news-details
தமிழக செய்திகள்
இளையோர் கரங்களில் மிளிரும் ‘நம் வாழ்வு’ – மின்னஞ்சல் நாளிதழ்!

அண்மையில் நாம் வெளிக்கொணர்ந்தநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper) பல தளங்களில் பலராலும் வரவேற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் பாராட்டப்படுவதும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இளையோர்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவும், அவர்களைத் திரு அவை, சமத்துவம், ஒற்றுமை, நேரிய வழி, சமூக அக்கறை, விடியல் தரும் மாற்றுச்சிந்தனை, புத்துலகம் படைக்கும் இறையரசு மதிப்பீடு என்னும் பல்வேறு தளங்களில் தெளிந்த சிந்தனை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க நாம் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

பங்கு, மறைமாவட்ட, மாநில இளையோர் அமைப்புகள், இளையோர் பணியாற்றும் பணித்தளக்குழுக்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், இளையோர் தங்கிப் பயிலும் - பணிபுரியும் விடுதிகள் எனப் பல தளங்களில்நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழ், அவர்களின் கரங்களில் தவழ்வது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. யாம் விரும்பியது அதுவே! இளையோரை எழுச்சிமிகு ஆளுமைகளாக உருவாக்கவேண்டும் என்பதுதான்.

இத்தகைய பெரும் கனவில் எழுந்த பெரும் முயற்சியில் அன்றாடம் தோள் கொடுக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களையும், இளையோரை வழிநடத்தும் அமைப்புகளின் தலைவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். குறிப்பாக, சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழு, மதுரை அக்சீலியம் கல்லூரி, மாதா தொலைக்காட்சிப் பணியாளர்கள், மதுரை - அமெரிக்கன் கல்லூரி விடுதி மாணவியர், சாந்தோம் இல்லக் கல்லூரி மாணவியர் அனைவருக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் குழுவில் எல்லாருக்கும் இது பகிரப்படுகிறது...”, “எங்கள் அலுவலகத்தில் அனைவரும் இதை அன்றாடம் வாசிக்கிறோம்...”, “ஓய்வு நேரத்தில் என்னுடைய கணினியில் இதை நான் வாசிக்கிறேன்...” எனப் பலரும் செய்திகளை அனுப்பி வைத்திருப்பது இது எங்கும் எல்லாராலும் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

பங்கு அமைப்புகள், பக்த சபைகள், இளையோர் இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் என யாவரும் தாங்கள் கொண்டிருக்கக்கூடிய புலனக் (வாட்ஸ் அப்) குழுவில் இச் செய்திகளைப் பகிர்ந்து, மின்னஞ்சல் நாளிதழ் எல்லாருடைய கரங்களிலும் தவழ, தொடர்ந்து பேராதரவு தந்திட, அன்போடு வேண்டுகிறேன்!

வாருங்கள் இணைந்து பயணிப்போம்!

புதிய உலகு படைப்போம்!!

- முதன்மை ஆசிரியர்