news-details
ஆன்மிகம்
எங்கிருந்தோ வந்த கிரீஜோ (புனித தொன்போஸ்கோவின் ஆபத்துக் கால நண்பன்)

மூன்றடி உயரமும் நீண்ட உடலும் ஓநாய் போன்ற முகத்தோற்றமும் கொண்ட கிரீஜோ, குருவானவர் தொன்போஸ்கோ வெளியே புறப்பட்டபோது வாசலை வழிமறித்துக்கொண்டு படுத்திருந்தது. அவரின் தாயார் மார்கரீத், “பார்த்தாயா ஜான், நீ இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென்று என் மனம் கூறுகிறது. கிரீஜோவும் வழிமறித்துப் படுத்திருக்கிறது. எனவே, இந்த இரவில் தனியே வெளியில் செல்ல வேண்டாம்என்றார். தன் பணி நிமித்தம் முக்கியமான ஒருவரைச் சந்திக்கப் புறப்பட்ட தொன்போஸ்கோ சற்றே யோசிக்கலானார்.

தாயின் வார்த்தைகள், கிரீஜோவின் வழி மறிப்பு இவை இரண்டின் வாயிலாய் இறைவன் தன்னை இந்த இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டவராய் வீட்டினுள் சென்று மற்றப் பணிகளில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அவர் வீட்டின் கதவு தட்டப்பட, திறந்த தொன்போஸ்கோ படபடப்போடு தன் முன்னே நிற்கும் நண்பர் ஒருவரைக் கண்டார். வந்தவர்நல்ல வேளையாக நீர் வெளியே கிளம்பவில்லை. வெளியே இந்நேரம்வரை உம்மைக் கொல்வதற்காகக் காத்திருந்தவர்கள் நீர் வராததனால் ஏமாற்றத்தோடு இப்போதுதான் புறப்பட்டுப் போனார்கள்என்றார். தொன்போஸ்கோவின் உள்ளம் ஆண்டவரை நன்றியோடு நினைத்துப் பார்த்தபோது, கிரீஜோ அவரருகில் வாலாட்டியபடி நின்று கொண்டிருந்ததுகிரீஜோ என்ற அந்த நாயை தொன்போஸ்கோ சந்தித்ததே ஓர் எதிர்பாராத நிகழ்வுதான்.

1852-ஆம் ஆண்டில் ஓர் இரவு நேரத்தில் தொன்போஸ்கோ தனியே தன் மடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தோடு அவர் நடந்து வருகையில், எதிரே தன்னை நோக்கி ஓடிவரும் ஓநாய் முகத்தோற்றம் கொண்ட மூன்றடி உயர நாயைக் கண்டதும் இலேசாக அஞ்சினார். அவரை நோக்கி ஓடிவந்த அந்நாயோசட்டென நின்று ஏதோ வெகுகாலம் அவரிடம் பழகியதைப் போன்று அவர்முன் தன் வாலையாட்டி மகிழ்ச்சியைக் காட்டியபடி அவரைச் சுற்றி வந்தது.

அவர் பின்னே மடம் வரைக்கும் தொடர்ந்துவந்த அந்தப் பிராணியைத் தடவிக் கொடுத்த தொன்போஸ்கோ இத்தாலிய மொழியில் அதன் நிறத்தின் பொருட்டுகிரீஜோஎன்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்தார். வாலை ஆட்டியபடி கிரீஜோ அங்கிருந்து ஓடிப்போனது. அன்று மட்டுமல்லாமல் இரவு வேளைகளில் அவர் தனிமையில் வீடு திரும்பும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்து அவரோடு மடம் வரைக்கும் பாதுகாவலாக உடன் வரும் கிரீஜோவின் துணை தொன்போஸ்கோவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரவு நேரங்களில் அவர் தனியே வீடு திரும்பும்போது அவருக்கு ஆபத்து இருந்தது, அதற்குக் காரணமும் இருந்தது.

கத்தோலிக்கத் திருமறை இத்தாலியில் வெகுவேகமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலம் அது. இத்தாலியில் பினார்டி என்ற இடத்தில் மடம் அமைத்து ஏழைச் சிறுவர்களுக்குக் கல்வியும் தொழிலும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்த தொன்போஸ்கோ, கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளிலிருந்து சிறிதும் வழுவாமல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரின் பிறர்நலப் பணிகளையும் கத்தோலிக்கத் திருமறையின் வளர்ச்சியையும் கண்டு பொறாமையுற்ற எதிரிகள், கத்தோலிக்க மதத்தைப் பற்றித் தவறான, பொருத்தமில்லாத கருத்துகளை வெளிப்படுத்தி அதன் வளர்ச்சியைச் சீர்குலைக்க முயன்றனர்.

இவர்களைக் கத்தோலிக்க மக்கள் எதிர்த்துப் போராடத் தயங்கிய காலத்தில் தொன்போஸ்கோ சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் திருமறையைப் புரிந்துகொள்ளும் வண்ணம் பகைவர்களின் தவறான பிரச்சாரத்துக்குப் பதிலடிக் கொடுக்கும் முகமாக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அனைவருக்கும் வழங்கினார்.

வால்டேசியன்ஸ்என்ற பிரிவினை சபையினர் நயத்தாலும் பயத்தாலும் அவரை மிரட்டிப் பார்த்தனர். அவரோ எதற்கும் அஞ்சாமல், அவர்களுடைய எதிர்ப்புகளுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில்கத்தோலிக்க வாசகம்என்ற பத்திரிகையை வெளியிட்டுக் கத்தோலிக்க மதத்தின் நிகரற்றக் கோட்பாடுகளை, சமய நெறிகளை மக்களுக்கு அறிவித்து இறைமக்களைத் திருமறையில் உறுதிப்படுத்தினார். தன் பிறர்நலப் பணிகளால் மக்களின் இதயங்களைக் கவர்ந்த அவரை ஒழித்துக்கட்ட எதிரிகள் முயற்சித்ததில் வியப்பொன்றுமில்லை. எதிரிகளின் எத்தனையோ தாக்குதல் முயற்சிகளில் தொன்போஸ்கோ ஆண்டவர்மீது கொண்ட பற்றுறுதியால் காப்பாற்றப்பட்டார்.

ஆபத்து அவரைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தது. அதற்காக அவர் தன் பணியின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. ஏழைச் சிறுவர்களுக்காகத் தான் நடத்தும் மடத்தின் வளர்ச்சிக்காகவும், மதம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அப்படியே வெளியே சென்று இரவு நேரங்களில் தனிமையில் அவர் மடத்துக்குத் திரும்பும்போதெல்லாம், எங்கிருந்தோ இந்த கிரீஜோ வந்து  அவருக்குத் துணையாக நடந்தது. ஒரு சமயம் பகைவர்கள் தடிகளோடு தொன்போஸ்கோவைத் தாக்க முயன்றபோதும், மற்றொருமுறை மரத்தின் பின்னால் மறைந்திருந்து துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோதும் கிரீஜோதான் ஆவேசமாக ஓடிவந்து எதிரிகள்மேல் பாய்ந்து அவர்களைத் துரத்தியடித்தது.

இப்படியெல்லாம் உதவும் கிரீஜோ, தொன்போஸ்கோவை மடத்துவரை கொண்டு வந்து விட்டுப் போகும்போது அங்குள்ள சிறுவர்கள் அதற்கு ரொட்டியும் இறைச்சியும் கொடுப்பார்கள். கிரீஜோவோ அவற்றை ஏறெடுத்துப் பார்த்ததில்லை, முகர்ந்தும் பார்த்ததில்லை. “உனக்கு என்னதான் வேண்டும்?” என்று தொன்போஸ்கோ கேட்கும்போதெல்லாம், அவரை மகிழ்ச்சியுடன் நோக்கி வாலையாட்டிக்கொண்டே மடத்தைவிட்டு வெளியேறிவிடும் கிரீஜோ.     

1854-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் மூடுபனியால் இருள் அடர்ந்திருந்த ஓர் இரவு நேரம். பணி நிமித்தம் வெளியே சென்ற தொன்போஸ்கோ தனிமையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இருவர், அவர்மீது பாய்ந்து அவர் வாயைத் துணியால் அடைத்து, போர்வையால் அவர் முகத்தை மூடி அவரைக் கொல்ல முயன்றனர்.  ‘இனி தான் பிழைப்பது அரிதுஎன்று நினைத்துக்கொண்ட தொன்போஸ்கோ இறைவனுடைய உதவியை உள்ளத்தில் வேண்டிய நேரம், அதுவரை கண்ணில் படாதிருந்த கிரீஜோ எங்கிருந்துதான் வந்ததென்று தெரியவில்லை. சிங்கம்போல கோபாவேசத்துடன் அவ்விருவர்மீதும் பாய்ந்தது. அவர்களைக் கடித்துக் குதற ஆரம்பிக்க, பயந்துபோன அவர்கள் தொன்போஸ்கோவை நோக்கி, “ஐயா தொன்போஸ்கோ! உம் நாயை அழைத்துக்கொள்ளும்; இல்லாவிட்டால் எங்களுக்குச் சாவு நிச்சயம்என்று அலறினர்.

ஆண்டவரின் கருணையைப் புரிந்துகொண்ட தொன்போஸ்கோ, கிரீஜோவின் வீரத்தை வியந்த வண்ணம் அவர்களைப் பார்த்து, “நான் கூப்பிட்டுக் கொள்கிறேன். இனி இம்மாதிரி செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி கூறுங்கள்என்றார். அதற்கு அவர்களோ, “இனி உமக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டோம்என ஒன்றாகக் குரலெழுப்பினர். இரக்கம் கொண்ட தொன்போஸ்கோகிரீஜோ! இவர்களை விட்டுவிடுஎன்று சொன்னதும்தான் தாமதம், அந்த இரண்டு பேரையும் விட்டுவிட்டு தொன்போஸ்கோ அருகில் வாலையாட்டியபடியே நின்றது. அவ்விருவரும்தப்பித்தோம், பிழைத்தோம்என்று தலை தெறிக்க ஓடிப் போயினர். தொன்போஸ்கோ கிரீஜோவின் தலையைக் கனிவோடு தடவிக் கொடுத்தார். பேராபத்திலிருந்து தப்பிய அவரை மடம் வரை கிரீஜோ பின்தொடர்ந்து வந்தது.

தங்கள் குருவானவர் தொன்போஸ்கோவைக் காப்பாற்றும் நாய் குறித்து மடத்துச் சிறுவர்கள்இந்த நாய் யாருடையது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று பலமுறை கேட்டனர். தொன்போஸ்கோவால் இதற்குப் பதில் கூற முடியவில்லை.

அந்த நாய் கிரீஜோ எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார்? அதன் வரலாறு என்ன? என்பதெல்லாம் பற்றி அவர் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை அவரால் கண்டறிய முடியவில்லை.

தன்னுடைய ஆபத்துக்காலத்தில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட வாய் பேசமுடியாத நேசமிக்க பாதுகாவலன் என்ற அளவில்தான் அந்த நாய் கிரீஜோவை தொன்போஸ்கோ  அறிந்து வைத்திருந்தார்.