக்கை எட்டிப் பிடிக்கும் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அத்தகைய எண்ணத்தில்எண்ணித் துணிக கருமம்...’ எனப் பயணிக்கின்றபோது, “நீர் நினைப்பது கைகூடும்; உன் வழிகள் ஒளிமயமாகும்\\\" (யோபு 22:28) என்னும் இறைவாக்கே எம்மை நாளும் தேற்றி வலுவூட்டின.

இத்தகைய வரலாறு படைக்கும் சூழல் ஒருநாள் நிகழ்ச்சி அல்ல; மாறாக, பலநாள் முயற்சி. இத்தகைய எண்ணங்கள் கால ஓட்டத்தில் அசை போடப்பட்டு எம் முன்னவர்களால் பல முயற்சிகளில் வடிவமைக்கப்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு, சாத்தியக்கூறுகள் அலசி ஆராயப்பட்டு, இன்று பொன்விழா ஆண்டில் அது முடியும் என்று விடியல் கண்டிருக்கிறது.

காலத்தின் அறிகுறிகளை நுட்பமாகக் கணித்து, இந்த மின்னஞ்சல் நாளிதழ் வெளிவர கருத்துப் பரிமாற்றமும் கள ஆய்வும் பல தளங்களில் பல்வேறு சூழல்களில் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், பலருடைய எண்ண ஓட்டங்களிலும்இது தேவை (லூக் 19:31) என்பதாக அறியப்பட்டு, இம்முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இம்முயற்சியில் அடிப்படைச் சாத்தியக்கூறுகளைக் கணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் உடன் பயணித்த சென்னை-இலயோலா கல்லூரியின் ஊடகத்துறைப் பேராசிரியர் திரு. பெர்னாட் டி சுவாமி அவர்களுக்கும், அவருடைய எண்ணிமத் தொழில்நுட்பக் குழுவினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்நாள் ஆயர் பேரவையின் கனவு நனவாக, இந்நாள் ஆயர் பேரவை நல்கிய பெரும் ஒத்துழைப்பை எண்ணிப்பார்க்கிறேன். ஆயர் பேரவையின் தலைவரும், எம் அச்சு ஊடகப் பணியகத்தின் மேனாள் தலைவருமான மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், இம்முயற்சியில் தோள்கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் தந்து உடன் பயணிக்கும்நம் வாழ்வுவார இதழின் மேனாள் முதன்மை ஆசிரியரும், இந்நாள் வெளியீட்டுச் சங்கத் தலைவரும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆயர் பேரவையின் தனியொரு நிறுவனமாக இம் முயற்சியைநம் வாழ்வுமுன்னெடுத்தாலும், எல்லாருடைய ஒத்துழைப்புமே இதன் முழு வெற்றிக்கான படியாக அமைய முடியும். அவ்வகையில், தமிழ்நாடு ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர், தமிழ்நாடு துறவியர் பேரவையின் ஊடகத் தொடர்பாளர், மறைமாவட்ட இதழ்களின் ஆசிரியர்கள்-எழுத்தாளர்கள், மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர்கள், மறைமாவட்ட மக்கள் தொடர்பாளர்கள் (PRO), பங்குத்தந்தையர்கள், திருத்தல இதழ்களின் ஆசிரியர்கள்-எழுத்தாளர்கள், துறவற சபைகளின் தலைமைச் செயலர்கள், இவர்களுடன் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பணியாற்றும் எம்நம் வாழ்வுபொறுப்பாளர்கள், தன்னார்வப் பணியாளர்கள், ‘நம் வாழ்வுஎழுத்தாளர் பயிற்சிப் பாசறையில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள், நல்லுள்ளங்கள் யாவரும் தங்களைச் சார்ந்த பணியிலும் தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணிப்பொறுப்பு சார்ந்தும் செய்திகளை உடனுக்குடன் எமக்கு அனுப்பிவைத்து, எம்முடன் தொடர்ந்து பயணிக்கின்றபோது வளமான செய்திகளை நலமான தமிழ்ச் சமூகத்திற்குத் தடையின்றி வழங்க முடியும் என்றே நம்புகிறேன்.

இறுதியாக,

நிறை காண்பின் மனம்திறந்து வாழ்த்திடுவீர்!

குறை இருப்பின் மன்னித்துப் பொறுத்தருள்வீர்!

வளம் சேர்க்க சீர்கருத்துகளை வழங்கிடுவீர்!

வானளாவ உயர்ந்திட வாஞ்சையோடு பகிர்ந்திடுவீர்!

பாரெங்கும் பரவிடவே பேராதரவு நல்கிடுவீர்!

பாரச்சுமையைத் தாங்கிடவே பொருளுதவி தந்திடுவீர்!

நாளைய சமூகம் நலம் காண, இன்றைய சமூகத்தில்நம் வாழ்வு- ஓர் இறைவாக்கினன்! ‘நம் வாழ்வு- இது நமது இதழ்; நமது குரல்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்