கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
காணாமல்
போனவர்களைத் தேடி மீட்க வந்த நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு அருளும் இரக்கமும் அமைதியும் உண்டாவதாக! நமது கத்தோலிக்கத் திரு அவை சிறைப்பணி ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது கிறித்தவ நம்பிக்கையின் அடிப்படையான கோட்பாடு அனைவருக்கும் மீட்பு உண்டு என்ற நம்பிக்கைதான்.
இந்த
ஆண்டின் சிறைப்பணி ஞாயிறு கருப்பொருள் ‘வீழ்ந்தோர் இறைவேண்டலால் எழுவர்’ என்பது. கடவுளின் அருளாலும், திரு அவையின் ஆதரவுடனும் சிறைவாசிகள் மீண்டெழுவது இப்பொழுது இயலும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது இந்தக் கருப்பொருள். கண்டனம் செய்வதற்கு விரைவாகவும், மன்னிக்க மெதுவாகவும் இருக்கும் உலகில், நற்செய்தி நம்மை ஓர் உயர்ந்த உண்மைக்கு அழைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவர்கள் எவ்வளவு தூரம் விழுந்துவிட்டாலும், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர். அவருடைய இரக்கமும் நமது இறைவேண்டலும் அவர்கள் மாற்றத்தை அடைய உதவிபுரியும்.
மீட்பிற்கான அழைப்பு
படைப்பின்
தொடக்கத்திலிருந்தே உடைந்தவர்களிடம் கடவுளின் அசைக்க முடியாத அன்பைக் காண்கிறோம். ஆதாமும் ஏவாளும் வீழ்ந்திருந்தும் கைவிடப்படவில்லை. அரசர் தாவீது கடுமையான பாவம் செய்தபோதிலும், மனந்திரும்பி கடவுளின் இதயத்திற்கு ஏற்ற மனிதரானார். ஒரு காலத்தில் கிறித்தவர்களைத் துன்புறுத்திய புனித பவுல், பிற இனத்தாரின் சீடரானார். ஊதாரி மகன் மன்னிக்கப்படவில்லை; ஆனால், கொண்டாடப்பட்டார். இவை வெறும் கடந்தகால கதைகள் மட்டும் அல்ல; அவை தெய்வீகமானவை. இது நம்பிக்கையும் மனந்திரும்புதலும் ஆகும். எசேக்கியேல் இறைவாக்கினர் மூலம் கடவுள் அறிவிக்கிறதுபோல், “தீயோர் சாக வேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே, உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்” (எசேக்
33:11).
இயேசு கிறிஸ்து:
இரக்கமுள்ளவர்
மற்றும்
மறு
சீரமைப்பு
செய்பவர்!
தமது
பொது வாழ்வில் இயேசு புறந்தள்ளப்பட்ட மக்களிடையே பாவிகள், வரிவசூலிப்பவர்கள், குற்றவாளிகளோடு நடந்தார். சிலுவையிலிருந்து மனந்திரும்பிய ஒரு கள்வனிடம் மன்னிப்பு வார்த்தைகளைப் பேசினார்: “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்”
(லூக் 23:43). வரி வசூலிப்பவர்களுடன் அவர் உணவருந்தினார். விபச்சாரப் பெண்ணை மன்னித்தார். இழந்து போனதைத் தேடினார். இழந்துபோன நாணயம், காணாமற்போன ஆடு, இழந்துபோன மகன் போன்ற உவமைகள் மூலம் அவர் தந்தையின் இதயத்தை வெளிப்படுத்தினார். “மனம் மாற தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்”
(லூக் 15:7); “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்.”
இறைவேண்டலின்
இறகுகள்
இறைவேண்டலும்
உண்ணாநோன்பும் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கு அடித்தளமாகும். இறைவேண்டல் மூலம்தான் இதயங்கள் மென்மையாகின்றன. மனச்சாட்சிகள் விழித்தெழுந்து, அருளைப் பெறுகின்றன. உலகெங்கிலும் உள்ள சிறைவாசிகளின் நலனுக்காக நற்கருணைநாதர் முன் தன்னார்வலர்கள் பரிந்து பேசுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான இந்த இடைவிடாத இறைவேண்டலில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். இணைய வழியில் அல்லது ஆன்மிக வகையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காகத் தொடர் நோன்பு, தொடர் திருப்பலி, தொடர் செபமாலை மற்றும் இறைஇரக்க வழிபாடுகளையும் சிறைப்பணி ஏற்பாடு செய்கிறது. உங்கள் அன்றாட இறைவேண்டல்கள் மற்றும் ஆன்மிக முயற்சிகள்... குறிப்பாக, பயங்கரவாதிகள் போன்ற கடுமையான குற்றவாளிகளுக்கு அவர்களைக் கருணையை நோக்கி உயர்த்தும் சிறகுகளாக அமைகின்றன.
தண்டனைக்குப்
பின்னால்
நம்பிக்கை...
திருத்தந்தை
பிரான்சிஸ் ஒருமுறை கூறியது: “ஆண்டவர் மறு ஒருங்கிணைப்பில் வல்லவர்; அவர் நம்மைக் கையைப் பிடித்து மீண்டும் சமூகத்திற்குள் கொண்டு வருகிறார்.” சிறையில் அடைக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும், அவர்களுக்குச் சேவை செய்பவர்களுடனும் நம்பிக்கையுடன் ஒன்றாக நடப்போம். புனித கதவைப்போல நம் இதயங்கள் அகலத் திறக்கட்டும். அதனால், யாரும் விலக்கப்பட மாட்டார்கள்; மேலும், அனைவரும் கடவுளின் மாற்றும் அன்பை அறியட்டும். இந்தச் சிறைப்பணி ஞாயிறு நம் தைரியத்தைப் புதுப்பிக்கட்டும். மறக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யவும், குரலற்றவர்களுக்காக வாதிடவும், பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நற்செய்தியை அறிவிக்கவும்தான். திரு அவை கண்டனம் செய்வதற்கான நீதிமன்ற அறை அல்ல; மாறாக, குணப்படுத்துவதற்கான மருத்துவமனை. கிறிஸ்துவின் வார்த்தைகளை எதிரொலிப்போம்: “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்” (யோவா
8:11).
ஆசிரும் நன்றியும்!
தாராளமான
எனது சகோதர ஆயர்களுடன் சேர்ந்து, அனைத்து மறைமாவட்டங்களுக்கும், முக்கிய மேலதிகாரிகளுக்கும் மற்றும் உங்கள் தொடர்ச்சியான இறைவேண்டல்களுக்கும் ஆதரவிற்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இழந்தவர்களைத் தேட வந்த இயேசு உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக! சிறைவாசிகளின் மறுவாழ்வில் அயராத சேவை செய்த அனைத்துச் சிறைப்பணி தன்னார்வலர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியச் சிறைப்பணியின் பாதுகாவலர்களான புனித மாக்சிமில்லியன் கோல்பே மற்றும் வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் ஆகியோர் இந்தப் பணிக்காகப் பரிந்து பேசட்டும். நமது அன்னையாம் தூய கன்னி மரியா உங்களை எப்போதும் பாதுகாத்து வழிநடத்தட்டும்!