news-details
கவிதை
சிந்தி ‘ய்யா’

ஒவ்வொரு

சுதந்திர தினத்தின்போதும்

கொடி மட்டுமே

கம்பத்தின் உச்சியில்

சுதந்திரம் என்னவோ

பாதி கம்பத்தில்தான்...!

 

அன்று

சுதந்திர தாகம் கொண்டோரின்

தொண்டைக் குழிகள்

இன்னமும்

அடிமை இந்தியர்களின்

இரத்தத்தால்தான்

நனைகின்றன...!

 

அன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபத்தானவைகள்

என்றுணர்ந்து

வெட்டி வீசினோம்...

இன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபரணம்போல்

அணிந்துகொண்டால்

எப்படி அறுத்தெறிய...?

 

சுதந்திரம் கிடைத்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்

பாரத மாதா எழுபத்தொன்பது ஆண்டுகளாகவே

தனது கண்ணீரைத்

துடைக்கும்படியான

ஒரு குழந்தையை

ஏன் பெற்றெடுக்கவில்லை

என்பது கேள்விக்குறிதான்...!

 

இன்னமும்

துப்பாக்கிச் சத்தத்தில்

பதறி எழும்

குழந்தைகளிடம்

எப்படிச் சொல்ல

நாம் சுதந்திர நாட்டில்தான்

வாழ்கிறோம் என்பதை....?

 

இந்தியாவின்

நீர்நிலைகள் கூட

சில இந்தியர்களின்

தாகம் தீர்க்காமலே

கடலுக்குள்

சங்கமிக்கும் சோகத்தை

யாரிடம் சொல்லி அழ....?

 

தீபகற்ப நாட்டில்

தனித்தனித் தீவுகளாக வாழும்

சுதந்திர இந்தியர்களை

மூழ்காமல் காக்க

மீண்டுமோர்

அந்நியப் படையெடுப்பு

வேண்டும் என்பதே

நிதர்சனமான உண்மை...!

 

பழைய

காலடித் தடங்களையும்

அழிக்காத

புதிய இந்தியாவின்

பாதையில்தான்

காந்தியின் கைத்தடியும்

பாதுகாப்பைத் தரும்....!

 

பெருந்தலைவர்கள்

கண்ட கனவெல்லாம்

பலிக்கும்படி

இனியாவது

விழித்துக்கொள்ளட்டும்

என் இந்தியா....!

 

ஒரே குடையின்

கீழே இருக்கட்டும்

என் பாரதம்....!

அதற்காகத்

துருபிடித்த

கைப்பிடிக் கம்பிகளை

மாற்றக்கூடாது

என யார் சொன்னது...?

சிந்திப்போம்!