news-details
தலையங்கம்
பெருமையும் சிறுமையும்!

மானுட வாழ்வு முரண்களின் முற்றம். இன்பம்-துன்பம், வளமை-வறுமை, உயர்வு-தாழ்வு, வெற்றி-தோல்வி, ஆனந்தம்-அழுகை, உண்மை-பொய்மை, நீதி-அநீதி... என எண்ணற்ற எதிர்நிலைப் படிகளைக் கொண்டது. அவ்வரிசையில்பெருமையும்-சிறுமையும்இன்று இணைந்து பயணிக்கிறது. ‘இன்று நீ; நாளை நான்!’ என எல்லாருமே இந்தப் படிநிலைகளை அன்றாடம் கடந்து வருகிறோம்.

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!’ என்கிறது கல்யாணி கவரிங். கவரிங் என்பது உண்மையானதா? போலியானதா? போலிக்கு நாம் தரும் வரையறைதான் என்ன? உண்மையும் போலியும் கலந்த கூட்டுக் கலவையில்தான் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. பொய்மையே அதிக அளவு புழக்கத்தில் வருகிறது; உண்மை எங்கோ ஓரம் கட்டப்பட்டு விட்டது. “உண்மையான உலகுடன் மனிதன் கொண்ட உறவு, அழகியல் நிலைப்பட்ட சமூக உறவுஎன்கிறார் ஏங்கெல்ஸ். சமூகத்தில் உண்மையும்-பொய்மையும் கலந்திருப்பது போல, ‘மனிதன் பாதி - மிருகம் பாதிஎன மனித குணத்திற்கு வரையறை தந்திருப்பதுபோல, சமூகம், நாடு என்ற கட்டமைப்பிலும்பெருமையும் சிறுமையும்இணைந்தே பயணிக்கிறது.

ஒன்றிய பாசிச பா... அரசின் அரசியல்-கொள்கை நிலைப்பாடுகளில், செயல்பாடுகளில் ஆயிரம் எதிர்க்கணைகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தொடுக்கப்பட்டாலும், நாம் மார்தட்டிக்கொண்டு பெருமை பேசக்கூடிய செய்திகளும் உலக அரங்கில் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதும், அத்தகைய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைத் திறம்பட மேற்கொண்டதில் இந்திய நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், தொடர்ந்து பல வெற்றிகளை நிலைநாட்டிவரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இஸ்ரோ மற்றும் நாசா நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டநிசார்செயற்கைக்கோளைஜி.எஸ்.எல்.வி - எஃப் 16’ இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதும் பெருமைக்குரியவையே!

உலக அளவில் கல்வியின் தரத்தை அளவிடும்டைம்ஸ்உயர்கல்வி அமைப்பின் தரவரிசை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக அடையாளப்படுத்துகிறது. 2019-இல் 49 இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம்பெற்றிருந்த சூழலில், இன்று 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மும்மடங்கு அதிகரித்து, 128 பல்கலைக்கழகங்களாக உயர்ந்திருப்பது பெருமைக்குரியதே!

உயர்தரமான கட்டமைப்புகள் மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, நிலையான வளர்ச்சி, இலக்குகளில் கூர்மை, கற்பித்தலில் தெளிவு, ஆராய்ச்சி மற்றும் சமுதாயத் திட்டங்களில் முன்னெடுப்பு, வளங்களின் மேலாண்மை என .நா. சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரம் உயர்ந்திருக்கின்றன என்னும் செய்தி பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.

அவ்வாறே, முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024-இல் மட்டும் இந்தியாவில் 18,900-ற்கும் மேலாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதும். ஓராண்டில் நாட்டில் இவ்வளவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறை என்பதும், உலக அரங்கில் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது என்பதும் சிறப்புக்குரியதே!

அதேபோல, குருதிக்கொடை, உறுப்புதானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்னும் தளங்களில் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பதிலும் இத்துறைகளில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதிலும் தமிழ்நாடு, இந்தியாவில் முதன்மையான மாநிலமாக ஒளிர்வது பெருமையளிக்கிறது. “இது தமிழ்நாட்டின் மகுடத்தில் மற்றுமொரு வைரக் கல்லாக அமைந்திருக்கிறதுஎன மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்குத் தமிழ்நாட்டில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனக் கடந்த 2023, செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் அறிவித்தது கொடையாளர்களை மிகவும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது.

உயர்கல்வி, பல்கலைக்கழகக் கட்டமைப்பு, விண்வெளி ஆய்வு, உறுப்புக்கொடை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என முக்கியத் துறைகளில் இந்தியா பெரும் உச்சம் தொட்டிருப்பது பெருமைக் குரியதாகவும் மகிழ்ச்சிக்குரிய தருணமாகவும் அமையும் சூழலில் இந்திய, தமிழ்நாட்டு சமூக-அரசியல் சூழலில் அன்றாடம் நிகழும் காட்சிகள் இந்நாட்டின் அவலங்களை எடுத்துச்சொல்லும் சிறுமைகளாகிப் போயின.

நாடெங்கும் ஆங்காங்கே நிகழும் வன்முறை நிகழ்வுகள், பிரிவினைவாதச் செயல்பாடுகள், உண்மையை மறைக்கும் ஊடகங்கள், பாலியல் வன்கொடுமைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், போலியான குற்றப்பதிவுகள், நீக்கப்படும் வாக்காளர் உரிமம், நீதித்துறையில் ஊழல், கண்மூடி இருக்கும் நீதிமன்றங்கள்காவல் நிலைய மரணங்கள், ஆணவக் கொலைகள், பொருளாதார வீழ்ச்சி, கோவில், திருவிழாக்கள், கிணறு, மயானச் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சமூக நீதியற்ற தன்மை... என நாடெங்கும் நிகழும் குற்றங்களால் இன்று சமூகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? என்ற கேள்வி ஐயத்தோடே எழுகிறது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி 2021-இல் ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை 33-ஆக இருந்த நிலையில், அது 2025-இல் 2051-ஆக அதிகரித்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. மனித வளத்துக்கு அடிப்படையாக இருக்கும் இளைஞர்கள் ஒருபக்கம் சாதிவெறியால் கொல்லப்படுவதும், மறுபக்கம் அத்தகைய குற்றத்திற்காகச் சிறையில் காலம் கழிப்பதும் வருந்தத்தக்கதே!

அண்மையில் வெளிவந்திருக்கும் 147 நாடுகள் அடங்கிய உலகின் பாதுகாப்பான நாடுகள் பற்றிய தரவரிசையில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, அந்நாட்டில் நிலவும் சுமூகமான சமூகச் சூழல், அரசியல் நிலைப்பாடு, வளம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாமல் அண்டை நாடுகளுடன் சுமூக உறவு... எனப் பல்வேறு அடிப்படை வரையறையை உள்ளடக்கியது. இந்தியா இத்தகைய தளங்களில் பலவீனம் கண்டு, பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அது பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது பெரிதும் கவலையளிக்கிறது. குறிப்பாக, பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-இல் 52.3 விழுக்காடு பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

காகிதப் பூக்களுக்குக் கற்பழிப்பு பயமில்லை;

பிளாஸ்டிக் மலர்களுக்குப் பிரசவ வலியில்லை;

அசல்களுக்கு மட்டுமே ஆபத்து அதிகம்!’

எனும் பேராசிரியர் அப்துல் காதரின் கவிதை வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன. பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டாலும், பாலியல் குற்றம் புரிவோருக்கு அறநெறி சார்ந்த வாழ்க்கை முறையை இன்று நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

குஜராத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த 6,500 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளால் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5 வன்கொடுமை நிகழ்வுகள் என அறியப்படுகிறது. இத்தகைய சூழலில் அங்குபாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்என குஜராத்தில்  போக்குவரத்துப் போலீசார் ஒட்டிய சுவரொட்டிகளில் இடம்பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய நாடும் அரசும் சமூகமும் தனது அடிப்படைக் கடமைகளிலிருந்து விலகாமல் இருக்கவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

சமத்துவக் குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மையையும் சகோதரத்துவத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மக்களாட்சி மற்றும் குடியரசு நாடு எனும் சிறப்பு கொண்ட இந்தியாவை மதவாத நாடாக மாற்ற பா... மேற்கொள்ளும் சூழ்ச்சி ஒருபுறமும்; மறுபுறம், பா...-வின் தேர்தல் பிரிவுபோல தேர்தல் ஆணையமும் மற்ற அரசு இயந்திரங்களும் செயல்படுவதும் இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பெரும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்தியாவின் பெருமை பேச ஆயிரம் சாதனைகள் நிகழ்ந்தாலும், அன்றாடம் நிகழும் அவல நிலைகளால் இந்தியா இன்றைய ஆட்சியாளர்களால் சிறுமையடைந்தே நிற்கிறது! புதிய இந்தியாவைக் காண வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. மதவாதக் கட்சிகளும் சாதியச் சங்கங்களும் வேரறுக்கப்பட்டு சமத்துவ, சகோதரத்துவ, சமநீதி கொண்ட புதிய இந்தியா உருவாக ஒன்றிணைவோம், வென்றிடுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்