கடந்த வாரம், உள்ளூர் தொடங்கி உலகளாவிய ஊடகங்கள் வரையிலும் எதிரொலித்த செய்தி, சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு’ (Shanghai Cooperation Organisation - SCO) பற்றியதாகும். சீனா, இந்தியா, இரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாட்டுத் தலைவர்கள் கூடிய இந்த மாநாடு, அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையால் உலக அரங்கில் பெரும் ஊடக வெளிச்சம் பெற்றிருந்தது.
1996-இல் சீன
மக்கள் குடியரசு, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், இரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்திய இந்த அமைப்பு 2001, ஜூன் 15 அன்று அண்டை நாடுகளோடு ஒன்றிணைந்து பரஸ்பர பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக இந்த முயற்சியை முன்னெடுத்தது. அவ்வாண்டு உஸ்பெக்கிஸ்தானும்,
2003, செப்டம்பர் 19 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டன. ஆயினும், 2017, ஜூன் 9 அன்று அஸ்தானாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக இவ்வமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ஏறக்குறைய
20 நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு, இன்று புவி சார்ந்த மக்கள்தொகையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கூட்டமைப்பாகத் திகழ்கிறது. உலக மக்கள்தொகையில் 40% கொண்டுள்ள இவ்வமைப்பு,
உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% பங்கு வகிப்பது
வியப்பளிக்கிறது. பாதுகாப்பு, அரசியல், பொருளாதார ஒத்துழைப்பு என முன்னெடுக்கப்பட்ட இந்த அமைப்பு,
இன்று போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களைப்
பரஸ்பர ஒப்பந்தத்தில் உள்ளடக்கிய வளர்ச்சி நிலைகளை முன்னெடுக்கிறது.
இந்தியா,
இரஷ்யா, சீனாமீது கடுமையான இறக்குமதி வரி விதித்துள்ள அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில், இந்த நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் உறவுகளை வலுப்படுத்தவும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்கவும் ஒன்றுகூடுவதாகக் கணிக்கப்பட்டது. அதில் உண்மை இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் இந்தியா எதிர்கொள்ளும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.
‘பயங்கரவாதம்’ என்பது
ஓர் அரசியல் நோக்கத்திற்காகப் பயத்தை உருவாக்கும் வகையில் வன்முறையைப் பயன்படுத்துவது என்றும், ‘பிரிவினைவாதம்’ என்பது
ஒரு குறிப்பிட்ட குழு, தான் வசிக்கும் பகுதியிலேயே ஒரு புதிய தேசத்தை உருவாக்க முயற்சிப்பது என்றும், ‘தீவிரவாதம்’ என்பது
ஒரு நாட்டின் அரசியல் அமைப்பின் முக்கிய அணுகுமுறைகளுக்குப் புறம்பாக வெறுப்புப் பிரச்சாரங்களையும் தீய எண்ணங்களையும் விதைக்கக்கூடிய செயல் என்று நாம் பொருள் கொண்டாலும், வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டதுபோலத் தோன்றும் இவை மூன்றும், அடிப்படையில் ஒன்றோடு ஒன்று நெருங்கியத் தொடர்புடையவையே!
அண்மையில்,
பகல்காமில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா எதிர்கொண்ட சூழலில், “பயங்கரவாதம் என்பது தனியொரு நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத் தல் மட்டுமல்ல; மாறாக, அது அனைத்து மனிதகுலத்திற்குமான சவால். எனவே, அதை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளுக்கிடையே ஒற்றுமை என்பது மிக முக்கியமானதாக அமைகிறது”
என்று இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
“பகல்காம் தாக்குதலால் ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள்; பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாக
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் இந்தியாவின் மனச்சாட்சியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மாறாக, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாட்டுக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதத்திற்கு
உலகளாவிய அளவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அழைப்பு விடுக்கும் இந்தியப் பிரதமர், நம் நாட்டிற்கு உள்ளேயே ஒரே மதம், ஒரே இனம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் எனப் பன்முகம் சிதைத்து, ஒருமையை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வதையும், இந்து இராஜ்ஜியத்தை, இராம இராஜ்ஜியத்தைக் கட்டியே தீரவேண்டுமெனத் துடிதுடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.
கொள்கைகளில் ஒருவகைப் பிரிவினைவாதம் இருப்பதை ஏனோ? அவர் அறியாமலிருக்கிறார்.
“மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை; எங்களுக்கு எவரிடத்தும் தனிப்பட்ட பகைமை இல்லை; நாங்கள் மனித வாழ்வை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம்; மனிதகுலத்திற்குச் சேவை செய்வதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்வதால் மற்றவர்களை விட நாங்கள் உயர்ந்தே நிற்கிறோம்” என்ற
பகத்சிங்கின் வார்த்தைகள், இந்திய மண்ணில் பன்முகத் தன்மையில் பழகி வாழும் பலருக்கு வாழ்வியல் பாடமாக இருப்பதைச் சிறுமைச் சிந்தனை கொண்டவர்கள் ஏனோ அறியாமலிருக்கிறார்கள்.
வெளிநாட்டு
அச்சுறுத்தலைப் பற்றிப் பேசும் இந்தியப் பிரதமர், உள்நாட்டிலேயே சிறுபான்மையினர், அச்சுறுத்தலில் வாழ்வதை ஏனோ அறியாமலிருக்கிறார். இதுவரை இந்தியா சந்தித்த உள்நாட்டு அச்சுறுத்தல்களில், இன்று சிறுபான்மையினர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்துகள்
அல்லாதோர், மதத்தாலும் இனத்தாலும் சிறுபான்மையினர் எனக் கட்டமைக்கப்பட்டுக் குறிவைக்கப்படுவதையும் அன்றாடம் அவர்கள் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதையும் ஏனோ அவர் அறியாமலிருக்கிறார். இந்திய நாட்டில் சமூக வாழ்விலும் பொருளாதார நிலைப்பாட்டிலும் எல்லா வகுப்பினரும் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆதிக் குடியினர், நிலவுடைமையில் உரிமை கொண்ட பூர்வக் குடிமக்கள், ஏழை விவசாயிகள், சிறு-குறு தொழில் செய்வோர் என யாவரும் இன்று
சமூகப் பொருளாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சமூகத்தின் அடிவேர்களில் இன்று விஷம் பாய்ச்சப்படுகின்றது.
ஏழை-பணக்காரர் என்ற சமூகப் பிரிவினைவாதம் இன்று பா.ச.க.
ஆட்சியில் உச்சம் தொட்டிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது. “இன்றைய ஆட்சியானது, அடிப்படையில் தரகர் கூட்டத்தின் ஆட்சியாகிவிட்டது. அரிய சிறப்புடைய நிலத்தையும் கனிம வளத்தையும் மனித வளத்தையும் அதிக ஏலத்தொகைக்குக் கேட்கும் எவருக்கும் விற்கத் தயாராகிவிட்டனர்; இந்த ஆட்சியாளர்கள் உடனடி அற்ப நலன்களுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டனர்; எந்தக் கொள்கையையும் கைகழுவ இவர்கள் தயார்; எந்த முதலீட்டாளரையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகி விட்டனர்; உள்நாட்டுச் சந்தையைச் சிறிது சிறிதாக அவர்களுக்கு வெட்டிக் கூறு போட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டனர். இயற்கை வளங்கள் யாவற்றையும் தாரைவார்க்கத் தொடங்கிவிட்டனர்; அரிதினும் அரிதான நகர்ப்புற நிலங்களில் நீண்ட காலம் பயன்பாட்டு உரிமையை வழங்க முன் வந்துவிட்டனர்” என்று
அன்று சீனாவின் நிலைமையை வில்லியம் ஹிண்ட்டன் தன்னுடைய ‘சோசியலிசத்தில் வர்க்கப் போராட்டம்’
என்ற நூலில் குறிப்பிட்டது, இந்திய மண்ணில் பா.ச.க.வின் ஆட்சி தொடங்கிய நாளிலிருந்து முற்றிலும் ஒன்றித்துப் போய்விட்டது.
வெளிப்புறப்
பயங்கரவாதத்தைக் கண்டு பதபதைக்கும் பாரதப் பிரதமர், பிரிவினைவாதத்தால் உள்நாட்டில் கூறுபோடப்படும் சமூக, பொருளாதார, வாழ்வியல் கட்டமைப்பைச் சரிசெய்வதைப் பற்றி எந்த மன்றத்தில் மனம் திறக்கப் போகிறார்?
‘அகிலத்தின் பார்வையில்
அர்த்தநாரியாய்
அறிவித்துக் கொண்டாலும்
உள்ளுக்குள்
இருக்கத்தான் செய்கிறது
ஊர்த்தவ
தாண்டவ வன்மம்!’
என்ற
கவிஞர் சுமதி பெனடிக்ட் அவர்களின் வரிகள்தான் எனக்கு இங்கு நினைவுக்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்