‘நம் வாழ்வின்’ என் அன்பு வாசகப் பெருமக்களே!
இயேசுவின்
இனிய நாமத்தில் வாழ்த்துகள்! தமிழ்கூறும் நல்லுலகில், தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையின் தனிப்பெரும் வார இதழாக 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நம் வாழ்வு’ இவ்வாண்டு, 2025 - இல் தனது பொன்விழாவைக் கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!’ என்னும் இலட்சிய வேட்கையோடு தனது அடுத்தப் பரிணாம வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது!
தமிழ்நாடு
கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கென்று தனி நாளிதழ் ஒன்று வெளிவர வேண்டும் என்ற பலருடைய கனவும் ஆவலும் எண்ணமும் ஏக்கமும் இன்று நனவாகியிருக்கிறது! இன்றைய பொருளாதாரச் சூழலில் நாளிதழை அச்சிடுவதும், அதை அன்றாடம் தங்கள் கைகளில் கிடைக்கும் வண்ணம் பரவலாக்கம் செய்வதும் மிகப்பெரிய சவால் என்ற சூழலில், ஒவ்வொரு நாளும் பல வண்ணத்தில் நான்கு
பக்கம் வடிவமைக்கப்பட்டு ‘நம் வாழ்வு – மின்னஞ்சல் நாளிதழ்’(Nam Vazhvu E-newspaper) இம்மாதம் ஆகஸ்டு 15-ஆம் நாள் முதல் வெளிவரவிருக்கிறது!
திருத்தந்தையின்
வத்திக்கான் நிகழ்வுகள், செய்திகள், ஆசிய-இந்திய-தமிழ்நாடு ஆயர் பேரவையின் செய்திகள், கிறித்தவர் சிறுபான்மையினர் உரிமைகள் சார்ந்த உலக-இந்திய-தமிழ்நாடு சமூக அரசியல் களத்தின் செய்திகளையும், ஒவ்வொரு மறைமாவட்டச் சிறப்புச் செய்திகளையும், திருத்தலங்கள் சார்ந்த நிகழ்வுகளையும் தாங்கி இன்றைய கணினி உலகின் எண்ணிமத் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்றவாறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அன்றாடச் செய்திகளைத் தாங்கி வரவிருக்கிறது!
‘நம் வாழ்வு’ வார இதழுக்கும், ‘கல்விச் சுரங்கம்’
மாணவர் மாத இதழுக்கும் தாங்கள் பேராதரவு நல்குவதுபோல, இந்த ‘நம் வாழ்வு - மின்னஞ்சல்’ நாளிதழுக்கும்
பேராதரவு தந்திட தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகத்தின் சார்பாக உங்களை அன்போடு வேண்டுகிறேன். இம்முயற்சியை முன்னெடுக்க அனுமதி தந்து ஊக்கப்படுத்திய தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், ஏனைய ஆயர் பெருமக்களுக்கும், இம்முயற்சி செயல்வடிவம் பெற பேராதரவும், வழிகாட்டுதலும் தந்து உடனிருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் எம் அச்சு ஊடகப் பணியகத்தின் தலைவர் மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இப்பெரும்
முயற்சிக்கு தமிழ்நாடு கத்தோலிக்க இறைமக்கள் குறிப்பாக, எண்ணிமத் தொழில்நுட்பத்தில் இரண்டறக் கலந்திருக்கும் இளைய தலைமுறையினர் பேராதரவு தருவதுடன், அன்றாடம் தங்களைத் தேடி வரும் இந்த ‘நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழை’ மற்றவரோடும் பகிர்ந்து நம் வாழ்வின் வளர்ச்சியில் பங்கெடுக்க அன்போடு அழைக்கின்றேன்! ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் நமது ‘நம் வாழ்வு’ வார இதழின் மற்றும் மின்னஞ்சல் நாளிதழின் தொடர்பாளர்களாகப் பணியாற்ற விருப்பமிக்க, தன்னார்வமிக்க இளையோர், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த
மின்னஞ்சல் நாளிதழ் ஒவ்வொரு நாளும் தடையின்றி வெளிவருவதற்கு ஒவ்வொரு மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பாளர்களாக (PRO), மறைப்பணி
நிலைய இயக்குநர்களாக, மறைமாவட்ட இதழின் முதன்மை ஆசிரியர்களாகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள், இருபால் துறவற சபைகள் வெளிக்கொணரும் இதழ்களின் ஆசிரியர்களாகப் பணியாற்றும் துறவியர், திருத்தலப் பத்திரிகைகளின் பொறுப்பாளர்கள் என யாவரும் இப்பெரும்
முயற்சிக்குக் கரம் கொடுத்திட அன்போடு வேண்டுகிறேன். தங்களைச் சூழ்ந்து நிகழும் சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் கள நிகழ்வுகளைச் செய்திகளாக்கி namvazhvu.enewspaper@gmail.com என்ற
மின்னஞ்சலுக்கும்,
8248411795 என்ற புலனத் தொடர்பு எண்ணிற்கும் புகைப்படத்துடன் அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்!
வாருங்கள்
இணைந்து பயணிப்போம்! கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!
- முதன்மை ஆசிரியர்