கறுப்பு தினத்தை
(ஆகஸ்டு
10) நினைவுகூர தமிழ்நாடு ஆயர்
பேரவையின்
தலித் பணிக்குழுத் தலைவரின் சுற்றறிக்கை
அன்புக்குரியவர்களே,
பட்டியல்
இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் தலித் பணிக்குழுவின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியலமைப்பு
‘பட்டியல் சாதிகள் ஆணை’ கையெழுத்திடப்பட்டு 74 ஆண்டுகள் நிறைவடையும் இந்நாள் தலித் கிறித்தவர்களுக்கும் தலித் இஸ்லாமியர்களுக்கும் மதம் காரணமாக, பட்டியல் சாதியினராக (SC) அடையாளப்படுத்தப்படுவது
அநியாயமாக மறுக்கப்பட்டதைக் குறிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் குடிமை உரிமைகள் மனு (Civil Rights Petition) 180/2004 நிலுவையில் உள்ள
போதிலும், இந்தக் கொடுமையான அநீதி தொடர்கிறது. இவ்வேதனையை வெளிப்படுத்தவும், அரசியலமைப்பு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதைக் கண்டித்தும் அமைதியான முறையில் நாம் போராட்டம் நடத்த விரும்புகிறோம். இந்த இக்கட்டான சூழலில் அரசின் கவனத்தை ஈர்க்க கறுப்பு தின நிகழ்வுகளை ஆகஸ்டு 10, 2025 அன்று மேற்கொள்ள அன்போடு வேண்டுகிறோம்.
இந்த
ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. எனவே, ஒவ்வொரு பங்கு ஆலயத்திலும் முக்கியத் திருப்பலிக்குப் பிறகு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நாம் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து வலியுறுத்த வேண்டுகிறோம்.
ஆகவே,
அனைத்து ஆலயங்களிலும் கிறித்தவ வீடுகளிலும் கறுப்புக் கொடிகளை ஏற்ற ஏற்பாடு செய்யவும், பரந்த சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் தலைவர்களைக் கொடி ஏற்றுவதில் பங்கேற்க அழைத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். அனைத்துப் பங்கு ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களில் பங்குத்தந்தைகள் அல்லது நிறுவனத் தலைவர்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றி இந்நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
நம் போராட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில், ஆயர் மறைமாவட்டத் தலைமையகம் அல்லது பேராலயத்தில் தனிப்பட்ட முறையில் கறுப்புக் கொடியை ஏற்றிடவும் அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே, 2025 ஆகஸ்டு 11 அன்று மறைமாவட்டப் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் ஆணையச் செயலாளர், தலித் பிரதிநிதிகளுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர்களைச் (MPs) சந்தித்து,
தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
அதிகபட்சப்
பங்கேற்பை உறுதிப்படுத்தும் வண்ணம், பல்வேறு குழுக்களைத் தயாரிக்கவும், அனைத்துக் குருக்கள் மற்றும் துறவறத்தார்களின் ஆதரவைப் பெறவும், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் செயலாளர் ஓர் ஆயத்தக் கூட்டத்தைச் (தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இருவர் உடனும்) சாத்தியமான இடங்களில் ஏற்பாடு செய்யவும், இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையர் ஆகியோருக்கு விரிவான மனுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிக்கவும் வேண்டுகிறோம். மேலும், அனைத்துக் கூட்டங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஒதுக்கீட்டிற்குள்
தலித் கிறித்தவர்களுக்கு 4.6% உள்ஒதுக்கீடு கோரும்
நமது கோரிக்கைக்கு ஆதரவாக முடிந்தவரை பல கையொப்பங்களைச் சேகரிக்கவும்
கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக,
தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களுக்குப் பட்டியல் சாதியில் அடையாளப்படுத்தப்படுவதில் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து, இந்திய அரசுக்கு நாம் இடைவிடாமல் நினைவூட்ட வேண்டும். இந்த முயற்சியில் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது உறுதியான ஆதரவையும், பட்டியல் சாதியில் பிறந்து துன்பப்படும் கிறித்தவர்களுடன் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு குருக்கள், துறவறத்தார் மற்றும் நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மக்கள் அதிக அளவில் பங்கேற்க தீவிரமாக ஊக்குவிக்குமாறும் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.