news-details
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 17, 2025, ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 38:4-6,8-10; எபி 12:1-4; லூக் 12:49-53 - அநீதிக்கு எதிரான நீதித் தீ பற்றியெரியட்டும்!

நான் உண்மையானவனாய் வாழ்வதற்காக இந்த உலகம் எனக்கு அபராதம் போடுகிறது. பரவாயில்லை, பொய்மையின் தோள்களில் பயணிப்பதைவிட, உண்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதுகூட சிறந்ததுதான்.” சிந்திக்கத் தூண்டும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதை வரிகள் இவை. உண்மைகளை உணர்ந்து, உண்மைகளைப் பகரும் மனிதர்கள் சராசரி மனிதர்கள் அல்லர்; அவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து முழக்கமிடுபவர்களும் அல்லர்; மாறாக, தனித்து நின்று, இறையாட்சியின் உண்மைகளை அச்சமின்றி முழங்குபவர்கள்.

இறைவாக்கினர்களின் மேலான பணி என்பது பொய்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உண்மையை எடுத்துரைப்பதாகும். தீமையைச் சுட்டிக்காட்டுவதும், தீமையிலிருந்து விலகியிருக்க வழிகாட்டுவதும், கடவுளின் வழியைக் காண்பிப்பதும் இறைவாக்கினர்களின் சவால் நிறைந்த பணி. உண்மையை உரக்க உரைப்பதன் நிமித்தம் இவர்கள் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரின் பகைக்கு ஆளாவார்கள்; கலகக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்; சிறைவாழ்வுக்குத் தள்ளப்படுவார்கள்; எண்ணிலடங்காத் துன்ப துயரங்களை அனுபவிப்பதுடன், கொடூரச் சாவினையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

மத்திய அமெரிக்காவின் ஒரு சிறு நாடு எல் சால்வதோர். இதன் தலைநகரமான சான் சால்வதோர் நகரின் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள். 1970-களில் அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன் எல் சால்வதோர் அரசு ஏழைகளைத் துன்புறுத்தியது. அந்நாட்டு அரசின்கொலைப் படையால் (Death squad) பலர் கொல்லப்பட்டனர். கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு அமெரிக்க அரசு அளித்து வந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப்பின், 1980, மார்ச் 24-ஆம் தேதி திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில், இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க வேண்டுமென நம்மை வலியுறுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் எடுத்துக்காட்டப்படும் இறைவாக்கினர் எரேமியா உண்மையைப் பேசியதால் உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். பாபிலோனிய அரசன் நெபுகத்நேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். எனவே, பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு யூதாவின் அரசன் செதேக்கியாவை அரச அலுவலர்கள் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், அவர்களிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் கூறுகிறார் எரேமியா (38:18). ஆனால், ஆட்சியாளர்கள், தலைவர்கள் எரேமியாமீது இரண்டு வகையான குற்றங்களை முன்வைக்கின்றனர். அவை: ) எரேமியா எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச் செய்து வருகிறான்; ) இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை (38:4). எனவே, அவர்கள் எரேமியாவைப் பாழுங் கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர்.

இறைவாக்கினர் எரேமியா யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக (22:1-9), அரசனுக்கு எதிராக (23:24-30), எருசலேம் மக்களுக்கு எதிராக (23:20-23), குருக்களுக்கு எதிராக (20:1-6), போலி இறைவாக்கினர்களுக்கு எதிராகப் பேசியதால் (23:9-15) பிரச்சினைகளுக்கு ஆளானார். உண்மையை உரைத்ததாலேயே அத்தனை இன்னல்களையும் அனுபவித்தார். ஒரு குறிக்கோளுக்காக வாழ்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும், அவர்கள் சுடச்சுட ஒளிர்விடும் பொன்னைப்போல் புகழ் பெற்றே உயர்வார்கள் எனும் வள்ளுவரின் வாக்கு எரேமியாவின் வாழ்வில் பொருத்தமாக அமைகிறது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள் 267).

தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், “உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது (எரே 20:9) என்றும் சூளுரைத்தார் எரேமியா.

இன்றைய நற்செய்தியில்மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன் (லூக் 12:49) எனக் கூறுகின்ற இயேசு, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவை உண்டாக்க வந்தேன்என்று முழங்குகிறார் (12:51). அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி என்ற உன்னதமான கொடைகளின் ஊற்று இயேசு. ஆனால், “தீ மூட்ட வந்தேன்; அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்எனும் இயேசுவின் வெப்பமான வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது?

முதலில், “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (12:49) என்கிறார் இயேசு. பொதுவாக, திருவிவிலியத்தில் தீ என்பது அன்பை, நீதியை, நற்செய்தியை, தூய ஆவியாரின் கொடைகளைச் சுட்டும் வார்த்தைகள். முதல் ஏற்பாடு தீயைக் கடவுளின் நீதியின் அடையாளமாகக் காட்டுகிறது (தொநூ 19:24). நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டியது (தொநூ 15:17). முதன் முதலில் கடவுள் தம்முடைய இருப்பைத் தீச்சூளையிலே மோசேவுக்குக் காட்டினார் (விப 3:2). திருத்தந்தை பிரான்சிஸ், “இயேசு தாலாட்டுப் பாடலை அல்ல; மாறாக, நற்செய்தி எனும் தீயை மூட்டவே இம்மண்ணுலகிற்கு வந்தார்என்கிறார் (மூவேளைச் செபவுரை, 14.8.2022).

இயேசு மூட்ட விரும்பும்நற்செய்திஎனும் தீ பழமையை எரித்துவிடும்; தீமையை அழித்துவிடும்; தூய்மை தரும்; ஆற்றல் தரும்; மனமாற்றத்தின் பாதையில் நாம் முன்னோக்கிச் செல்ல நம்மைத் தூண்டும் என்ற பொருளில் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் உள்ளத்தில் பற்றியெரிந்த தீ என்பது அநீதிக்கு எதிரான நீதி என்னும் தீ. இந்தத் தீயை மற்றவர் உள்ளத்திலும் மூட்டவே, ‘மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்என்று கூறுவதாகப் புரிந்துகொள்ளலாம். இயேசு தமது உள்ளத்தில் பற்றியெரிந்த அநீதிக்கு எதிரான நீதி எனும் தீயை மூட்டத் தம்மையே பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது (லூக் 12:50).

இரண்டாவதாக, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் (12:51) என்கிறார் இயேசு. தமது பிறப்பிலே அமைதியைக் கொண்டுவந்தவர் அவர் (2:13-14). தாம் உயிர்த்து விண்ணுக்குச் செல்லும்முன் அதே அமைதியையே அளித்தார் (24:36). இப்போதுபிளவை உண்டாக்க வந்தேன்என்று கூறுவதும் அவர் தரவிருக்கும் அமைதிதான். ஆனால், அந்த அமைதி உலக அரசுகள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் பெரும்பாலும் குறிப்பிடும் போரும் வன்முறைகளும் இல்லாத ஓர் அமைதி அல்ல; அந்த அமைதி பல அப்பாவி மக்களின் மரணத்தால் விளைந்த அமைதி. அதுகல்லறை அமைதி.’ இயேசு தம் பிரியாவிடை உரையில், “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல (யோவா 14:27) என்று தெளிவாகக் கூறினார்.

இயேசு வழங்கும் அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியாகும். இயேசு விரும்புவது மனித மாண்பை அடித்தளமாகக் கொண்ட உண்மையான அமைதி. இந்த அமைதி எப்போது ஒருவருக்கு மறுக்கப்படுகிறதோ, அங்கே வேறுபாடுகளும் பிளவுகளும் எழுகின்றன. இயேசு ஏற்படுத்தும் பிளவு என்பது நாம் நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுக்கும்போது ஏற்படும் பிளவுகள் ஆகும். குடும்பங்களில் நம் மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளாகும். சாட்சிய வாழ்வுக்காய் குடும்பங்களில் ஏற்படும் பிளவு ஆகும். இயேசு கூறும் இத்தகைய பிளவுகள் தேவையான ஒன்றே. அவை நன்மை செய்யக்கூடியது; நீதிக்கான அமைதியை ஏற்படுத்தக்கூடியது.

நிறைவாக, அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க விரும்பும் அனைவரும் நெருக்கடிகள், மன உளைச்சல்கள், ஏளனப் பேச்சுகள், துன்புறுத்தல்கள், கொடிய சாவுகள் ஆகிய அனைத்தையும் சந்திக்கவேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. எனினும், இயேசுவின்மீது நம் கண்களைப் பதியவைத்து (எபி 12:2), மனித மாண்பைச் சிதைத்தழிக்கும் அநீதிகளுக்கு எதிராக (12:4) நீதித் தீயைப் பற்றி எரியச்செய்வோம். இவ்வுலகில் இறைவாக்கினர் எரேமியா, இறைமகன் இயேசு, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோர் மூட்டிய அநீதிக்கு எதிரான நீதியின் தீ நம் உள்ளங்களிலும் பற்றியெரியட்டும்.