news-details
சிறப்புக்கட்டுரை
குழந்தை தெரேசாவின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவை

கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் புனிதப் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால், அது குழந்தை தெரேசாவின் பெற்றோர்களான லூயிஸ் மார்ட்டினுக்கும்-செலி கெரினுக்கும்தான்.

இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். நான்கு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். மற்ற ஐந்து பெண் குழந்தைகளும் துறவிகளாக வாழ்ந்தனர். ஒன்பதாவது குழந்தையாகிய குழந்தை தெரேசா உள்பட நான்கு குழந்தைகள் கார்மேல் மடத்திலும், லெயோனி, சந்திப்பு மடத்திலும் (visitation) சேர்ந்து துறவிகளாக வாழ்ந்தனர். குழந்தை தெரேசாவுக்கு 1925-இல் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு லெயோனிக்குகடவுளின் ஊழியர் (Servant of God) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் அக்டோபர் 18-இல் திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களுடைய பெற்றோர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித லூயிஸ் மார்ட்டின் ஒரு குருவானவராக வாழ விரும்பினார். அவருக்கு இலத்தீன் மொழி மிகவும் கடினமாக இருந்ததால், அவரால் குருவானவராக முடியவில்லை. செலி கெரினும் ஒரு கன்னியர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அவருடைய உடல்நலன் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, திருமணத்திற்குப் பிறகு தனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும், அவர்கள் அனைவரையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அப்போதே கடவுளிடம் வேண்டினார். லூயிஸ் மார்ட்டினும் செலி கெரினும் சந்தித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். பத்து மாதங்களாகத் தாம்பத்திய வாழ்வு வாழாத இவர்கள், ஆன்ம குருவானவரால் அறிவுறுத்தப்பட்டு, தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து ஒன்பது பிள்ளைகளுக்குப் பெற்றோராகின்றனர்.

இவர்கள் அன்னை மரியாமீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் குழந்தைகளையும் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில்மரியஎன்ற அன்னை மரியாவின் பெயரை அனைத்துக் குழந்தைகளின் பெயருக்கு முன்பாகச் சேர்த்துப் பெயர் வைத்தார்கள். அவ்வகையில் குழந்தை தெரேசாவின் திருமுழுக்குப் பெயர்மரிய பிரான்சிஸ் தெரஸ்என்பதாகும். கடவுளுக்குப் பணி செய்ய தங்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை; தங்களின் பிள்ளைகள் அனைவரும் கடவுளின் அழைப்பைப் பெறவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்கள். அதற்காகத் தினமும் இறைவேண்டல் செய்தார்கள். தங்களுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும், அவனை வேதபோதக நாடுகளுக்குப் பணி செய்ய ஆண்டவர் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர்களுக்குப் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். எனினும், அவர்களின் விருப்பம் வீண் போகவில்லை. அவர்களின் கடைசிக் குழந்தை தெரஸ் வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாகும் பேறுபெற்றாள்!

குழந்தை தெரேசாவின் பெற்றோர்கள் துறவியாக வாழ ஆண்டவர் அழைக்காவிட்டாலும், தங்கள் குடும்பத்துக்குள்ளே ஒரு துறவற சூழலை உருவாக்கினர். துறவற சமூகங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் தினமும் நடக்கும். சேர்ந்து இறைவேண்டல் செய்வது, சேர்ந்து உண்பது மற்றும் சேர்ந்து உறவாடுவது. இவை மூன்றும் இவர்களின் குடும்பத்தில் சிறப்பாக நடைபெற்றன.

இந்தப் புனிதத் தம்பதியர் தங்களுடைய வார்த்தைகளால் அல்ல; வாழ்வால் நல்ல தூண்டுதல் தரும் பெற்றோராகத் தங்கள் குழந்தைகளுக்கு முன் வாழ்ந்து காட்டினர். சேர்ந்து திருப்பலிக்குச் செல்வது, திவ்ய நற்கருணை உட்கொள்வது, இறைவேண்டல் செய்வது, ஞானவாசகம் வாசிப்பது, திருவிவிலியம் படிப்பது, தியானிப்பது, மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது போன்றவற்றைச் செய்து, தங்களின் குடும்பத்தை ஒரு குட்டித் திரு அவையாகவே மாற்றினர்.

மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்ற இறைவாக்கை தெரேசின் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின் வாழ்வாக்கினார். தங்களின் வருவாயில் ஒரு பகுதியை நற்செய்தி அறிவிக்கும் ஒரு துறவற சபைக்கு ஆண்டுதோறும் கொடுத்தார்கள். குடிமயக்கத்தால் சாலையோரத்தில் கிடந்த ஓர் ஏழைத் தொழிலாளியைக் கைதூக்கி எழுப்பி, அவரது குடிசையில் கொண்டுபோய் சேர்த்தார். வலிப்பு நோயினால் துன்புற்ற ஓர் ஏழைக்கு உதவி செய்ய தன் தொப்பியைக் கழற்றி பிச்சை எடுத்துக் கிடைத்த போதிய பணத்தை அந்த வலிப்பு நோய்க்காரருக்குக் கொடுத்து உதவினார்.

குழந்தைகள் பொதுவாகத் தாங்கள் கேட்பதைக் காட்டிலும், பார்ப்பதையே பின்பற்றுவர். அந்த வகையில் தங்களின் பெற்றோரிடம் கண்ட இந்த அருமையான கிறித்தவப் பண்புகளைக் குழந்தைகளும் பின்பற்றத் தொடங்கினர். பெற்றோரைப் போலவே அவர்களது குழந்தைகளும் அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியான பக்தியும் கொண்டவர்களாய் வாழ்ந்தனர். ‘ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திரு அவைஎன்று கூறுவதற்குக் காரணம், திரு அவை போன்று ஒவ்வொரு குடும்பமும் ஓர் இறைச் சமூகமாக நம்பிக்கையிலும் அன்பிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதிலும் வளரவேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே. குடும்ப உறவுகளில் திரு அவையின் மதிப்பீடுகள் இடம்பெற வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கும் இடமாக வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு, மன்னிப்பு, பரஸ்பர ஆதரவு இடம்பெற வேண்டும்; ஒருங்கிணைந்து ஒரே பாதையில் செல்லவேண்டும் என்பதே இன்றைய திரு அவையின் நோக்கமாக இருக்கிறது.

திரு அவையில் காணப்படும்நாம் கத்தோலிக்கர்கள்என்ற சேர்ந்த உணர்வு குடும்பத்தில் இருக்க வேண்டும். நற்செய்திப் பகிர்வு ஒவ்வொரு குடும்பத்திலும் இடம்பெறவேண்டும். நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றுபகரக் கூடியவர்களாகக் குடும்பத்தினர் இருக்கவேண்டும். குடும்பத்தில் இறைநம்பிக்கை, அன்பு, திரு அவையின் போதனைகள், விழுமியங்கள் வளர்த்தெடுக்கப்படுவதாலும் வாழப்படுவதாலும்குடும்பம் ஒரு குட்டித் திரு அவைஎன்று அழைக்கப்படுகின்றது. குழந்தை தெரேசாவின் குடும்பத்தில் மேலே கூறப்பட்ட அனைத்துமே காணப்பட்டன என்பதற்கு தெரேசா எழுதியஓர் ஆன்மாவின் வரலாறுசான்றாகும்.

குழந்தை தெரேசா கடைசிக் குழந்தை என்பதனாலேசின்ன ராணிஎன்று அவரது தந்தை அன்பொழுக அழைத்தார். அனைவருமே இவர்மீது பாசமழை பொழிந்தார்கள். குழந்தைக்குரிய தன்னன்பு, பிடிவாதம் போன்ற குறும்புத்தனங்கள் இருந்தாலும், தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தைத் தன் சிறுவயதிலிருந்தே தெரேசா வளர்த்துக்கொண்டார்.

குடும்பத்தில்தான் மானுட ஆன்மா, வாழ்வின் பொருள் பற்றிய பார்வை எல்லாம் முளைத்தெழுகிறதுஎன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறுகிறார். பெற்றோர் வாழ்வின் உரிமையாளர்கள் இல்லையென்றாலும், அவர்கள் மூலம்தான் இறைநம்பிக்கை, எதற்காக வாழவேண்டும் என்ற வாழ்வின் பொருள் போன்றவை பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்குப் பரவுகிறது மற்றும் தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் பகிரப்படுகிறதுதெரேசாவின் பெற்றோர் இதற்கு ஒரு சான்று என்று கூறினால் அது மிகையாகாது.

தெரேசாவின் பெற்றோர் ஒருபோதும் குழந்தைகளைச் செபிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலை செய்ததில்லை. தெரேசாவே தன் சுயசரிதையில் இதைப் பதிவு செய்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளோடு சேர்ந்து செபிப்பது குழந்தைகள் அருள்வாழ்வில் வளர மிகவும் தேவை என்பதை இச்செயல் உணர்த்துகிறது. தன்னுடைய நான்காவது வயதிலேயே தெரேசா தன் தாயை இழந்தாலும், தன் அப்பாவின் அன்புள்ளத்தில் அன்னைக்குரிய அன்பை அனுபவித்தார். தன் அக்காமார்கள் அனைவரும் தன்னலம் கருதாத அன்பும், தாய்க்குரிய கனிவும் தன்மீது காட்டி வந்தார்கள் என்பதையும் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தெரேசாவின் பெற்றோர் ஆழமான இறைநம்பிக்கையிலும் நற்கருணை சந்திப்பிலும் இறைவேண்டலிலும், இறைவனை நோக்கிய பயணத்தில் இணைந்து செயல்படுவதிலும் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து வாழவைத்ததால் அவர்களின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவையாக, நம் அனைவரின் குடும்பத்திற்கும் வழிகாட்டியாக அன்றும் இன்றும் என்றும் திகழ்கிறது.