விண்வெளிக் காலம் (Space Age)
விண்வெளிக்
காலம் அதன் கால்பதிப்பை ஏற்படுத்தி, மெல்ல உறுதி செய்து வருகிறதை கடந்த 75 ஆண்டுகளின் நிகழ்வுகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பூமியிலிருந்து செயற்கைக்கோள்கள் பல காரணங்களுக்காகச் செலுத்தப்படுகின்றன. ஆனால், அவை
அனைத்தும் செயலிலிருப்பதில்லை. சில அதன் ஆயுள் காலத்தைக் கடந்தவையாகவும், வேறு சில காரணங்களினால் முழுமையாகவோ, உடைப்பட்டோ, உதிரிப்பாகங்களாகவோ ஒரு வளையம் போன்று பூமியைச் சுற்றிப் படர்ந்து வருகிறது; நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இது
பூமியின் காலநிலை, ஓசோன் படலம் மற்றும் பூமியில் வாழ்வதற்கான சூழல் என்பவைகளுக்கு ஏற்புடைய ஸ்டராடோஸ்பியரைப் பாதிப்படையச் செய்கிறது. இப்போது விண்வெளிக்குச் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள், விண்வெளி ஊர்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காற்றில் இயல்பாக ஏரோசோல் என்ற மாசு திடமாகவோ அல்லது திரவமாகவோ கலந்திருக்கிறது.
பூமியிலிருந்து 10 கி.மீ. உயரத்தில்
பறந்த ஒரு விமானத்தின் முன்பகுதியை ஆராய்ந்து பார்த்ததில் கணிசமான அளவு இப்படலம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை மேலும் ஆராய்ந்தபோது, இவை விண்வெளி ஊர்திகளின் உலோகம் என்றும் தெரியவந்தது.
ஸ்டராடோஸ்பியரில்,
அதாவது முதல் மண்டலத்தில் எப்போதாவதுதான் விமானங்கள் செல்ல நேரிடும். இந்த உலோக ஊடுருவல் இதில் இவ்வளவு என்றால், இன்னும் மேலே உள்ள அடுக்குகளின் நிலையைப் பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். 2023-ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 2900 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. இதனையும் சேர்த்து 14,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. இவைகளில் 80% செய்தித் தொடர்புக்கோள்கள் என்றும், இவைகளில் பெரும்பாலானவை வணிகம் சம்பந்தப்பட்ட கோள்கள் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு
செய்தி என்னவென்றால், 3,500 கோள்கள் செயலிழந்தவைகளாகவும், ஏற்கெனவே நெருக்கமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களோடு மோதல், தானாக வெடித்தல், காலாவதியானவை என்று 120 மில்லியன் உடைச்சல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கான தற்காப்பு வேண்டுமென்றால், கோள்கள் பின்னணியை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கிறது ஐ.நா. சபை.
பூமிக்கு அருகில் (Low Earth Orbit - LEO) உள்ள
கீழ் சுற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் (85%) செயலிழந்த செயற்கைக்கோள்கள்
இருக்கின்றன.
ஏறக்குறைய
22,000 மைல்கள் பூமிக்கு மேலே (Geosynchronous Orbit) உள்ள
சுற்றில் செய்தித்தொடர்பு, காலநிலை இராணுவத் (Missile Defence) தேவைகளுக்குச்
சில செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அவைகளின் சுற்றும், இவைகளுக்கிடையே ஏற்படும் மோதல்களும் விண்வெளிக் கழிவுகளை உருவாக்கி வருகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில், 2030-க்குள் 50,000 செயற்கைக்கோள்கள் விண்வெளிச் சுற்றில் சேர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல குப்பைகளைச்
சேர்ப்பது
யார்?
(Space Debris)
பூமியைச்
சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைக்கோள்கள் வலம் வந்துகொண்டிருப்பதாலும், உலகின் பல நாடுகள் தொடர்ந்து
செயற்கைக்கோள்களைச் செலுத்துவதாலும் நாளுக்குநாள் இவைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. பொதுவாக, செயற்கைக்கோள்களில் சில செயலிழந்தவைகளாக உள்ளன (Malfunctioning). சில
கொடிய காரணங்களுக்கான (nefarious)
பின்னணி கொண்டும் உள்ளன. இவைகளினால் மற்ற கோள்களுக்குத் தீங்கு உண்டாவது மட்டுமன்றி, ஒன்றோடொன்று மோதி அவைகளின் உடைப்புகள் வானில் சுற்றும் நிலையும் ஏற்படுகிறது. சில வழிதப்பி பூமியின் ஈர்ப்புச் சுற்றில் வருவது இயல்பு.
ஐரோப்பிய
விண்வெளி ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இன்றளவில் 40,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் உதிரிகள் (4” மேல்), கட்டுப்பாடில்லாமல் விண்வெளியில் சுற்றி வருகின்றன என்று கூறுகிறது. சில விண்ணில் எரிந்து பூமியில் விழும்போது ஓசோன் மண்டலத்தைத் தாக்கும் அலுமினியம் ஆக்சைட் என்ற இரசாயனப் பொருளை உருவாக்குகிறது.
15 ஆண்டுகளுக்குமுன்
சில ஆயிரம் செயற்கைக்கோள்கள் என்பதாக இருந்த எண்ணிக்கை, இன்று பலமடங்கு அதிகரித்துவிட்டதாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் இன்று இணையதளத் தேவைக்குச் செலுத்தப்பட்டு வருவதால் இதன் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இவைகளின் ஆயுள் காலம் முடிந்தபின் செயலிழந்துதானே சுற்றி வருவதைத் தவிர வேறு வழியில்லை.
எவ்வாறு
கார்பன் வெளியேற்றம் இன்று உலகிற்குத் தீங்கு விளைவிக்கும் சக்தியாக மாறியிருக்கிறதோ, அப்படி வருங்காலத்தில் செயற்கைக்கோள்களின் உதிரிப்பாகங்கள் பூமிக்கு ஒரு தீய சக்தியாக மாறிட வாய்ப்பிருக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியில்
ஏ.ஐ.-யின்
பங்கு
ஏ.ஐ. மனித அறிவாற்றலைக்
கற்கும் இயந்திரம் (Machine Learning - ML) வழியாகத்
தரவுகளைத் தன்னிச்சையாக, சுயமாக ஆய்ந்து நகலி செய்யும் திறன்பெற்றது. இயந்திரங்கள் தானாகப் பயின்றுகொள்ள அல்கோரிதம் வழிமுறை மூலம் கற்கும் இயந்திரம் பயிற்சி அளிக்கிறது. அல்கோரிதம் ஏராளமானத் தரவுகளை உள்வாங்கி, மேம்படுத்திக் கொள்கிறது.
இத்தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி ஓட்டு நரில்லா மோட்டார் முதல் பூமியைச் சுற்றித் தானாக இயங்கிக்கொள்ளும் வானூர்தி வரை ஏ.ஐ. செயலாற்றுகிறது.
துல்லியமாக ஏற்புடையதை மட்டும் இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால் நேரத்தையும் செலவீனத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஏ.ஐ. உதவியாக
உள்ளது. அது மட்டுமன்றி, வானூர்திகள் தானாக இயங்க விண்பாதையில் தடைகளைத் தவிர்த்துத் தன்னிச்சையாகப் பயணிப்பது என்ற இயக்கங்களிலும் பங்காற்றுகிறது.
ஏவுகணை
தொழில்நுட்பத்தில் குறிப்பாக, ஏவுகணை எரிபொருள் நிரப்பும் முறையிலும் ஏ.ஐ. பயன்பாட்டிலுள்ளது.
இப்போதிருக்கும் நெருக்கமான செயற்கைக்கோள்கள் வட்டச்சுற்றில் இன்னும் பல கோள்களை அமர்த்த
கையாளும் திறன் மற்றும் இதுவரை கண்டறியப்படாத கிரகங்களை அடையாளப்படுத்துதல், விண்வெளி மண்டலங்களைப் படம் (Galaxy mapping)
பிடித்தல் போன்ற பிரிவுகளிலும் ஏ.ஐ.யின்
செயலாற்றல் வியக்கும்படியாக உள்ளது.
(தொடரும்....)