news-details
ஆன்மிகம்
நல்ல நிலத்தில் விழுந்த விதை (நீங்கா நினைவுகள் – 7)

என் இதயத்திற்கேற்ப உழைப்பாளர்களை நான் உங்களுக்கு அளிப்பேன்என்ற இறைவார்த்தைக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் 2013, மார்ச் 13-ஆம் நாளன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருத்தந்தை பிரான்சிஸ். இறந்தாலும் நம் நினைவுகளிலும் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இயேசுவின் நற்செய்தி விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் இந்த நவீன காலகட்டத்தில் தன் செயல்கள் வழியாக மெய்ப்பித்தவர்.

கொடையாகப் பெற்றீர்கள், கொடையாக வழங்குங்கள்என்ற இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி தன் வாழ்வால் நற்செய்தி அறிவித்தவர். வரலாற்றையே மாற்றி எழுதும் வகையிலும், தான் தேர்ந்தெடுத்த முதல் நாளிலே இவரைப் பற்றி அறிய வியக்கும் வகையில் முந்தைய திருத்தந்தையர்களின் பெயரைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையின் வடிவமாக, அமைதியின் தூதுவராக வாழ்ந்து காட்டிய புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தும் காட்டினார்.

தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டுப் போரால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னைக் காணவந்த அந்நாட்டு மன்னரின் காலடியில் மண்டியிட்டுப் போரை நிறுத்தும்படி மன்றாடினார். இஸ்ரேல்-பாலஸ்தீனம், இரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக அமைதிக்கான போர்க் குரல் எழுப்பியவர் திருத்தந்தை பிரான்சிஸ்திருத்தந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட மாளிகை, ஆடம்பர உடைகள், காலணிகள், உணவுகள் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தாமல், பணியாளர்களின் பணியாளராக, எளிமையின் சின்னமாக, ‘நான் ஒரு பாவி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்என்று தலையைத் தாழ்த்தி வணங்கியபோது உலகமே வியப்புற்றது.

ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கின்றீர்கள் (யோவா 12:14) எனும் வாக்கிற்கிணங்க, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளிகளான பெண்கள், ஆண்கள், சிறைக்கைதிகள், கைவிடப்பட்டவர்கள் என ஏழைகளின் பாதங்களைக் கழுவிகிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்என்று முதன்முதலில் நிரூபித்துக்காட்டியவர்.

காணாமல் போன ஆட்டைத் தேடிச்சென்ற நல்லாயனைப்போல சமூகத்தில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட காயப்பட்டோரைத் தேடிச்சென்று காயங்களுக்கு மருந்திடுவதே அருள்பணி என்றும், அருள்பணியாளர்கள், துறவிகள் தங்களது நிறுவனங்களை விட்டு வெளியேறி, எளியோர் மத்தியில் அன்பைப் பகிர்வதே மேன்மையான மேய்ப்புப்பணி என்று வாழ்ந்து காட்டியவர்.

தற்கால சூழலில் கேள்விக்குள்ளான சில அறநெறிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர். “வெவ்வேறு பாலின இயல்புகளைத் தீர்ப்பிட நான் யார்? கடவுள் மட்டுமேஎன்று குறிப்பிட்டவர். “நற்கருணை என்பது தூயவருக்கு அளிக்கப்படும் பரிசு அன்று; மாறாக, பலவீனமானவர்களுக்கும் அளிக்கப்படும் சக்தி வாய்ந்த மருந்து மற்றும் ஊட்டச்சத்துஎன்று கூறி உயர்ந்து ஓங்கிய மாமனிதர்.

திரு அவையில் நிகழும் பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு மட்டுமே சிறப்பு இருக்கைகள் தரப்பட்டிருக்கும். ஆனால், அருள்சகோதரிகள், பெண்கள் இதில் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அமர்த்தப்படுவார்கள். பெண்களைப் பங்குகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க யோசிக்கும் இந்தக் காலகட்டத்தில், முற்போக்குச் சிந்தனையாளரான நம் திருத்தந்தை பிப்ரவரி 2021-இல் பொதுச் செயலகத்தின் இரண்டு துணைச் செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நந்தினி பென்னாட்டை நியமித்தார். 2025, சனவரி 6-இல் சகோதரி பிரம்பில்லாவைப் பத்திதான் பேராலய முதல்வராகவும், சகோதரி இராபில்லா பெற்றினேன் அவர்களை நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராகவும் பதவியேற்க வைத்தார். இவ்வாறு பெண்களை மாண்புடன் நடத்தி திரு அவையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தார். திரு அவையின் மையம் பொதுநிலையினர். அவர்களுக்கே நம் பணி. அவர்களுக்காகவே நாம் அழைக்கப்பட்டு இருக்கின்றோம் என்று பொதுநிலையினரை முன்நிறுத்தி, பொதுநிலையினருக்கும் நிர்வாகப் பொறுப்பை வழங்கிய முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இறைவனின் தாயான அன்னை மரியாவைத் தன் வாழ்விலும் தாயாக ஏற்று, அவரை அன்பு செய்து எல்லாத் திருத்தந்தையர்களும் புனித பேதுருவின் பேராலயத்திற்குள்தான் அடக்கம் செய்யப்படுபவர் என்ற நிலையை மாற்றி, தான் எப்பொழுதும் செபம் செய்யும் சாந்தா மரியா பேராலயத்தில் மிகவும் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல் திருத்தந்தை.

உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்என்ற இறைவார்த்தைக்கிணங்க இந்த 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இறந்தாலும், மக்களின் மனங்களில் திரு அவையின் கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரம் கொண்டவர். ஏழை எளிய மக்களை, ஒதுக்கப்பட்டுள்ளோரை அரவணைப்பதில் எளிமையும் தாழ்ச்சியும் கொண்டு வாழ்ந்தவர். இவர் மாமனிதர், வாழும் புனிதர், சிறந்த நல்லாயன், நீதியின் திருத்தந்தை, ஈகையின் திருத்தந்தை, நம்பிக்கையின் திருத்தந்தை மற்றும் மதங்களைக் கடந்து எல்லார் உள்ளங்களிலும் இடம்பெற்ற திருத்தந்தை இறந்தும் வாழ்கிறார்.