news-details
சிறப்புக்கட்டுரை
மலரும் ‘இறை ஊழியர்’ வீரமாமுனிவர்!

வீரமாமுனிவர்என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி திரு அவையால் கடந்த ஆகஸ்டு 3-ஆம் தேதி பாண்டிச்சேரியிலுள்ள புனித ஜென்ம இராக்கினி பேராலயத்தில் பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறை ஊழியராக அறிவிக்கப்பட்டார். அவரது அருள்வாழ்வையும் பணியையும் கருத்தில் கொண்டு  அவருக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டம் தருவதற்கான ஆய்வுத் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பலிக்கு முதலாக வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையும், அவர் ஏற்படுத்திய பணித்தளங்களாகிய ஏலாக்குறிச்சியிலிருந்து அடைக்கல மாதாவின் திருவுருவச் சுரூபமும், கோனான் குப்பத்திலிருந்து பெரியநாயகி மாதாவின் திருவுருவச் சுரூபமும், அவரது படைப்பான தேம்பாவணியும், அவர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த பாதக்குறடின் மாதிரிகையும், ஆயரின் இல்லத்திலிருந்து பவனியாக எடுத்து வரப்பட்டன. இயேசு சபையின் சென்னை மறைத்தளத்தின் மேனாள் தலைவர் அருள்பணி. செபமாலை இருதயராஜ் அவர்களின் தொடக்கச் செபத்துடன் பவனி தொடங்கியது.

திருப்பலியில் வீரமாமுனிவரின் புண்ணிய வாழ்வையும் பெருமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு அருளாளர் மற்றும் புனிதர்பட்ட ஆய்வுத் திருப்பணியைத் தொடங்கத் தடையேதும் இல்லை என்ற சான்றறிக்கை உரோமை வத்திக்கானிலிருந்து வழங்கப்பட்டது. அந்தச் சான்றறிக்கையை இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் அருள்பணி. பிரிட்டோ வின்சென்ட் வழங்க பேராயர் வெளியிட்டார். இந்தப் பணிக்கான விசாரணைக் குழுவையும் வரலாற்றுக் குழுவையும் இறையியல் ஆய்வுக் குழுவையும் பேராயர் ஏற்படுத்தினார். அந்தந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்கள் பணிக்கான இரகசியம் காப்போம் என்ற உறுதிமொழியை உயர் மறைமாவட்ட வேந்தர் அருள்பணி. மெல்கிசெதெக் அவர்களின் முன்னிலையில் வழங்கினர். இயேசு சபை மதுரை மறைமாநிலத்தின் முதன்மை ஆலோசகர் அருள்பணி. எல். எக்ஸ். ஜெரோம் அவர்களால் வீரமாமுனிவரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. திருப்பலியின் இறுதியில் வீரமாமுனிவரின் புனிதர் பட்டத்திற்கான செபமும், அருள்பணி. மரிய அருள் ராஜா சே.. எழுதியவீரமாமுனிவர்: அருள்வாழ்வும் திருப்பணியும்என்ற நூலும் பேராயர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்தச் சிறப்புத் திருப்பலியில் பாண்டிச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு இயேசு சபையினர், வீரமாமுனிவர் பணியாற்றிய பணித்தள இறைமக்கள் மற்றும் பொதுநிலையினர் பங்கேற்றனர்.

யார் இந்த வீரமாமுனிவர்?

1680-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலே பிறந்தார். கிறிஸ்துவை அனைத்துலகோருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு 1711-ஆம் ஆண்டு இயேசு சபை மறைப்பணியாளராக தமிழ்நாடு வந்தார். பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆலயங்கள் எழுப்பி, வேதியர்களுக்குப் பயிற்சியளித்து இறைமக்களை நம்பிக்கையில் வளர்த்தெடுக்க அயராது இறைப் பணியாற்றினார்.

தமிழ்மொழியின் வளமையைக் கண்டுணர்ந்து ஈர்க்கப்பட்டார். தமிழ்மொழியைக் கசடறக் கற்பதோடு நின்றுவிடாமல், தனது ஓய்வு நேரங்களில் காப்பியங்களையும் சிற்றிலக்கியங்களையும் இயற்றினார். சதுரகராதி, சிறுகதைகள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். தொன்னூல் விளக்கம், கொடுந் தமிழ் இலக்கணம் போன்ற இலக்கண நூல்களை வடித்தார். கம்பரின் இராமாயணத்திற்கு இணையாக, புனித வளனாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டுதேம்பாவணிஎன்ற பெருங்காப்பியத்தை இயற்றினார். திருக்காவலூர் கலம்பகம், அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை போன்ற சிற்றிலக்கியங்களை வழங்கினார். தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். திருச்சி, தஞ்சை, பாண்டிச்சேரி-கடலூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை என்று இன்று இயங்கும் திரு அவையின் பல பணித்தளங்களில் வாஞ்சையுடன் பணியாற்றினார். உடல் நலம் பேணாத, தனது ஓய்வில்லாத உழைப்பினால் 67-ஆம் அகவையில் கேரளாவிலுள்ள அம்பலக்காடு என்ற குருமடத்தில் பணியாற்றியபோது நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தார். இன்று நம்மிடையே இறை ஊழியராக உயர்ந்து நிற்கிறார்.

- அருள்பணி. . புகழேந்தி சே..

வீரமாமுனிவருக்கான ஆய்வுத் திருப்பணியின் துணை முன்மொழியாளர்