ஒருநாள் மாலை நானும் என் நண்பர்களும் மகாபலிபுரம் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். பல்லவர்கள் கட்டிய கற்கோவில் மற்றும் கடற்கரையில் மகிழ்ச்சியாக எங்கள் நேரத்தைச் செலவழித்துவிட்டு மீண்டும் எங்கள் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். உணவு நேரமானதால், ஓர் ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு அணுகுச்சாலையில் (Service Road) அமர்ந்து நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை எங்களுக்கே உரித்தான நகைப்பு நையாண்டிகளோடு உண்டு முடித்தோம். மீதமிருந்த உணவை அருகில் வழியோரத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த மக்களிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். நாங்கள் அங்கு வாகனத்தை நிறுத்திய உடனேயே உரிமையோடு மீதமிருக்கும் உணவை அவர்களுக்குத்தான் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அந்த நாள் பயணம் மகிழ்வாகவும் நிறைவாகவும் அமைந்தது. அது ஒரு நல்ல அனுபவம் என்றே எண்ணினேன். ஆனால்...!
அனுபவம் எழுப்பிய
அதிர்வுகள்
மறுநாள்
முழுவதும் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் என் மனத்தில் வந்துகொண்டே இருந்தது. ஆம், நாங்கள் வழியோரத்தில் உணவுண்டு முடிக்கும்போது, மழை தூறத் தொடங்கியது. நாங்கள் முன்பே உறுதியளித்ததுபோல, உணவைப் பெற்றுக்கொள்ள சாலையோரம் வசிக்கும் அந்த மக்களை அழைத்தோம். அவர்கள் அங்கு வந்த பொழுது மழையும் அதிகமானது. மீதமிருந்த உணவைக் காலி செய்துவிட்டு வாகனத்தில் ஏறி, மழையிலிருந்து தப்பிப்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது. உணவைப் பெற என்முன் நின்ற அந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கு அதிக உணவு கிடைத்துவிடாதா? என்ற ஆவலில் ‘எனக்குக் கொடுங்கள், எனக்குக் கொடுங்கள்’
எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் மழையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு உணவை அவர்களது பாத்திரங்களில் கொட்டிவிட்டுப் பேருந்தில் ஏறினேன். இந்த நிகழ்வு என்னில் மீண்டும் மீண்டும் நினைவாடிக்கொண்டே இருந்தது.
இடைவெளியைக் களைவது
எப்படி?
வழியோரம்
விழிவைத்துக் காத்திருந்து, எங்களிடம் மீந்த உணவைப் பெற்றவர்களின் அவலத்தையும், என் மனத்தில் எழுந்த வலியையும் பின்வரும் கவிதை வரிகளில் இவ்வாறு எழுத முயற்சித்தேன்:
இடைவெளி!
‘மீந்ததை அவள் தட்டில் கொட்டும்
என்
கண்களில் ஓர் அவசரம்.
அதுதான்
அன்றைய விருந்தென வாங்கும்
அவள்
கண்களில் ஓர் ஏக்கம்.
என்று
தீரும் இந்த இடைவெளி?’
எழுதிய
கவிதையைப் புலனப் பதிவாகவும், சமூகவலைதளப் பதிவாகவும் வெளியிட்டேன். பார்த்த பலர் வாழ்த்தினார்கள். சிலர் ‘இது எங்கு நடந்தது?’ எனக் கேள்வி எழுப்பினர். ஆனாலும், என் மனம் அமைதியடையவில்லை. என் கவிதையில் எழுப்பிய கேள்வி என் உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
உறுதியாக
என்னால் உலகெங்கும் இருக்கும் இடைவெளியைச் சரிசெய்ய இயலாது. ஏன் உணவை என்னிடமிருத்து பெற்ற அந்தக் குழந்தைகளை மீண்டும் சந்திப்பதுகூட அவ்வளவு சாத்தியம் இல்லை. ‘பின்பு வேறு வழியே இல்லையா! இந்த இடைவெளியைக் களைய’ என என்னுள் இருந்த
கேள்வி இன்னும் ஆழப்பட்டது. தொடர்ந்து சிந்திக்கத் தொடங்கினேன், சற்றுத் தெளிவு கிடைத்தது. ஒரு மாற்றுவழி எனக்குத் தென்பட்டது. அந்த வழி எல்லாச் சூழலிலும் எல்லாருக்கும் சாத்தியம் என்றே தோன்றியது.
மனித மாண்பின்
மதிப்பை
உணர்தல்
அங்கு
நான் கொடுக்கும் இடத்தில் இருந்தேன்; அவர்கள் பெறும் இடத்தில் இருந்தார்கள். அங்கு என் எண்ணமெல்லாம், அவர்கள் பாத்திரத்தில் உணவைக் கொட்டிவிட்டு என்னை மழையிலிருந்து தற்காத்துக்கொள்வதன் மீது மட்டுமே இருந்தது. ஆனால், என்முன் நின்ற மனிதர்களும் மாண்பிற்குரியவர்கள்; நான் எத்தகைய மரியாதைக்குரியவனோ அதே அளவுக்கு அவர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் உணரவில்லை. ஆம், அந்தச் சிறு மழைச்சாரல் நிச்சயம் என்னைப் பெரிதாய்ப் பாதித்திருக்காது. அதேநேரத்தில் நான் அந்தக் குழந்தைகளை உரிய மரியாதையுடன் நடத்தியிருந்தால், அது அவர்களின் உள்ளத்தில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும்.
மனிதர்
என்ற ஓர் அடையாளம் போதும், ஒரு மனிதரை மனிதராக மதிப்பதற்கு. வேறு எந்த அடையாளமும் தேவையில்லையே! இந்தப் புரிதல் நிச்சயம் அந்த இடைவெளியைக் களையும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அது எனக்கு மன அமைதியையும் தெளிவையும்
தந்தது.
ஞானிகள் தரும்
உள்ளொளிகள்
இன்னும்
சற்று ஆழமாய்ச் சிந்திக்கும்போது, இது நான் ஒன்றும் புதிதாய் அறிந்துகொண்ட ஞானமல்ல; சமூகத்தின் வெவ்வேறு நிலையில் உள்ளவர்கள் இதை ஏற்கெனவே கூறியுள்ளார்கள் என்ற தெளிவு கிடைத்தது. அவற்றுள் சிலவற்றை இங்குப் பகிர விரும்புகின்றேன்:
• “மனித வாழ்வின்
மதிப்பு, சாதனை அல்லது செல்வத்தில் இல்லை; அது உயிர் என்றதிலேயே உள்ளது.” - மகாத்மா காந்தி
• “ஒருவரின் மதிப்பு,
அவர் பிறந்த சமூகத்தில் அல்ல; அவர் ஒரு மனிதராக இருக்கின்றதில்தான்.” - பாபாசாஹேப் அம்பேத்கர்
•
“அனைத்து மனிதர்களும் மனிதராகப் பிறந்த காரணத்தினாலே, ஒரே மரியாதைக்குரியவர்களாக இருக்கின்றனர்.” - நெல்சன் மண்டேலா
• “மனிதர்களுக்கு மரியாதை
என்பது அவர்கள் பலன் தருகிறார்களா இல்லையா என்பதால் அல்ல; அவர்கள் மனிதராக இருப்பதாலே வழங்கப்பட வேண்டியது.” - மார்த்தா நஸ்பாம் (Philosopher)
• “மனிதனின் பண்பும்
மரியாதையும் அவர் கடவுளின் உருவிலும் ஒப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளதில்தான்
அடங்கியுள்ளது.” - கத்தோலிக்கத் திரு அவைப் போதனைகள் (Catechism of the Catholic Church), பிரிவு 1700
இடைவெளி தகர்ப்பிற்கான
மாற்று
வழிகள்
என்முன்
நின்றவர்களை, என்னைப் போன்ற சக மனிதனாகப் பார்த்தால்
எப்படி அங்கிருக்கும் இடைவெளி குறையலாம்? என நம்முள் ஒரு
கேள்வி எழலாம். இதுபோன்ற சூழல்களில் இடைவெளியை ஏற்படுத்துவது பொருளாதாரப் பாகுபாடு மட்டுமன்று, சக மனிதரும் மாண்புடையவரே
என்பதை உணர மறுப்பதே! என்முன் நின்ற குழந்தைகளை மாண்பு நிறைந்த சக மனிதர்களாகப் பார்த்திருந்தேன்
என்றால், அங்கு அந்த இடைவெளியே இருந்திருக்காது. அவர்களைப் பாதிக்காத அந்த மழை என்னையும் பாதித்திருக்காது. மாறாக, அவர்களின் வாழ்க்கை நிலை என்னை வெகுவாகப் பாதித்திருக்கும்.
மழையைத்
தவிர்த்துப் பேருந்தில் ஏறுவதைவிட, என்முன் நிற்கும் மனிதத்தின் பசி, அவர்களின் கண்களில் இருந்த உணவிற்கான ஏக்கம், இன்னும் கொஞ்சம் அதிகமாக எனக்குக் கிடைத்துவிடாதா? என அவர்களின் உள்ளத்தில்
இருந்த ஆவல், பின்னர் அங்கிருந்த வெற்றுப் பாத்திரத்தில் ஏதேனும் இருந்துவிடாதா! எனப் பார்த்த அவர்களின் ஏக்கம் என அவர்களின் வாழ்க்கை
நிதர்சனம் என் உள்ளத்தில் ஆழமாய் உறைந்திருக்கும். இவை யாவற்றிற்கும் நான் பதில்தர முடியாமல் போயிருந்தாலும், எனது அணுகுமுறையால் அவர்கள் என்னைப் போன்ற மனிதர்கள்தான், அவர்கள் மாண்பிற்குரியவர்கள் என அவர்கள் தெளியும்படி
அவர்களின் உள்ளத்தில் உணர்த்தியிருப்பேன். நானும் இந்தச் சிந்தனையில் ஆழப்பட்டிருப்பேன். அவ்வாறு நடந்திருந்தால் அங்கு உணவு கொடுக்கப்பட்டிருக்காது; மாறாக, பகிரப்பட்டிருக்கும்.
மனிதத்தை மதிப்போம்
கொடுப்பது
ஒருவரை உயர்த்தி, மற்றவரைத் தாழ்த்துகிறது. இங்கு ஒருவர் மட்டுமே பெறுகிறார். பகிர்வது, இருவரையும் சமமாக வைக்கிறது. இங்கு இருவருமே பெறுகின்றனர். ஆம், தவறிவிட்டேன்; ஆனால், அதே இடத்தில் நிற்க விரும்பவில்லை. இனி நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும், மனிதத்தைக் காணத் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள்?