news-details
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 21, 2025, ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) ஆமோ 8:4-7 1திமொ 2:1-8 லூக் 16:1-13 - இயேசுவே நம் ஒப்பற்ற செல்வம்!

கடவுள் இந்த உலகைத் தமது சாயலில் மிக அழகாகப் படைத்தார். ஆனால், மனிதனோ செல்வத்தைப் படைத்தான். தன் படைப்பாம் செல்வத்தை வைத்து உலகை ஆட்டிப் படைக்க விரும்புகின்றான். இன்று செல்வத்தை நம்பியே தங்கள் செல்வாக்கை நிலைப்படுத்த விழைகின்றனர் பலர். செல்வம் தங்களைப் பாதுகாக்கும் என்ற போலி நம்பிக்கையில்தான் பலரும் பொழுதைக் கழிக்கின்றனர். செல்வம் நமக்காகவேயன்றி, நாம் செல்வத்திற்காக இல்லை என மனம் உணர மறந்துபோகிறோம். படைத்தவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செல்வத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும்போது அதற்கு அடிமையாகிறோம். வாழ்வில் நாம் பெற்ற உயர்ந்த செல்வம் நம் நெஞ்சம் வாழும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் நாயகருமான கடவுளுமே. ஒப்பற்ற செல்வம் இயேசுவைத் தவிர வேறு எவர்? (பிலி 3:8). இன்றிலிருந்து நாளை காணாமல்போகும் செல்வத்தின்மீது பற்றுக்கொண்டு, அதற்கு அடிபணிந்து வாழ்தல் மடமையும் அறிவீனமுமேயன்றி வேறேது?

பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் பயன் கருதாப் பாசத்தோடு நம்மை அரவணைக்கும் கடவுளைப்போல, ஏழை எளியோரை அரவணைத்து மதித்து நடக்க அழைப்புவிடுக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு தவறான வழிகளில் பணத்தைக் குவித்து, வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் அழித்தொழிக்க நினைக்கும் செல்வந்தர்களைக் கண்டிக்கிறார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆடு மேய்த்தும், அத்திமரம் வளர்த்தும் பிழைப்பை நடத்தியவர் ஆமோஸ். தென்னாடான யூதாவைச் சார்ந்த இவர், வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று இறைவாக்குப் பணியை மேற்கொண்டார். ஆமோஸ் இஸ்ரயேல் மக்களிடம் இறைவாக்குரைக்கக் கடவுளால் அனுப்பப்பட்டபோது, அவர்கள்  பொருளாதாரத்தில் வேரூன்றியிருந்தனர். வளமும் வாழ்வும் செல்வரிடமும் வலியோரிடமும் மட்டுமே இருந்தன. அவர்களின் ஆன்மிகச் சக்தி அதல பாதாளத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. சிலை வழிபாடு எனும் தீயப்பழக்கம் வானம் வரையிலும் விரிந்து பரந்திருந்தது. இந்நாட்டின் சமயத் தலைநகரம் பெத்தேல் தீமைகளின் மையப்புள்ளியாக இயங்கிச் செயல்பட்டது. தங்கள் செல்வாக்கைப் பறைசாற்ற அரண்மனை போன்ற வீடுகளை வானளாவாகக் கட்டி நிமிர்ந்து பார்த்தார்கள். அடிப்படை வசதிகளுடன் வீடு கட்டுவது நியாயம். ஆனால், செல்வப் புகழைப் பறைசாற்றும் நோக்குடன் வீடு கட்டுதல் என்பது கடவுள் தந்த வளங்களை வீணாக்குவதே! இந்தப் போக்கு இப்போதும் இவ்வுலகில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஓய்வுநாள் போன்ற திருநாள்களில்கூட இறைவாக்கினைக் கேட்டுச் சிந்திக்கும் பொறுமையில்லாமல், தங்கள் வியாபாரத்திலே ஈடுபட்டு இலாபத்தை இஸ்ரயேலர் குவித்து வந்தனர். கள்ளத்தராசு, சிறியனவாக்கப்பட்ட எடைக்கல் போன்றவற்றால் பொருள்களின் அளவுகளைக் குறைத்துக்கொண்டு விருப்பம்போல் விலையேற்றிக் கொள்ளை இலாபம் ஈட்டினர் (8:5). தவிட்டைக்கூட தானியம் எனக் கூறி மனச்சாட்சியை விற்றுக் கலப்படம் செய்து கொள்ளையடித்துக் குபேரர்கள் ஆயினர் (8:6). ஏழை எளிய மக்களை அடிமைகளாக விற்றனர் (8:6). சமயக் கொண்டாட்டங்களுக்கான வெளிப்புற ஆடம்பரங்களைப் பகட்டுடன் கொண்டாடுவதற்காக நிதிகளைக் கொட்டிக் குவித்தனர். தங்கள் தவறை மறைப்பதற்காக, திருவிழாக்களையும் தேரோட்டங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்தனர். வேடங்களிலும் பக்தி முழக்கங்களிலும் மயங்கி விடுபவரல்லர் இறைவன்! (5:23)

செல்வத்தில் மூழ்கி நிச்சயமற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த தம் சமகாலத்துப் பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கத்திடம் ‘கடவுளைத் தேடு; நீ வாழ்வாய் என அழைப்பு விடுக்கிறார் ஆமோஸ்.  அதுமட்டுமன்றி, கடவுளின் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவது நாட்டுக்கே அழிவை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறார்.

ஆமோஸ் இஸ்ரயேலின் அநீதியான செயல்களைச் சாடுகின்ற அதேவேளையில், நேர்மையற்று தவறான செயல் புரிந்த வீட்டுப்பொறுப்பாளரை இயேசு இன்றைய நற்செய்தியில் பாராட்டுகின்றார். இயேசு கூறிய இந்த உவமை புரிந்துகொள்வதற்குக் கடினம், ஆயினும், இவ்வுவமை வழியாக இயேசு நமக்குக் கூறும் பாடம் குறித்துச் சிந்திக்கவேண்டும். ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர் உவமையில், நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியை இயேசு பாராட்டினாலும், நேர்மையற்ற செல்வத்தை நீதியான முறையில் எப்படிக் கையாள்வது? அழியா விண்ணகச் செல்வம், பணிவிடையின் முக்கியத்துவம் குறித்துச் சில முக்கியப் பாடங்களை இயேசு நம்முன் வைக்கின்றார்.

முதலில், “நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் (16:9) என்கிறார் இயேசு. ‘நேர்மையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நண்பர்களைத் தேடிக்கொள்வது எப்படி முறையாகும்?’ என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை. எனினும், இக்கூற்றில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். லூக்காவின் பார்வையில் எல்லாச் செல்வமும் நேர்மையற்றதுதான். அதாவது, தேவையில் இருக்கும் பிறரின் தேவையை நிறைவேற்றாது, சேர்த்து வைக்கப்பட்ட செல்வம் எல்லாமே தவறான செல்வம்தான். எனவே, நேர்மையற்ற செல்வம் கொண்டிருப்போர் இறையாட்சியில் நுழைய முடியாது (மத் 19:24; மாற் 10:25; லூக் 18:25). எனினும், அவர்களும் இறையாட்சி சமூகத்தில் இணைய ஒரு வாய்ப்புள்ளது. ஆம், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்வது. அதாவது, பிறரின் தேவைகளைக் கண்டுகொள்ளாது சேர்த்து வைக்கப்பட்ட செல்வத்தை - நேர்மையற்ற செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும். “முன்மதி மற்றும் படைப்பாற்றலை நல்லவற்றிற்கும் மற்றவருக்குப் பணிபுரியவும் பயன்படுத்தப்படலாம் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார் (மூவேளைச் செப உரை, 18.09.2022). தொடர்ந்து “இவ்வுலகப் பொருள்களை நமக்கு மட்டுமே என்றில்லாமல், பிறருக்கும் பயன்படுத்தும் உடன் பிறந்த உணர்வின் உறவுகளால் வெளிப்படுத்தப்படும் அன்பே அவசியம் என்பார் திருத்தந்தை. இக்கருத்தில் ஐயன் வள்ளுவன் தம் ஈரடியில்,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள (குறள் 241)

எனப் பாடுகிறார். தவறான செயல்கள் புரியும் இழி மக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம். ஆனாலும், அந்தச் செல்வம் அருள் செல்வத்துக்கு ஈடாகாது. நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போதுதான் அவற்றின் உண்மைப் பயன் வெளிப்படும்.

இரண்டாவது, இயேசு ‘மிகச்சிறியவற்றில் நம்பத்தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பர் (16:10) என்கிறார். நம்பகத்தன்மை மற்றும் நேர்மை திரு அவையின் தலைமைப் பண்புக்கான தகுதி எனலாம். நேர்மையற்ற செல்வத்தைக்கூட கையாள்வதிலேயே நம்பகத்தன்மை இல்லையெனில் அவர்கள் இறையாட்சி சமூகத்தில் எந்தப் பொறுப்புக்கும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். செல்வத்தை முறையாகக் கையாள்பவரே அதாவது, செல்வத்தைப் பகிர்ந்து அளிப்போரே இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகவும், அச் சமூகத்தில் பணிப்பொறுப்பையும் ஏற்கத் தகுதிபெற முடியும். பிறருக்கு நன்மை செய்யாதவர் தனக்கும் நன்மைசெய்ய முடியாதவர் என்பதுதான் இங்குப் புரிந்துகொள்ளும் அழகான செய்தி.

மூன்றாவது, செல்வத்தைப் பற்றி மிக பொதுவான இறையியல் செய்தியைத் தரும் இயேசு, “ஒருவரால் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது (16:13) என்கிறார். செல்வம், நமக்குப் பணிவிடை செய்யவேண்டும்; அதற்கு மாறாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும் அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார். அதாவது, செல்வமே எல்லாம் என்று அதற்காகவே நாம் வாழ்ந்தால், அதுவே நம் ‘கடவுளாகி உண்மைக் கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும் என எச்சரிக்கின்றார்.

செல்வத்தின்மீது நாம் கொள்ளும் மிதமிஞ்சிய பற்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தி விடும். காசையும் கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம். அவற்றிற்குக் கோவில் கட்டவோ, அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே இயேசு ஆணித்தரமாகக் கூறும் ஆலோசனைகள். கடவுளின் கரம் பற்றும் முயற்சி நம் நம்பிக்கையை உயர்க்கச் செய்யும். வேதனை, விரக்தி, கண்ணீர், கவலை எனத் துன்பங்கள் கழுத்திற்குமேல் போனாலும் கடவுளைத் தேடும்போது வாழ்வுக்கான வழி பிறக்கும்.

நிறைவாக, அ) நாம் செல்வத்தை ஈட்டுவதிலும் பயன்படுத்துவதிலும் நேர்மையான எண்ணம் கொண்டிருப்போம். ஆ) அழியும் இவ்வுலகச் செல்வத்தைக்கொண்டு விண்ணுலக அழியாச் செல்வத்தை ஈட்டிக்கொள்ள வேண்டுமெனில், இருப்பவற்றை இல்லாதவர்களிடம் கொடுத்து மகிழ்வோம் (லூக் 13:33). இ) எல்லாவற்றிற்கும் மேலாகப் பாசத்தோடு நம்மைப் பராமரிக்கும் இறைவன் ஒருவருக்கே பணிவிடை புரிவோம். இயேசுவே நம் ஒப்பற்ற செல்வம்!