news-details
சிறப்புக்கட்டுரை
அன்பால் அனைத்தையும் வெல்வோம்!

வாழ்வில் துன்பங்கள், சவால்கள் அனைத்தையும் இன்று நாம் கடந்துவரும் ஒரே பாதை அன்பின் பாதை என்பதே புனித தெரேசாவின் ஆன்மிக இலக்கணம்.

மனித வாழ்க்கையில் துன்பமும் சவால்களும் இரவு-பகல் போன்றவை. மொழியும்-இசையும் போன்றவை. இவை ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதில்தான் அதன் சிறப்பு மிளிர்கிறது. அதுபோலத்தான் நமது வாழ்வில் வரும் துன்பமும் சவால்களும் தவிர்க்க முடியாதவை.

ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சவால்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றை நாம் எந்த மனநிலையோடு அணுகினோம், அணுகுகின்றோம், அணுகுவோம் என்பதில்தான் நமது வாழ்வு பக்குவப்படுகிறது, பண்படுகிறது. மனித வாழ்வு அன்பால் இயக்கப்படும்போது வெறுப்பும் வன்முறையும் கார்கால மேகத்தின் இடையே தோன்றி மறையும் வானவில்லைப்போல் மறைந்தொளியும் என்பதற்கு, புனித சிறுமலர் தெரேசாவின் வாழ்வு நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

புனித சிறுமலர் தெரேசா 1873-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள லிஸ்யு நகரில் செல்வ செழிப்பு மிகுந்த தம்பதியருக்கு 9 நவரத்தினங்களில் ஒன்பதாவது இரத்தினமாக மலர்ந்தாள். இப்புவியில் சிறுவயதிலேயே தனது தாயை இழந்தபொழுதிலும், தனது சகோதரிகளால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்பட்டாள். ‘எனக்கு அனைத்தும் வேண்டும்என்ற தெரேசாவின் வார்த்தை அவரது இளமைப் பருவத்திலும் தொடந்தது. அன்பே தனது அழைத்தல் எனப் புரிந்துகொண்ட நம் புனிதர், 15 வயதில் லிசியே நகரின் கார்மேல் மடத்தில் சேர்ந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்த பக்தியும் இறைநம்பிக்கையும் கார்மேல் மடத்திலும் தொடந்தது. தன்னை வெறுத்தோர், காயப்படுத்தியவர்கள்மீது வார்த்தைகளால் அவள் போர் தொடுக்கவில்லை; மாறாக, சிறு புன்னகையால் அகிம்சை போர்புரிந்து வெற்றியும் கண்டாள். பாவிகளின் மனந்திரும்புதலுக்காகவும் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும் செபித்தாள்.

படிப்பறிவாள்; அவள் பட்டம் பெறவில்லை. மாறாக, தனது மௌன மொழியால் திரு அவையின் மகள் என்ற மாபெரும் பட்டத்தைப் பெற்றாள். திரு அவையின் மேல் தனக்கிருந்த பற்றால் திரு அவையின் இதயத்தில் தான் என்றும் அன்பாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று மொழிந்தவள். ‘மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறோர் ஆயுதம் இல்லைஎன்று மகாத்மா காந்தி கூறுவதைப் போலவும், ‘அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகில் மிகச்சிறந்த பலசாலி நீதான்என்று அன்னை தெரேசா கூறுவதைப் போலவும், அன்பை ஆயுதமாகக் கொண்டு துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் இறைப்பணியாற்றினார் தெரேசா. அந்த 9 ஆண்டுகளும் ஆண்டவருக்காகவே வாழ்ந்தார். இத்தகைய சிறப்புமிக்கப் புனிதையின் முன்மாதிரியைப் பின்பற்றும் நாம் நமது வாழ்வினை இங்குச் சற்று சிந்தித்துப் பார்த்து, அதனைச் சீர்செய்வது மிகவும் சாலச்சிறந்தது.

நாம் வாழும் இந்த உலகம் வெறுப்பு, போட்டி, பொறாமை, பகைமை, பிரிவினை போன்ற தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்ததோ, அதைவிட பன்மடங்கு மக்களின் மனமும்நாம், ‘நாங்கள்என்ற பரந்த மனநிலையில் இருந்து, ‘நான்என்ற குறுகிய வட்டத்தில் கூடாரம் அடித்துத் தங்கி விட்டது. இவ்வாறான சூழலில், அன்பு என்ற அமைதியின் மொழியைக் கொண்டு அணுகுவதே மாற்றத்திற்கான முதல்படி. அன்பு என்பது பலவீனமல்ல; அது மிகப்பெரிய வலிமை. எவ்வாறெனில் நம் புனிதை கூறுவார்: “கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே எனது நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல். அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு.”

இன்பத்திலும் துன்பத்திலும் வறுமையிலும் வளமையிலும் நோயிலும் சாவிலும் இருளிலும் ஒளியிலும் எந்நிலையிலும் அஞ்சாது, இயேசுவில் சரணடைந்து, குழந்தைபோல் அவரது தோளில் சாய்ந்து, குழந்தையாகவே மாறி, இறை அன்பிற்காகவே வாழ்ந்தவர் நம் புனிதை.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் 13 -ஆம் அதிகாரம் முழுவதும் அன்பின் சிறப்பு இயல்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியிருப்பது இதற்குச் சிறந்த சான்று. எல்லா மதமும் மனிதனும் அன்பு என்ற ஒற்றை வார்த்தையில்தான் முழுமை பெறுகிறது. அன்பு இன்று வந்த புதுக்கவிதை அல்ல; மாறாக, தொன்று தொட்டே காவியம் படைத்துள்ளது என்பதற்குப் பின்வரும் சான்றோர்களின் கூற்று சாட்சியம் பகர்கின்றது. வள்ளலார் தனது திருவருட்பாவில் 6-வது அத்தியாயத்தில் அன்பைக் குறித்து அழகாகப் பாடியுள்ளார்:

அன்பே சிவம் என அறிந்தார் அறிவொன்று

அன்பின்றி அமரரோடும் இராதே.

அன்புடையார் எல்லாம் உளரென்பர்

இதுவும் இல்லாரே அல்லாதார் என்பதோர் அறம்

பாடலின் பொருள் அன்பே சிவம் என உணர்ந்தவர்களை உண்மையான அறிவாளிகள், அன்பில்லாதவர்கள் தேவர்கள் கூட இருந்தாலும் இறைவன் அருளைப் பெற முடியாது. இன்னும் சிறப்பாகக் கூற வேண்டுமெனில், நமது தமிழ் மூதாட்டி அவ்வை தனது குரல் வெண்பாவில்

அன்பிற்கினியவொரு இல்லையாம் உயிர்நிலைக்கும் துன்பிற்குத் தானேழும் அணி

பாடலின் பொருள்: அன்பைப் போல இனிமையானது ஒன்றும் இல்லை. அது துன்பங்களைத் தானாகவே பரிகரிக்கக்கூடிய மருந்தாகும். ஆம், இங்கு நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் தலைப்பு இக்குறட்பாவோடு முற்றிலும் பொருந்துகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஎன்ற உலக வழக்குச் சாத்தியமாக வேண்டுமெனில், அங்கு அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். உயிரோட்டமான வாழ்விற்கு உறவுகள் பலப்பட வேண்டும். உறவுகள் உயிரோட்டம் பெற உள்ளொன்று, புறமொன்று பேசித் திரியாமல், பார்க்காத ஒன்றைப் பார்த்தேன் எனக் கூறி பிறரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதும், கேட்காத ஒன்றைக் கேட்டேன் என அடுத்தவரைப் பற்றி அநியாயமாக அறிவிப்பதும்இப்படியும் இருக்கலாம்எனப் பொய்யான ஊகத்துக்கு உறுதுணை புரிவதைக் களைந்து, திறந்த, பக்குவப்பட்ட மனத்தோடு எல்லாரிடமும் அன்பாக, எளிமையாக, பகிர்வு என்ற பண்போடு காயப்படுத்தாத வார்த்தைகளைப் பேசி, ஆணவம் இல்லா அன்பைக் காட்டி வாழ முற்பட வேண்டும்.

எனது இனம், மதம், சாதி என்ற பெயரால் சமூகத்தைச் சீர்குலைக்கும் அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் குழிதோண்டிப் புதைக்க முன்வருவோம். அமைதியில், ஒற்றுமையில், தோழமையில் கூடி வாழ அன்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுப்போம். அகிலத்தை அன்பால் வயப்படுத்துவோம்.