news-details
சிறப்புக்கட்டுரை
எதிர்நோக்கின் திருப்பயணத்தில் வரலாறு படைக்கும் மகளிர்! (செப்டம்பர் 8, 2025, பெண் குழந்தைகள் விழா)

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகத் திரு அவைச் சமூகம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த யூபிலி ஆண்டில், திருப்பயணிகளுள் ஓர் அங்கமாகத் திகழும் பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு வழிகாட்டி, அவர்களை ஒளியின் பாதையில் பயணிக்க வைக்க இந்த ஆண்டு பெண் குழந்தைகள் தின விழாவை நாம் பொருளுள்ள வகையில் கொண்டாடவிருக்கிறோம்.

பெண் குழந்தைகளை உடல், உள்ளம், உணர்வு ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சியுள்ளவர்களாக, நம்பிக்கையுள்ளவர்களாக, பொறுப்புணர்ச்சியுள்ளவர்களாக, பாதுகாக்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயல்பாகவே பல்வேறு ஆற்றலும் வலிமையும் உள்ள உறுதியும் அமையப்பெற்ற பெண் குழந்தைகள் பல்வேறு காரணங்களினால் கண்டுகொள்ளப்படாத நிலை பரவலாகி வருகிறது.

குழந்தைகளின் பொருள் சார்ந்த தேவைகளுக்காகவும் கல்வி வாய்ப்புகளுக்காகவும் இன்றைய பெற்றோர்கள் பொருளாதார ரீதியான தேடலில் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. பெற்றோர்களின் உடனிருப்பு, உணர்வுரீதியான அவர்களது தேவைகளைக் கண்டுகொள்ள நேரமின்மை குடும்பங்களில் காணப்படுகிறது.

திருவிவிலியக் காலம் தொட்டு இன்றளவும் பெண்கள் சாதனைகள் பல படைப்பதற்குப் பல தடைகளைத் தாண்டிவர வேண்டியிருந்தது. இக்காலப் பெண் குழந்தைகளும் சரித்திரம் படைப்பதற்குப் பல தடைகளும் இடையூறுகளும் இருந்தபோதிலும், அவர்களுக்கு வாய்ப்புகளும் வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன. இவர்கள் தங்களுக்குள் புதைந்துகிடக்கும் ஆற்றல்களை, திறன்களை வெளிக்கொணர, தங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள, திருப்பயணிகளாகிய நாம் எத்தகைய செயல்பாடுகளைச் செய்யவிருக்கிறோம்?

அதிகாரப் பகிர்வு, முடிவெடுக்கும் திறன், கல்வி, பாதுகாப்பு, சமூகப் பார்வை, சமூக அக்கறை, உளவியல் சார்ந்த அவர்களுடைய தேவைகள் ஆகியவற்றில் அவர்கள் குறைவுபடாமல் வாழ்வதற்கு எனப் பல தளங்களில் பெண் குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. இந்த உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உழைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோர் அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்.

மரியா என்ற ஒப்பற்ற ஒரு பெண் உருவாகக் காரணமாயிருந்த அவரது பெற்றோர் அன்னா- சுவக்கீன்போல சிறுவயது முதலே பெண் குழந்தைகளைச் சமூகப் பார்வையோடு கடவுளின் பராமரிப்பில் ஒப்படைத்து வளர்க்க வேண்டிய முன்மதி ஒவ்வொரு பெற்றோருக்கும் வேண்டும். நமது மேய்ப்பர் இயேசு, வழிதவறிய ஆட்டினைத் தேடிப் பரிவு காட்டியதுபோல, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நாம் ஒவ்வொருவரும் பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற ஒரு தூண்டுகோலாய் இருப்போம்; ஒன்றிணைந்து செயல்படுவோம். யூபிலி ஆண்டிற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் குழந்தைகள் நலன் விரும்பிச் செயல்படுவோம். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற வாக்கியம் அன்னை மரியாவுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொருத்தமாக உள்ளது. “குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். “ஓடி விளையாடு பாப்பா என்றார் மகாகவி பாரதியார். அன்று பெண் குழந்தைகள் தட்டாங்கல், பல்லாங்குழி, கும்மியடித்தல், ஊஞ்சல் ஆடுதல், கோலாட்டம், சுழற்சிக்காய் விளையாட்டு, கில்லி, நொண்டி, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி உடலையும் மனத்தையும் வளர்த்தார்கள். இன்று அலைப்பேசி விளையாட்டில் பெண் குழந்தைகள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். குழந்தை மைதானத்தில் விளையாடினால் அதன் சட்டை மண்ணாகும், குழந்தை அலைப்பேசி விளையாடினால் குழந்தையே மண்ணாகும் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்குரிய விளையாட்டுகளை அவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத திரு அவையை நாம் உருவாக்கி, அவர்கள் இறைநம்பிக்கையிலும் ஞானத்திலும் உலக அறிவிலும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் திரு அவைக்கும் உண்டு.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ள ‘POCSO’ சட்டம் சற்று ஆறுதலாக இருந்தாலும், இன்றும் பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வு போன்ற சமூகக்கேடுகள் தொடர் நிகழ்வாக  அமைந்து, பெற்றோர்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்ப்பது ஒரு சவாலான காரியமாக, பெற்றோர்களும் பரிதவிக்கக்கூடிய காலச் சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பெண் குழந்தைகள் தேவதைகளாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

அன்பும் பரிவும் நிறைந்த இவர்கள், குடும்பத்தில் பாசத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

அறிவிலும் திறமையிலும் ஆற்றல் படைத்தவர்களாக கல்வி, கலை, விளையாட்டு, அறிவியல், மருத்துவம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் கால்பதித்துச் சாதனையும் சரித்திரமும் படைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கத்தோலிக்கத் திரு அவை இறைமக்கள், திருப்பணியாளர்கள், துறவறத்தார், கிறித்தவ நம்பிக்கையாளர்கள் உலகத்திலும் இந்தியாவிலும், ஏன் தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு முன்னெடுப்புகளைத் திரு அவை செய்து வருகிறது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை உள்ளம் சார்ந்த மனநிலையை மாற்றம் காணச்செய்து துணிவோடும் துடிப்போடும் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் பெற வழிகாட்டுகிறது.

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கி நம் குழுந்தைகள் நலன் காப்போம். எதிர்கால இந்தியத் தூண்களை நேசித்து சரித்திரம் படைக்கச் சான்றாக இருப்போம். 

கடவுள் தம்மையே ஒரு நகலெடுத்து

மண்ணில் தவழவிட்டார்

கள்ளமில்லாத இந்த மழலையின் வடிவில்!’

பெண் குழந்தையைப் பேணுவோம்; பாதுகாப்போம்; எதிர்நோக்கின் திருப்பயணத்தில் சரித்திரம் படைக்கும் திருமகளாக மகிழ்வோடு வாழ வழிகாட்டுவோம்.

அருள்சகோதரி லூர்து பெர்நதெத் SAT, மாநிலச் செயலர், தமிழ்நாடு ஆயர் பேரவை பெண்கள் பணிக்குழு

மேதகு ஆயர் T. சகாயராஜ், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை  பெண்கள் பணிக்குழு