news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (17-08-2025) எரே 38:4-6,8-10; எபி 12:1-4; லூக் 12:49-53

திருப்பலி  முன்னுரை

இயேசு நம் அனைவரையும் ஒன்றிணைக்க வந்தவர் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில்மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்என்று இயேசு கூறுகிறார். தீயின் மூன்று குணங்கள்: 1. அழிப்பது, 2. தூய்மையாக்குவது, 3. புதியதாக மாற்றுவதுஇயேசு சமுதாயத்தில் உள்ள தீவினைகளை அழித்து அன்பை, அமைதியை, மகிழ்ச்சியை, சமத்துவத்தை, நம்பிக்கையை, கருணையைப் பற்றவைத்து இவ்வுலத்தைப் புதியதாக மாற்ற வந்தவர்; இறுதிவரை அப்பணியைச் செய்து மக்கள் ஞானவெளிச்சம் பெற உழைத்து உயிர்விட்டவர். இயேசு தரும் நெருப்பால் புடமிடப்படும் நாம் நம்மிடமுள்ள வேற்றுமைகளை, எதிர்மறை எண்ணங்களை, மனிதத்தைச் சிதைக்கும் செயல்களை விட்டுவிடவேண்டும். இயேசு என்ற தீயால் தூய்மையாக்கப்பட்ட நாம், நமது நம்பிக்கையான வார்த்தைகளால், வாழ்க்கையால், அணுகுமுறையால் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியை ஏற்றுவோம்நமது குடும்பத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கின்ற சந்தேகம், ‘நான்என்ற ஆணவம், புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை போன்றவற்றை அணைத்துவிட்டு அன்பு என்ற ஒளியைப் பற்றவைப்போம். சமுதாயத்தில் உள்ள நல்லவைகளையும் அல்லவைகளையும் பிரித்தறிந்து, நல்லவற்றை வளர்த்தெடுக்க முயற்சி செய்வோம்புறத்தை அழகுப் பொருள்களால் அழகு செய்யும் நாம், அகத்தை இயேசு என்ற ஒளியால் தூய்மை செய்து, ஒளியின் மக்களாக வாழ்வோம்இந்த மண்ணுலகில் இயேசு பற்றவைத்த அன்பு என்ற தீயை அணையவிடாது காக்கவும், அன்பின் தூதுவர்களாக நாம் வாழவும் வரம் வேண்டி  இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

கடவுளின் பணியாளர்களாக விளங்கும் அனைவருக்கும் கிடைப்பது போராட்டமும் துன்பமும் நிறைந்த வாழ்வு! கடவுளின் வாக்கைச் சமரசமின்றி அரசனுக்கு எடுத்துரைத்தவர் எரேமியா. இதன் காரணமாகப் பலமுறை சிறைப்பட்டார்; நாடு கடத்தப்பட்டார்; பாழுங்கிணற்றில் உயிரோடு கட்டி இறக்கப்பட்டார். இறுதிவரை ஆண்டவரின் வாக்கை அறிவித்துக்கொண்டே இருந்தார். இருப்பினும் இறுதிவரை உண்மையில் நிலைத்து வாழ அழைக் கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்களாகிய நாம் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், பிரிவினைகள், பிளவுகள் வரும்போது பின்வாங்கிவிடாமல் தொடர்ந்து முன்னே செல்ல வேண்டும். இயேசுவின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்கப்பட்ட நாம், தீவினைகளைக் கண்டு அஞ்சாமல் துணிந்து பயணிக்கவேண்டும். இயேசுவின்மீது  கண்களைப் பதியவைத்து, எந்த நிலையிலும் அவரின் உண்மைச் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பணிவாழ்வில் தனிமை, சோர்வு, மனக்குழப்பம், இடையூறுகள் ஏற்படும்போதுஅழைத்தவர் கைவிடமாட்டார்என்ற நம்பிக்கையில் இவர்கள் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமக்காக உயிரைக் கொடுத்த ஆண்டவரே! இறை சந்நிதியில் கூடியிருக்கும் நாங்கள் அனைவரும் அன்பு, மகிழ்ச்சிமன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், நம்பிக்கை போன்ற ஒளியை எமது குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒளிர்விக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைப் பாதுகாக்கும் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் ஏழை மக்களின் நலனைக் கண்முன் கொண்டு, சட்டங்கள் இயற்றத் தேவையான ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் கொடுத்துக் காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் அனைவருக்கும் நல்ல வேலையையும் வாழ்க்கைத் துணையையும் கொடுத்துக் காத்திடவும், உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையிலும் அறிவிலும் நாளும் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.