விண்ணைக் குறித்த சிந்தனையும் ஆர்வமும் பழங்காலம் முதல் மனிதனோடு சேர்ந்து பயணித்து வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளாக விண்ணின் இரகசியங்களைத் தொழில்நுட்பத் துணையோடு அறியும் எண்ணமும் இவைகளோடு சேர்ந்துகொண்டது.
மனிதன்
விண்ணில் ஆராய்ச்சிக்கோள் நிலையங்கள் அமைத்து, பூமியைச் சுற்றிவரச் செய்யலாம். நிலவில் கால் பதிக்கலாம். செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளிக் கலங்களை அனுப்பலாம். ஆனால், ஏன் இன்றுவரை நாம் விண்ணை நோக்கும் பார்வையாளர்களாகவே இருக்கிறோம்? என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இவையெல்லாம் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தன் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்கென்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. இன்றளவில், இவ்வுலகில் வாழும் எந்த உயிரினமும் விண்ணைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் விண் விரிந்துகொண்டேயிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி. நம்மைச் சுத்தமாக, பின்னர் வீட்டைச் சுற்றி, நாட்டைச் சுற்றி, கடலையும் சேர்த்து உலகளவில் தூய்மைக்கு முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம். பூமியின் மூன்றில் ஒரு பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளது. கடல்களைத் தூய்மையாக வைப்பதில் பல முயற்சிகளும் ஆய்வுகளும்
மேற்கொண்டாலும், இன்றுவரை உலகளவில் கடல்கள் மறைமுகமாகக் கழிவுகளுக்கு உறைவிடமாக இருப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை. எப்போது விண்வெளி ஆராய்ச்சி ஆரம்பமானதோ அன்றிலிருந்து தூய்மைக்கு உறைவிடமாக இருந்த பூமியின் சுற்றுப்பகுதி ஒவ்வோர் ஆண்டும் ஏதோ காரணத்திற்காக ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களால் நிரப்பப்பட்டு வருவதைக் கூர்ந்து நோக்குவதையன்றி வேறு வழியில்லாமல் இருக்கிறோம்.
விண்வெளி மண்டலங்கள்
நாம்
வாழும் பூமியைச் சுற்றி ஐந்து மண்டலங்கள் இயற்கையின் அரண்களாக உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பூமியைச் சுற்றிப் படர்ந்துள்ளது. இந்த மண்டலங்கள் சூரியக் கதிர்களிலிருந்து நாம் வாழும் பூமியைப் பாதுகாப்பாக வைக்க உதவுகின்றன.
விண்மீன்கள்
நிலவில்லாத
இருண்ட இரவில் வானத்தை நோக்கினால் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் சில கூட்டமாகக் காணப்படுவதைப் பார்க்கலாம். திரட்சியும் (mass), வாயுவும் கொண்ட விண் பொருள் (celestial object) இயல்பாக ஒளிரும்
தன்மை கொண்டிருந்தால் அது விண்மீன் எனப்படும். விண்ணிலிருக்கும் பல கோடி விண்மீன்களில்,
மிகவும் சிறிய விழுக்காடே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இந்த விண்மீன் ஒளி பூமியை வந்தடைய பல நூறு ஆண்டுகள்
கூட ஆகலாம்.
விண்மீனிடமிருந்து
ஒளி வெளிப்பட்ட பிறகு ஏதோ காரணத்தால் வெடித்துவிட்டால், அது இல்லாமல் போகும். எனவே, நாம் பார்க்கும் அனைத்து விண்மீன்களும் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே. ஒருவேளை இல்லாத விண்மீனின் ஒளியைக்கூட இப்போது நாம் பார்த்து இரசிப்பவர்களாய் கூட இருக்கலாம். சூரியனும் ஒரு விண்மீன்தான்; இது ஏனைய விண்மீன்களைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு பூமிக்கு அருகிலிருக்கிறது. விண்மீன்கள் வாயுக்களான எரியும் பந்து போன்றவை. விண்மீன்களின் ஒளி அதன் திரட்சியைப் பொறுத்திருக்கும்.
விண்மீன் கூட்டங்கள்
(Constellations)
விண்மீன்களின்
தோற்றம் என்பது அவற்றை நாம் பூமியிலிருந்து பார்க்கும் இடம், நேரம், வருடம் என்ற கால அளவைப் பொறுத்தது. வானில் காணப்படும் விண்மீன் கூட்டங்கள் கற்பனையின் உருவங்களே. 1919-ஆம் ஆண்டு அகில உலக விண் வெளிக்கழகம் (International Austronomical union)
88 விண்மீன் கூட்டங்களை அடையாளப்படுத்தி, அவைகளுக்குப் பெயரும் அறியப்பட்டது. நம் அன்றாட வாழ்க்கையில் அறிமுகமான ‘இராசிகள்’
என்றழைக்கப்படும்
12 விண்மீன் கூட்டங்களும் இதில் அடங்கும்.
வால் நட்சத்திரங்கள்
வானில்
தோன்றும் சில விண்மீன்களை ‘வால்நட்சத்திரம்’ என்று
அழைப்பதுண்டு. இதன் வால் பகுதி வாயுவிலானது. அதன் பாதையில் பயணிக்கும் போது ஓர் இடைவெளிக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சில நூறு, பலநூறு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கொருமுறை என்று பூமிக்கருகில் வருவது இயற்கை. இவ்வாறு 1986-ஆம் ஆண்டு ‘ஹேலி’
(Halleys) என்ற
வால்நட்சத்திரம் பூமிக்கருகில் வந்தபோது நாம் பார்க்க முடிந்தது. இந்த வால்நட்சத்திரம் இதோடு 70-80 ஆண்டுகளுக்குப்பின் 2061-இல் பூமிக்கருகில் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, ஆதி மனிதன் வாழ்ந்த கற்காலத்திற்கு முன் தோன்றிய
வால்நட்சத்திரம்
2020-ஆம் ஆண்டு பூமிக்கருகில் வந்ததென்று வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். C/2022 E3 ZTF என்று
அடையாளப்படுத்தப்பட்ட
இந்தப் பச்சை நிற வால்நட்சத்திரத்தின் அடுத்தச் சுற்று 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு என்று கணிக்கப்படுகிறது.
சிறுகோள்களும்
எரிகற்களும்
(Astroids and meteoroides)
சிறுகோள்கள்
என்பவை கிரகங்களின் வரிசையில் சேர்ந்தவை அல்ல; வால்நட்சத்திர வகையுமல்ல; சூரிய மண்டலத்தின் உள்சுற்றில் வலம் வரும் ஒருவகையான கனிமப் பாறையும் பனிக்கட்டியுமான சூழலற்ற, ஒழுங்கற்ற உருவம். செவ்வாய்-யூபித்தர் (Mars-Jupiter) கிரகங்களுக்கிடையில்
இவை அதிகளவில் வலம் வருகின்றன. இச்சிறு கோள்கள் தங்கள் சுற்று வளையத்தில் உடைச்சல்களாக உருவாகி, பாதை தவறி ஏதோ காரணத்தால் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் வாய்ப்பு ஏற்படும்.
அப்படி
ஏறக்குறைய 10 கி.மீ. குறுக்களவு
கொண்ட பெரிய கோள் ஒன்று (cretaceous-
Palaeocene extinction) 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்ததால் முக்கால் (3/4) பகுதி உயிர்வாழ் இனங்கள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 2024, ஆகஸ்டு 7-ஆம் தேதி 10 மீட்டர் விட்டமுள்ள இவ்வகை சிறுகோள் பூமிக்கருகில் வந்ததை ‘நாசா’ நிறுவனம் கண்டறிந்தது. இதற்கு ‘2024 PT5’ என்று
பெயரிட்டுள்ளது.
விஞ்ஞானிகளின்
கூற்றுப்படி ஆயிரக்கணக்கான இவ்வகை சிறுகோள்கள் வந்து செல்வது வாடிக்கை. பல மனிதப் பார்வைக்கு
அகப்படுவதில்லை. இப்போது வந்திருக்கும் ‘2024 PT5’ திரும்ப
2055-இல் பூமிக்கருகில் வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
செயற்கைக்
கோள்களினால் பூமிக்கு ஏதாவது ஆபத்து விளையுமா? என்ற நோக்கில் இவைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்வது தேவை என்று கூறப்படுகிறது. மேகமூட்டமில்லாத திறந்த வானில் இரவு நேரங்களில் பார்க்கும்போது ஓர் ஒளிக்கீற்று போன்று திடீரென்று தோன்றி மறைவதைப் பார்க்கலாம். வானில் பல சிதறுண்ட கற்கள்
வழி தவறி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் வேகத்தில் உரசி எரிவதால் அந்த ஒளி காணப்படுகிறது. இது ‘எரிநட்சத்திரம்’ அல்லது
‘மீடியார்’ (Meteoroide) என்றழைக்கப்படுகிறது. இக்கற்கள் வளிமண்டலத்தைக் கடந்து பூமியில் விழும்போது ‘மீடியோரைட்’ எனப்படுகிறது.
எரிக்கற்கள் என்பவை பாறையிலான கனிம கற்கள், சிறு கோள்களைவிட சிறிதானவை, சூரியனைச் சுற்றி வருபவை.
நாம்
வாழும் பூமி சூரிய மண்டலத்திலிருந்தாலும், பிற கிரகங்களுடனும் விண்மீன்களுடன் பயணிப்பதுடன் எண்ணிலடங்காத சிறு கோள்கள் என்று வானலோக அனைத்துப் பொருள்களுடனும் சேர்ந்து சுற்றி வருகிறது.
(தொடரும்)