news-details
சிறப்புக்கட்டுரை
இணையப் பெண் (வலையும் வாழ்வும் – 26)

இரவு பத்து மணி. திருச்சி நெடுஞ்சாலை. கார் பயணக் களைப்பு. டிரைவரிடம்டீ குடிச்சிக்கிட்டு போகலாம், கொஞ்சம் ரோட்டோரத்தில் நிறுத்துஎன்றேன். அவனும் நிறுத்தினான்.

தனித்து விடப்பட்டக் கடை என்றாலும்கூட எல்..டி. பல்புகளால் அலங்கரிக்கப்பட்டுப் புதுப் பெண்கோலம் பூண்டிருந்தது. அந்த நெடுஞ்சாலையோரம் மீடியம் சுகர் போட்ட அந்தத் தேனீர் கப்பை கையிலே ஏந்தி நின்றிருந்த என் கண்களுக்குச் சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் வாகன வெளிச்சத்தில் மின்னி மறைந்தது.

கையில் ஒரு குட்டைக் குடை. தோளில் தொங்க விடப்பட்ட பை. இளமஞ்சள் நிற சாரி. ‘யாராக இருக்கும் இந்த நேரத்தில்?’

பக்கத்தில் யாருமே இல்லை. அப்பெண் யாரையோ தேடுவதுபோல் இருந்தது. சாலையில் கடந்துபோகும் இருசக்கர வாகனங்கள் சில அப்பெண்ணின் அருகே வந்து நோட்டம் விட்டுச் சென்றன.

இந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் தேவை தானா? இந்த இரவு நேரம் இப்படி விபச்சாரத் தொழில் செய்துதான் பிழைக்கவேண்டுமா?’

கேள்விகள் பல என் மனத்தின் ஆழத்தில் கொக்கிப்போட்டு அமர்ந்துகொண்டன. கையிலிருந்த தேநீர் கொஞ்சம் மீதமிருக்கையில் ஒரு பைக் அப்பெண்ணின் அருகில் வந்து நின்றது. மழை வந்தால் பூக்கும் அல்லி மலரைப்போல பைக்கில் வந்த அந்த மனிதரைப் பார்த்தவுடன் அப்பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி! பொய் கோபத்தில் தான் வைத்திருந்தக் குட்டை குடையால் பைக்கில் வந்திருந்த அந்த நபரின் முதுகில் அடிப்பதுபோல பாசாங்கு செய்தாள்.

இரண்டு வயது குழந்தை ஒன்று அந்தப் பைக்கின் முன்பக்கத்திலிருந்து எழுந்து தாவிக் குதித்து அவள் கைக்குள் அடங்கியது. வாரி அணைத்துக்கொண்டு அக்குழந்தையின் நெற்றி முகர்ந்து முத்தமிட்டாள். பேருந்து ஒன்று அந்த இடத்தில் நின்று சென்றபோதுதான் அது பேருந்து நிறுத்தம் என்பது புரிந்தது.

என் கையிலிருந்த தேநீர் தீர்ந்திருந்த நிலையில் என் கேள்விகளுக்கு விடைகளும் கிடைத்திருந்தன. அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு அந்தப் பைக் கிளம்பும்போது வெளிப்பட்ட கரும்புகை கொஞ்சம் என் முகத்தில் படாமல் இல்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளான பிறகும் பெண்கள்மீது நாம் கொண்டிருக்கும் பார்வை மட்டும் இன்னும் மாறாமலேயே இருக்கிறது. உடலில் நகை அணிந்துகொண்டு இன்று பெண் ஒருவர் சாலையில் நடந்துசெல்ல முடிவதாக இருக்கலாம்; ஆனால், சமூக வலைத் தளங்களில் தன் உண்மைப் பெயரைக் கொண்டு, தான் சொல்ல விரும்புகின்ற கருத்தைப் பயமில்லாமல் சொல்ல முடிவதில்லை. ஒரு பெண் கருத்து ஒன்றைச் சொல்கிறாள் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு பெண் சமூக ஊடகங்களில் இருக்கின்றாள் என்பதற்காகவே அவள் பலரால் பல்வேறு சீண்டல்களுக்கு (Online Harresments) உள்ளாக்கப்படுகிறாள்.

இன்று பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்புக்காக, கல்விக்காக, பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக, தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ‘சாத்வா கன்சல்டிங் (Sattva Consulting) என்ற நிறுவனம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 23 மில்லியன் பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது இணையம் பயன்படுத்தும் இந்திய ஆண்களைவிட 34% குறைவு ஆகும்.

அண்மையில் ‘#me too’  என்ற இணையவழி இயக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல்களை இணையத்தில் அரங்கேற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பெரும்புள்ளிகள் இணையத்தில் குரலெழுப்பிய பெண்களின் குரல்வளையை நெரிக்க பாலியல் மற்றும் தரக்குறைவான கருத்துகளைச் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டனர். இதேபோன்று கருத்து மோதல்களாலும் தொடர் சீண்டல்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்இன்புளுவன்சர்கள்தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் இணையத்தைப் பயன்படுத்தும் பெண்கள் அத் தளத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்கின்ற சூழல் உருவாகி பெருமளவில் டிஜிட்டல் மற்றும் பாலினப் பிளவு (digital and gender divide) உருவாகின்றது. இது இணையத்தில் பெண்களுக்கான வாய்ப்பைப் பறிப்பதோடு, அவர்களுக்கானப் பாலினச் சமத்துவத்தைக் (gender equality) கேள்விக்குள்ளாக்குகிறது.

எனவே, இணையத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இணையப் பகுப்பாய்வு மற்றும் இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு எல்லா நிலையினருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இணையத்தில் பெண்ணியப் பார்வையும் பெண்ணைப் போற்றும் கருத்துருவாக்கமும் அதிகரிக்கப்பட வேண்டும். இணையக் குற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

பெண் உடல் சார்ந்த அரசியல், பெண் உடல் சாந்த விளம்பர உத்தி, பெண் உடல் சார்ந்த ஆன்மிகம், பெண் உடல் சார்ந்த வியாபாரம், பெண் உடல் சார்ந்த ஒழுக்கநெறிகள், பெண் உடல் சார்ந்த ஆபாசம் போன்ற பெண்களுக்கு எதிரான வன்மங்கள் இணையத்தின் பிரதான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளே.