news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 22 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (31-08-2025) சீஞா 3:17-18, 20,28-29; எபி 12:18-19, 22-24; லூக் 14:1, 7-14

திருப்பலி முன்னுரை

தாழ்ச்சியே மாட்சிஎன்ற தலைப்பில் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சியான உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. உணர்விலும் ஆன்மிகத்திலும் முதிர்ச்சியடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. தாழ்ச்சியோடு வாழவே விரும்புவார்கள். தாழ்ச்சி என்ற புண்ணியத்தை அணிகலனாய் கொண்டவர்களின் வாழ்க்கை ஆசிரால் மிளிர்கிறது. தாழ்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. தாழ்ச்சி நம்முடைய நன்மதிப்பை உயர்த்துகிறது. தாழ்ச்சி என்பது வீழ்ச்சியல்ல; அது மகிழ்ச்சியான வாழ்வின் திறவுகோல். மதிப்பும் மரியாதையும் நாம் கேட்காமலே கிடைப்பதற்குத் தாழ்ச்சி என்ற பண்பு நமது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கவேண்டும். நம்முடைய விருந்துகளில் பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, இறைவனின் பிள்ளைகளான ஏழைகள், கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். மனத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் அனைத்து மக்களோடும் சமத்துவ உறவில் நிலைத்து, ஏழைகளோடு தோழமை கொண்டு வாழ்ந்து, விண்ணகத்தின் முன் சுவையை இம்மண்ணக மக்களும் சுவைக்க உதவுவோம். தாழ்ச்சி என்ற பண்பால் இந்த அகிலத்தையே வென்ற ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, தாழ்ச்சியோடு வாழ்ந்து மாட்சி அடைய வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெறுகின்றனர். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கிறது. நாம் செய்வதனைத்தையும் ஆண்டவருக்காகப் பணிவோடு செய்யவேண்டும் என்று முதல் வாசகம் நமக்குக் கூறுகிறது. வீண்பெருமைகளை விடுத்து, நல்ல மனிதர்களாக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்வில் எந்தப் பொருளையும் உயிர்களையும் மனிதர்களையும் அற்பமாகப் பார்க்காமல், அற்புதமாகப் பார்க்கும்போது இறைவன் மாட்சி அடைகின்றார். பணத்தையும் பதவியையும் வைத்து மதிப்புக் கொடுக்காமல் ஏழைகள், இல்லாதோர், இயலாதோர் அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ்வோம். நமது இதயத்தைத் தூய்மையாக்கிப் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராகிய கிறிஸ்துவின் முன்னிலையில் மகிழ்வோடு நிற்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணியைச் செய்வதற்கு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட எம் திரு அவைத் தலைவர்களுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். உம்மைப் போன்று தாழ்ச்சியும் பரிவும் அன்பும் நிறைந்த தலைவர்களாய் இருந்து மக்களை ஞானத்தோடு வழிநடத்தத் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நீ செய்வதனைத்தையும் பணிவோடு செய்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஆணவத்தை விடுத்து தாழ்ச்சியோடு வாழவும், இவ்வுலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்கள் என்று எண்ணி அனைவரோடும் நல்லுறவுடன் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். ‘நான்தான் பெரியவன், நான் சொல்வதுதான் சரிஎன்று கூறி மகிழ்ச்சியை இழந்து விடாமல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் ஆண்டவரே! இவ்வுலகில் உள்ள இளைஞர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தூயவர்களாக வாழவும், நாளும் இறைநம்பிக்கையில் வளரவும், இவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கவும் தேவையான ஆசிரைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.