பூமியின் முதல் பதிவு தனிமை!
வாழ்வின்
இறுதிப் பதிவும் தனிமை!
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உறவுகள் மலர்கின்றன; உன்னதம் பிறக்கின்றது. தனிமை வேரறுக்கப்பட்டு, பிறரோடு இணைந்து பயணிக்கும் பேரின்பம் கிடைக்கிறது. பேரின்பம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தப் பரவசம் அடைந்தாலும், அன்றாட வாழ்வில் அவ்வப்போது இந்தத் தனிமை தொட்டுவிட்டுச் செல்லும் அனல் காற்றுபோல இதயத்தை வருடித்தான்
செல்கிறது.
உறவுகளால்
கைவிடப்படும்போது
உணர்வுகள்
மதிக்கப்படாதபோது
விரக்தியின்
விளிம்பில் தள்ளப்படும்போது
தோல்வியில்
கலங்கி நிற்கும்போது
குடும்ப
வாழ்வு சீர்குலையும்போது
கண்டுகொள்ளப்படாமை
அதிகரிக்கும்போது
கருத்துகள்
மதிக்கப்படாதபோது
எல்லாராலும்
வெறுக்கப்படும்போது
பிறப்பால்
ஒதுக்கப்படும்போது
கூட்டத்தின்
மத்தியில் அவமானப்படும்போது
அன்பை
அலட்சியப்படுத்தும்போது
குழுவாகச்
செய்யும் பொறுப்புகளைத்
தனியாகச்
செய்யும் சூழல் நேரிடும்போது
உடல்
நோயில் உறவுகள் உடனிருக்காதபோது...!
இந்தத்
தனிமை உயிர்க்கொல்லியாக இதயத்தை ஊடுருவி, உயிரோடு மனித மனங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தனிமை வரமா? சாபமா? என்பது அவரவர் மனநிலையை, சூழ்நிலையை, அனுபவத்தைப் பொறுத்து அமைகிறது. பிரச்சினைகளை எப்படி உற்றுநோக்குகிறோம்? மனப்பக்குவத்துடன் அதை எப்படிக் கையாள்கிறோம்? என்பதன் அடிப்படையில்தான் வரமும் சாபமும் நம் கண்முன் வைக்கப்படுகின்றன.
தனிமை தந்த
வலிகள்
‘மனிதன் தனியாய் இருப்பது நல்லது அன்று’ என்று மனிதனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தார் இறைவன். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து பயணிப்போம்’ என்று
அவர்கள் கொடுத்த திருமண வாக்குறுதி சில குடும்பங்களில் இறுதிவரை நிலைத்திருப்பதில்லை. ‘நான்’ என்ற ஆணவமும், விட்டுக்கொடுக்காத மனநிலையும், பொருளாதாரப் பின்னடைவுகளும், தூய அன்பற்ற நிலையும், பிரமாணிக்கமின்மையும், தரக்குறைவான வார்த்தைகளும் குடும்ப வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றன. விளைவு - தனிமை வாழ்வு! கணவனால், மனைவியால், பிள்ளைகளால், கைவிடப்பட்ட நிலை. முதியோர் இல்லங்களிலும் தெருவோரங்களிலும் வாழ்கின்ற அவல நிலை. இதற்கு
என்ன காரணம்? சற்று ஆழ்ந்து சிந்தித்தால், ‘நான் பிறரால் அன்பு செய்யப்படவில்லை’ என்ற
எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தனிமை தந்த வலிகளை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
தனிமை தந்த
பாடங்கள்
சில
நேரங்களில் தனிமை வலியைத் தந்தாலும் சுயசிந்தனை, சுயஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, சுய வளர்ச்சி, சுயஉணர்தல் ஆகியவற்றின் தளமாகத் தனிமை உணரப்படுகிறது. நம்மை நாம் புரிந்துகொள்வதற்கும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? என்ற தெளிவு பெறுவதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும்,
உறவுகளைப் புரிந்துகொள்வதற்கும், உறவின் மகத்துவம் உணர்வதற்கும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கும், படைப்பாற்றல் திறனுடன் செயல்படுவதற்கும் இந்தத் தனிமை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருகின்றன.
தாவீது
அரசர் சவுல் அரசனின் பைத்தியக்காரத்தனத்தால் தனிமைக்கூண்டில் சிக்கியப்போது மனைவியை இழந்தார், நண்பனை இழந்தார், உறவினர்களை இழந்தார், படை வீரர்களை இழந்தார். அனைத்தும் இழந்த நிலையில் தனிமையாக நாட்டை விட்டே தப்பி ஓடினார். ஆயினும், மனம் தளரவில்லை. தனிமையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு ‘இறைவன் என்னைக் காப்பாற்றுவார்; மீண்டும் இந்த அரசாட்சியில் என்னை நிலை நிறுத்துவார்’ என்ற
நம்பிக்கை உணர்வுடன் தாவீது செயல்பட்டார்; வெற்றியும் பெற்றார். ‘தனிமைப் படுத்தப்பட்டோம்’ என்று
தயங்கத் தேவையில்லை. தனிமையிலும் இனிமை காணலாம். தனிமை சாபம் அல்ல; அவற்றை வரமாக மாற்றியவர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இயேசுவின்
தனிமை…
பாலைவனத்
தனிமை
கருக்கலில்
தனிமை
விடியற்காலத்
தனிமை
இயற்கையின்
எழில் அழகில் தனிமை
மலை
சூழ்ந்த காடுகளில் தனிமை...
எனத்
தொடர்கிறது. பாலைவனப் பயணம் மிகக் கொடியது. மனித வாடையே இல்லாத இந்தப் பாலைவனத் தனிமையை இயேசு ஏன் விரும்பினார்?
இஸ்ரயேல்
மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனப் பயணத்தில் தம்மைத் தூய்மையாக்கி, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அடைகிறார்கள்.
இயேசுவும்
தம் பணிவாழ்வின் அடையாளமாக மானுடச் சமூகத்தைத் தூய்மையாக்க, பாவ வாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க, யாவே இறைவனை நோக்கி மக்களை வழிநடத்த பாலைநிலத்துக்குச் செல்கிறார் (மாற்கு 1:13; மத் 14:13).
சமூகப்பணி,
மீட்புப்பணி, போதிக்கும் பணியின் முன் அடையாளமாகப் பாலைவனத் தனிமையை இயேசு தேடிச்சென்றாலும், அங்கும் மூன்று ஆன்மிக எதிரிகளைச் சந்திக்கின்றார். அவை உடல், உலகம், சாத்தான். ஆசையைத் தூண்டுதல் சாத்தானின் வேலை. “இந்தக் கல்லை அப்பமாக மாற்று; நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; நீ நெடுஞ்சாண் கிடையாக
என்னை விழுந்து வணங்கினால் இந்த அரசை உனக்கு உரிமையாகத் தருவேன்” என்ற மூன்று ஆன்மிக எதிரிகளை இயேசு சந்திக்கின்றார் (மத் 4:3-8). இங்கு இயேசு உலகப் பசிக்கும் உடல் பசிக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆன்மிகப் பசிக்கு முதலிடம் கொடுத்து ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்கின்றார். அவர் எடுத்த முதல் அடியே இறையாட்சியின் வெற்றிக்கான அடித்தளமாக அமைகிறது. இயேசுவின் தனிமையில் ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்க நாம் தயாரா?
உயர் மலையின்
உன்னதத்
தனிமை
மலை
- இறைப்பிரசன்னத்தின்
அடையாளம். இறைவன் உயர் மலையில் வீற்றிருந்து மக்களைக் கண்ணோக்குகிறார் என இஸ்ரயேல் மக்கள்
நம்பினர். சீயோன் மலையில்தான் மனித ஒழுக்கங்களைச் சீர்படுத்தும் பத்துக்கட்டளைகள் யாவே இறைவனால் மோசேவிடம் கொடுக்கப்பட்டன. மலை இறையுறவின் சங்கமம். எலியா இறைவாக்கினர் கார்மேல் மலையில் யாவேதாம் உன்னத இறைவன் என்பதை எண்பித்துக்காட்டுகிறார். இறைமகன் இயேசுவும் உன்னத இறைவனின் உறைவிடமாம் மலையை நோக்கி தனிமையான பயணத்தை மேற்கொண்டு செபிக்கிறார். மலைமீது ஏறி அமர்ந்து பேறு பெற்றவர்கள் யார்? என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இயேசுவின்
தனிமையில் ஞானம் பிறந்தது. சுய பரிசோதனைக்கான தெளிவு கிடைத்தது. இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்ள மன வலிமை கிடைத்தது.
மக்களின் உடல் நோய்களைக் குணமாக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. ஆழ்ந்த இறையனுபவத்தின் வழியாகக் கடவுளின் அருள் கிடைத்தது. “இவரே என் அன்பார்ந்த மகன்” என இறைவனே சான்றுபகரும்
பேரானந்தம் கிடைத்தது.
ஆகவே,
இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நாமும் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக, புதுமைச் சிந்தனைகளை வரவேற்பவர்களாக, சுய அறிவும் சுயதெளிவும் கொண்டு ‘இப்படித்தான் வாழ வேண்டும்’
என்ற கொள்கை உணர்வுடன் செயல்படுபவர்களாக மாறுவோம்.
இறுதியாக....
தனிமை
நமக்கு மனச்சிதைவை உண்டாக்கும்போது, நம் மனித ஆளுமையைப் பாதிக்கும்போது, மனஅழுத்தம் குடிகொள்ளும்போது, கைவிடப்பட்ட நிலை உருவாகும்போது, ‘வாழத் தகுதியற்றவர்கள்’ என்ற
எண்ணம் தோன்றும்போது நாம் சோர்ந்துபோக வேண்டாம். இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நம் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். தனிமையை வரமாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம். சத்தங்களற்ற நிசப்தத்தின் சிறப்பைக் கண்டுணர்வோம். மெல்லிய தென்றல் காற்றில் இறைவனோடு உரையாடுவோம். தனிசெபத்தில் ஆன்மிக இறையனுபவம் பெறுவோம். தனிமையைச் சாபமாக அல்ல, வரமாகப் பார்ப்போம்!